உலக போரை ஆரம்பித்த ஈரான்? மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்கு எங்கு ராணுவ தளங்கள் உள்ளன! வெளியான லிஸ்ட்
தெஹ்ரான்: ஈரான் மீதான தாக்குதலுக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் மீது ஈரான் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இப்போது கத்தாரில் உள்ள ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதேநேரம் அமெரிக்காவுக்கு கத்தாரை தாண்டியும் பல இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளன. எங்கெல்லாம் அமெரிக்காவுக்கு தளங்கள் உள்ளன. அவை எங்கே உள்ளன.. ஏன் முக்கியமானது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு மோதலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா நுழைந்தது. ஈரானில் உள்ள அணு சக்தி மையங்களைக் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. மொத்தம் மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை வீசியது. இது ஈரானைக் கடுமையாக கோபப்படுத்தியது.

இந்தச் சூழலில் தான் அமெரிக்கா படைத்தளங்கள் மீதான தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. கத்தாரில் உள்ள அமெரிக்கத் தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால், அமெரிக்காவுக்கு கத்தாரைத் தாண்டியும் பல இடங்களில் ராணுவ தளங்கள் உள்ளன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க ராணுவ தளங்கள்
பஹ்ரைன்: அமெரிக்கக் கடற்படையின் ஐந்தாவது கடற்படை பிரிவு (U.S. Navy's Fifth Fleet) இங்குதான் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் வரை தனது அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.
கத்தார்: அடுத்து இப்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கும் கத்தார் தளம்.. தோஹாவிற்கு வெளியே பாலைவனத்தில் 24 ஹெக்டேர் பரப்பளவில் அல் உடீத் விமான தளம் அமைந்துள்ளது. இது அமெரிக்காவின் மத்திய கட்டளை மையமாகச் செயல்படுகிறது. எகிப்தில் இருந்து கஜகஸ்தான் வரை இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்திலேயே அமெரிக்காவின் மிகப் பெரிய தளமாக இது இருக்கிறது. இங்கு சுமார் 10,000 வீரர்கள் உள்ளனர்.
முக்கியமான தளங்கள்
குவைத்: இங்குப் பல ராணுவ தளங்கள் உள்ளன. அவற்றில் கேம்ப் அரிஃப்ஜன் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை தலைமையகமாக உள்ளது. அதேபோல அலி அல் சேலம் விமான தளம் ஈராக் எல்லையில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் உள்ளது. இது "தி ராக்" என்று அழைக்கப்படுகிறது. 2003 ஈராக் போரின்போது இந்த கேம்ப் பூஹ்ரிங் நிறுவப்பட்டது. இது ஈராக் மற்றும் சிரியாவில் நிலைநிறுத்தப்படும் அமெரிக்க ராணுவப் பிரிவுகளுக்கான ஒரு தளமாக உள்ளது.
ஐக்கிய அமீரகம்: ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு தெற்கே அமைந்துள்ளது அல் தஃப்ரா விமான தளம். இங்கு ஐக்கிய அமீரக விமானப்படையுடன் அமெரிக்க விமானப்படை செயல்படுகிறது. இது அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான மையமாக உள்ளது. இந்த பிராந்தியம் முழுக்க அமெரிக்கா செய்யும் ஆபரேஷன்களுக்கு இதுவே தலைமையிடமாக இருக்கிறது.
அடுத்து துபாயின் ஜெபல் அலி துறைமுகம். இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்காவின் ராணுவ தளம் இல்லை. இருந்தாலும் மத்திய கிழக்கில் இதுவே அமெரிக்கக் கடற்படையின் மிகப் பெரிய துறைமுகமாக உள்ளது. இங்கு அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் அடிக்கடி வந்து செல்கின்றன.
வலுவாக உள்ள படைத்தளங்கள்
ஈராக்: அமெரிக்கப் படைகள் மேற்கு அன்பார் மாகாணத்தில் உள்ள ஐன் அல் அசாத் விமான தளத்தில் இருக்கிறது. அங்கிருந்தபடி அவர்கள் ஈராக் பாதுகாப்புப் படைகளுக்கு உதவுகிறது., நேட்டோ மிஷன்களுக்கும் பங்களிக்கிறது. 2020ஆம் ஆண்டில், ஈரான் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்குப் பதிலடியாக ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்திய போது, இந்த தளத்தையே குறிவைத்திருந்தது.
ஈராக்கின் தன்னாட்சி பெற்ற குர்திஸ்தான் பிராந்தியத்திலும் அமெரிக்காவுக்குச் சொந்தமான எர்பில் விமான தளம் உள்ளது. அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் போர் பயிற்சிகளை நடத்துவதற்கான இடமாக விளங்குகிறது. இது மட்டுமின்றி உளவுத்துறை மற்றும் தளவாட ஒருங்கிணைப்பு சார்ந்து பணிகளும் இங்கு நடக்கிறது.
சவுதி & ஜோர்டான்
சவுதி அரேபியா: சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க வீரர்கள் சவுதி அரசுடன் இணைந்து செயல்படுகிறார்கள். வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு உதவிகளை வழங்குவதோடு அமெரிக்க ராணுவ விமானங்களின் செயல்பாட்டிற்கும் சவுதி உதவுகிறது. ரியாத்திற்கு தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஜோர்டான்: தலைநகர் அம்மானில் இருந்து 100 கிலோமீட்டர் வடகிழக்கில் உள்ள அஸ்ராக்கில் அமைந்துள்ள முவஃபாக் அல் சால்டி விமான தளத்தில் அமெரிக்க விமானப்படை இருக்கிறது.
இப்படி மத்திய கிழக்கில் மொத்தம் ஏழு நாடுகளில் அமெரிக்காவுக்கு ராணுவ தளங்கள் உள்ளன. அதில் கத்தாரில் தான் ஈரான் இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. ஈரான் மற்ற தளங்களைக் குறிவைத்தால் அது மோசமான போராக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.












Click it and Unblock the Notifications