
ஓவர் காரம்.. தொடர்ச்சியாக வந்த இருமல்.. படபடவென உடைந்த சீனப் பெண்ணின் விலாஎலும்புகள்!
பெய்ஜிங்: மிக அதிகமான கார உணவு உண்டதால், இருமல் ஏற்பட்டு பெண் ஒருவருக்கு நான்கு விலா எலும்புகள் முறிந்த அதிர்ச்சிகரமான சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
இனிப்பை விரும்புபவர்கள் போலவே காரத்திற்கும் தனி ரசிகர்கள் உண்டு. எதைச் சாப்பிட்டாலும் காரசாரமாக சாப்பிட வேண்டும் என்றுதான் அவர்கள் நினைப்பார்கள். இதனாலேயே காரமான உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடுவார்கள். காரமான உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றிற்கு பிரச்சினை ஏற்படலாம் எனப் பலர் எச்சரிப்பதுண்டு.
ஆனால், கார உணவால் விலா எலும்பு உடைந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சீனாவில்தான் அப்படி ஒரு அதிர வைக்கும் சம்பவம் நடந்துள்ளது.

முறிந்த சத்தம்
சீனாவில் ஷங்ஹாயைச் சேர்ந்தவர் ஹூவாங் என்ற அந்தப் பெண். சம்பவத்தன்று அவர் மிகவும் கார உணவைச் சாப்பிட்டுள்ளார். காரமான அந்த உணவால் அவருக்கு தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டுள்ளது. கடுமையாக இருமியபோது, மார்பகப் பகுதியில் ஏதோ முறிந்ததைப் போன்ற சத்தத்தை அவர் கேட்டுள்ளார்.

மருத்துவர்கள் அதிர்ச்சி
முதலில் அதை ஒரு பெரிய விசயமாக அப்பெண் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்து பேச முடியாமல், மூச்சு விடும் போது வலியை உணர்ந்துள்ளார். எனவே, சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு அவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

விலா எலும்புகள் முறிவு
காரணம் அவரது நான்கு விலா எலும்புகள் முறிந்திருப்பது ஸ்கேனில் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, அவரது மார்பகப் பகுதியில் ஒரு மாதத்திற்குக் கட்டுப் போட்டு ஓய்வெடுத்தால் மட்டுமே அவர் குணமடைவார் என மருத்துவர்கள் கூறி விட்டனர். இந்தத் தகவல்களை சீனாவில் உள்ள ஷன்ஹாய் (Shanhai) வீடியோ தளம் செய்தியாக வெளியிட்டுள்ளது.

இதுதான் காரணம்
ஹுவாங் 171 சென்ட்டிமீட்டர் உயரமும், 57 கிலோகிராம் எடையும் கொண்டவர். அவரது உடல் மெலிந்து விலா எலும்புகள் வெளியில் தெரியும் அளவிற்கு பலமில்லாமல் காணப்படுவாராம். எனவே அதுதான், இருமலுக்கே தாங்காமல் அவரது விலா எலும்புகள் முறிய முக்கியக் காரணமாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

உடல் எடையைக் கூட்டணும்
எனவே, முறிந்த விலா எலும்புக்கான சிகிச்சைகள் முடிந்து, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், உடல் எடையை அதிகரிக்கத் தேவையான முயற்சிகளைச் செய்ய இருக்கிறாராம் ஹூவாங். கூடவே உடற்பயிற்சிகள் செய்து உடலை பலமாக, திடமாக மாற்றப் போகிறாராம். ஆனாலும் இருமலுக்கே விலா எலும்புகள் முறிகிறது என்பதெல்லாம் கேட்பதற்கே கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கிறது. பார்த்து கொஞ்சம் பக்குவமா இருமனும் போல...