கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி.. சுயநலம் கொண்ட ‘தேர்தல் ஸ்டண்ட்’ - மு.க.ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: "தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் நிதி ஒதுக்க முடியாது என்று தெரிந்தும் அவசர, அவசரமாக அறிவிப்புகளை பழனிசாமி வெளியிட்டது சுயநல நோக்கம் கொண்ட 'தேர்தல் ஸ்டண்ட்' என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று (பிப்.26) மாலை, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின் பேசுகையில்,

தமிழகத்தின் முக்கால் பகுதி தொகுதிகளை நான் வலம் வந்து மக்களை சந்தித்துவிட்டேன். என் மீது நம்பிக்கை வைத்து மக்கள், மனுக்களைக் கொடுக்கிறார்கள். கலைஞரின் மகன் வாக்குறுதிகளைக் காப்பாற்றுவான் என்று பொதுமக்களும் நம்புகிறார்கள். பழனிசாமிக்கு இதைப் பார்த்தால் வயிறு எரிகிறது.

 பொய் சொல்கிறார்

பொய் சொல்கிறார்

இரண்டு மாதத்தில் ஆட்சி மாறப் போகிறது என்பதால் ஆத்திரத்தில் உளறுகிறார் பழனிசாமி. 'கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாது திமுக" என்று சொல்லி இருக்கிறார். அதற்கு உதாரணமாக, நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால் கொடுக்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார். இதை விட அண்டப் புளுகு, ஆகாசப் புளுகு வேறு இருக்க முடியாது. தான் ஒரு குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், அது சம்பந்தமான கோப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று வரவழைத்து பார்த்திருக்க வேண்டும். அப்படிப் பார்த்திருந்தால் இத்தகைய பொய்யைச் சொல்வதற்கு அவரது வாய் கூசி இருக்கும். அந்த அக்கறை இல்லாத பழனிசாமி, வாய்க்கு வந்த பொய்யைச் சொல்லி இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் சில முக்கியமான வாக்குறுதிகளை தலைவர் கலைஞர் அவர்கள் கொடுத்தார்கள். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 7000 கோடி கடன் ரத்து என்பது முதலாவது. பதவி ஏற்பு விழா மேடையிலேயே 7000 கோடி கடனையும் ரத்து செய்தார் கலைஞர்.

 ஏக்கர் கணக்கில்

ஏக்கர் கணக்கில்

நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று சொன்னார்கள். அந்த அடிப்படையில் நிலம் வழங்கப்பட்டது. 1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை - 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சி தான் கழக ஆட்சி. 17.9.2006 அன்று திருவாரூரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. அன்றைய தினம் 24 ஆயிரத்து 358 குடும்பங்களுக்கு நிலம் தரப்பட்டது. 17.12.2006 அன்று விழுப்புரத்தில் 26 ஆயிரத்து 749 பேருக்கும் 17.3.2007 அன்று திருவண்ணாமலையில் 20 ஆயிரத்து 648 பேருக்கும் - 17.6.2007 அன்று நெல்லையில் 19 ஆயிரத்து 821 பேருக்கும் - 29.12.2007 அன்று ஈரோட்டில் 21 ஆயிரத்து 487 பேருக்கும் - 17.3.2008 அன்று 13 ஆயிரத்து 270 பேருக்கும் நிலம் வழங்கிய ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இது மட்டுமல்ல, கழகம் எப்போதெல்லாம் ஆட்சியில் இருந்ததோ அப்போதெல்லாம் நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்க்கு நிலம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. 1967 முதல் 76 வரையிலான திமுக ஆட்சியில் 3 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு 7 லட்சத்து 19 ஆயிரம் ஏக்கர் நிலம் தரப்பட்டது.

 நிறைவேற்றாத ஆட்சி

நிறைவேற்றாத ஆட்சி

1996 - 2001 காலக்கட்டத்தில் 52 ஆயிரத்து 792 பேருக்கு 35 ஆயிரத்து 696 ஏக்கர் நிலம் தரப்பட்டது. இது எதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் வாய்க்கு வந்ததைச் சொல்லி வருகிறார் பழனிசாமி. கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்: 'தான் திருடி, பிறரை நம்பமாட்டாள்" என்று. தன்னைப் போலவே அனைவரும் திருடர்களாகத் தான் இருப்பார்கள் என்று அந்த திருடி நினைப்பாளாம். அதைப் போல தன்னைப் போலவே தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. 2011 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ - 2016 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளையோ- நிறைவேற்றாத ஆட்சி தான் இந்த அதிமுக ஆட்சி.

 பொள்ளாச்சி ஒன்று போதாதா?

பொள்ளாச்சி ஒன்று போதாதா?

செய்யூரில் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான முயற்சி நம்முடைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 2010-ல் முன்னெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த அ.தி.மு.க. அரசின் மெத்தனப் போக்கினால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இங்கே ஒரு தோழரும் அதனைக் குறிப்பிட்டுப் பேசினார். ஆனால் கையகப்படுத்திய நிலங்களை விவசாயிகளுக்கு தராமல் இழுத்தடிப்பது ஏன்? அவர்களுடைய ஒப்புதல் இல்லாமல், எந்தவித நோட்டீஸ்சும் கொடுக்காமல், கையகப்படுத்தி உள்ள நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். அதற்காக பத்திரப் பதிவு அலுவலகத்தில் அந்த நிலங்களை பதிவு செய்வதற்கு தடையின்மைச் சான்றும் விரைவில் வெளியிட வேண்டும், இல்லையென்றால் திமுக அரசு அதனைச் செய்யும். அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு அதிகமான பாதுகாப்பு இருப்பதாக பத்திரிகைகளில் பழனிசாமி விளம்பரம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அதற்குப் பிரதமர் வக்காலத்து வாங்கி பேசுகிறார். பழனிசாமி ஆட்சியில் பெண்கள் எந்த நிலைமையில் இருக்கிறார்கள் என்பதற்கு பொள்ளாச்சி ஒன்று போதாதா?

மமதை

மமதை

அதில் சிக்கி இருக்கும் அதிமுகவினரைக் காப்பாற்றுவதற்காக பழனிசாமி எவ்வளவோ துடித்தார். ஆனால் இறுதியில் சிபிஐ, அதிமுகவினரைக் கைது செய்துவிட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியே பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். பழனிசாமி ஆட்சியில் சாதாரணப் பெண்களுக்கு மட்டுமல்ல போலீஸ் அதிகாரியாக இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை! இதில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியும் சாதாரண அதிகாரி அல்ல. சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி என்ற பதவியில் இருப்பவர். சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஒருவர் இருக்கிறார். அவருக்கு இணையாக சிறப்பு டிஜிபி என்று இவரை தேவையில்லாமல் நியமிக்கிறார்கள். அப்படி நியமிக்கப்பட்ட ராஜேஸ் தாஸ், தனக்கு முதலமைச்சரின் ஆசி இருக்கிறது என்ற மமதையில் நடந்து வருகிறார்.

 மனித உரிமை மீறல்

மனித உரிமை மீறல்


முதலமைச்சர் கலந்து கொள்ளும் விழாவின் பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் தான் இத்தகைய பாலியல் முறைகேட்டை அவர் செய்துள்ளார். இது பற்றி மேலிடத்துக்கு புகார் சொல்வதற்காக வந்த அந்த பெண் எஸ்.பி.யை வழிமறுத்து தடுத்துள்ளார் செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணன் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பெண் எஸ்.பி.க்கே இந்தக் கதி என்றால் சாதாரணப் பெண்களின் நிலைமையைச் சொல்ல வேண்டியது இல்லை.பாலியல் தொல்லை கொடுத்த ராஜேஸ்தாஸும், எஸ்.பி.யை வழிமறித்து மிரட்டிய எஸ்.பி.கண்ணனும் இன்னும் சஸ்பெண்ட் செய்யப்படாததற்கு என்ன காரணம்? பெண் எஸ்.பி. காரின் சாவியைப் பிடுங்கியது மட்டுமில்லாமல் - "பாலியல் குற்றம் புரிந்த சிறப்பு டி.ஜி.பி.யிடம் பேசவில்லை என்றால் இங்கிருந்து உங்கள் கார் செல்ல அனுமதிக்க முடியாது" என்று எஸ்.பி. கண்ணன் மிரட்டியது மனித உரிமை மீறல் ஆகும்.

 நான் அறிவித்தது

நான் அறிவித்தது

அதிமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு - காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் பாதுகாப்பு மிகப்பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்துகிறது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தனது கட்சிக்காரர்களை காப்பாற்றிய முதலமைச்சர் - இப்போது இக்குற்றத்தில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளையும் காப்பாறுவது கண்ணியமற்ற செயல். இதை எல்லாம் தெரியாத பிரதமர் மோடி அவர்கள், கோவையில் பேசும் போது திமுகவை குறை சொல்லி இருக்கிறார். அவரது கூட்டணி ஆளும் அதிமுக ஆட்சியில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு இந்த நிலைமை என்பதை மோடி அறியாமல் போனாரா? அல்லது தெரிந்தும் தெரியாதது மாதிரி நடிக்கிறாரா? இன்றைக்கு ஆட்சி முடியப் போகும் நிலையில் தினந்தோறும் காலையும் மாலையும் கல்வெட்டுகளைத் திறந்து வைக்கிறார் பழனிசாமி. இன்று காலையில் இரண்டு அறிவிப்புகளை பழனிசாமி செய்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகைக்கடன் ரத்து - இது ஏற்கனவே ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டதுதான். மகளிர் சுய உதவிக்குழு சார்பில் வாங்கிய கடன் ரத்து என்று சொல்லி இருக்கிறார். இதுவும் நான்கு நாட்களுக்கு முன்னால் நான் அறிவித்ததுதான்.

 ஒதுக்கீடு செய்யப்பட்டதா?

ஒதுக்கீடு செய்யப்பட்டதா?

2019 ஆம் ஆண்டு நாடாளுன்றத் தேர்தலில் இருந்தே நான் சொல்லி வருகிறேன். அப்போதெல்லாம் இவற்றை எல்லாம் ரத்து செய்ய முடியாது என்று சட்டப்பேரவையிலேயே சொன்னவர் இந்த பழனிசாமி. சொல்லி விட்டு கட்டாயமாக வட்டி வசூலையும் செய்தவர் பழனிசாமி. இப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிற அதே நேரத்தில், மாலையில் தேர்தல் தேதியை அறிவிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டே இந்த அறிவிப்பை செய்கிறார் என்றால் அது தனது சுயநலத்துக்கானது; தேர்தல் ஸ்டண்ட் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். கடந்த ஒருமாத காலமாக பல்லாயிரம் கோடிக்கான திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார் பழனிசாமி. நிதி ஒதுக்கினாரா? இல்லை! சென்னையிலும் கோவையிலும் பல திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி! பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா? இல்லை!

 செயல்வாதி

செயல்வாதி

தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டால் இனிமேல் நிதி ஒதுக்கீடும் செய்ய முடியாது. நிதி ஒதுக்காமலே அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அரைமணிநேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. அப்படியானால் பிரதமரும் முதலமைச்சரும் சேர்ந்து மக்கள் தலையில் மிளகாய் அரைத்துள்ளார்கள் என்று அர்த்தம்! மக்களுக்கு இது தெரியாது என்று மோடியும் பழனிசாமியும் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்! ஏமாற்ற நினைக்கும் இவர்களை மக்கள் தேர்தலின் மூலமாக ஏமாற்றுவார்கள்! ஆட்சி முடியப்போகும் நேரத்தில் இப்படி திடீர், திடீரென அறிவிக்கிறாரே, பழனிசாமி என்ன மந்திரவாதியா என்று கேட்டேன். இதற்கு பழனிசாமி பதில் சொல்லி இருக்கிறார். ''நான் மந்திரவாதி இல்லை, செயல்வாதி" என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. அவர் என்ன செயல் செய்தார் என்பதையும் சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் செய்த செயல் என்ன என்பதை தான் இந்த தமிழ்நாடே பார்த்ததே! அவர் ஊர்ந்து போனதை அனைவரும் வாட்ஸ்அப்பில் பார்த்திருப்பீர்கள். திமுக ஆட்சி மலர்ந்ததும் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றித் தரப்படும். இனி இவை அனைத்தும் என்னுடைய கவலைகள். என்னுடைய கோரிக்கைகள். தமிழகத்தோடு, நமது பிள்ளைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக்கூடிய தேர்தல்தான் இது. பத்தாண்டுகால ஆட்சியை மாற்றுவோம்" என்றும் அவர் உரையாற்றினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+