கன்னியாகுமரியில் கால்வைக்கும் ராகுல் காந்தி! பரபரக்கும் காங்கிரஸ் ‘தலைகள்’! கேரவனில் இத்தனை வசதிகளா?
கன்னியாகுமரி : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள இருக்கும் நிலையில் அவரது வருகையை ஒட்டி பல்வேறு நவீன வசதிகளுடன் 60 கேரவன்கள் கன்னியாகுமரிக்கு வர வைக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கும் அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

ராகுல்காந்தி
குமரி மாவட்டத்தில் மட்டும் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி காலை கேரளாவில் பயணத்தை தொடர்கிறார். தினமும் 18 முதல் 20 கிலோ மீட்டர் வரை அவர் நடைபயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப். 7-ம் தேதி காலை சென்னை வரும் ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.

முதல்வர் ஸ்டாலின்
அங்கிருந்து ஹெலிகாப்டரில் கன்னியாகுமரி வரும் அவர், காந்தி மண்டபம் அருகே மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினும் பங்கேற்கிறார். பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் தலைவர்கள் அனைவரும் மரியாதை செலுத்துகின்றனர். அங்கிருந்து ராகுல்காந்தியின் நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சிறப்பான ஏற்பாடுகள்
நடைபயணத்தில் ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் கட்சியின் தேசிய, மாநிலத் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, ப சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், விஜய் வசந்த் எம்பி உள்ளிட்ட பலரும் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நடைபயணத்தை தொடங்கும் ராகுல் காந்தி அதன் பிறகு பிரம்மாண்ட மேடையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

60 கேரவன்கள்
தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் விவேகானந்தர் கல்லூரியில் இரவு தங்குகிறார். இந்நிலையில் பாதயாத்திரையில் கலந்து கொள்ளும் ராகுல் காந்தி மற்றும் அவருடன் பாதயாத்திரை செல்லும் காங்கிரஸ் தலைவர்களும் தங்குவதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்காக பிரத்தியேகமாக 60 கேரவன்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த 60 கேரவன்களும் கன்னியாகுமரிக்கு வர வைக்கப்பட்டுள்ள நிலையில் ராகுல் காந்தி செல்லும் இடமெல்லாம் இந்த கேரவன்களும் அவர்களை பின்தொடர உள்ளது. இந்த கேரவன்களில் நவீன வசதிகளுடன் படுக்கையறை, சமையலறை, கழிவறை, குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications