விஜயதாரணி தாவல்-முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் விளவங்கோடு-‘திராவிட கட்சி’கள் வெல்லாத தொகுதி!
கன்னியாகுமரி: காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த விஜயதாரணி திடீரென பாஜகவில் இணைந்ததால் தமது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து விளவங்கோடு சட்டசபை தொகுதி முதல் முறையாக இடைத் தேர்தலை எதிர்கொண்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் 2011, 2016, 2021 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதாரணி. தற்போது திடீரென பாஜகவில் இணைந்துவிட்டார். இதனையடுத்து விஜயதாரணி எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை எச்சரித்திருந்தார். இந்த எச்சரிக்கையால் விஜயதாரணி தாமாகவே முன்வந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

முதல் முறையாக இடைத் தேர்தல்: விஜயதாரணி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த நிலையில் விளவங்கோடு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலை எதிர்கொண்டுள்ளது. விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கு, லோக்சபா தேர்தலுடன் இடைத் தேர்தல் நடைபெறக் கூடும்.
திராவிடம் வெல்லாத தொகுதி: விளவங்கோடு தொகுதி முதல் முறையாக இடைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இத்தொகுதி மொத்தம் 15 சட்டசபை தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் 10 முறை வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் 5 முறை வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகள் வெற்றி பெறாத சட்டசபை தொகுதிதான் விளவங்கோடு.
15 தேர்தல்களில் வென்றவர்கள்: 1957,1962-ல் காங்கிரஸ் கட்சியின் வில்லியம், 1967, 1971-ல் காங்கிரஸ் கட்சியின் பொன்னப்ப நாடார், 1984, 1989, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் சுந்தரதாஸ், 2011, 2016, 2021-ல் காங்கிரஸின் விஜயதாரணி வெற்றி பெற்றனர். 1977-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.எஸ்.மணி, 1980, 1996, 2001-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் டி.மணி, 2006-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் ஜான் ஜோசப் ஆகியோர் வென்றனர்.
4 முனை போட்டி: விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்ததால் இடைத்தேர்தலிலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே போட்டியிட விரும்பும். திமுக தலைமையும் இதனை ஏற்க வாய்ப்பிருக்கிறது. அதிமுகவும் வேட்பாளரை களமிறக்கும்; பாஜகவும் களமிறக்கும். நாம் தமிழர் கட்சியும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிடும். ஆகையால் முதல் முறையாக இடைத்தேர்தலை சந்திக்கும் விளவங்கோடு தொகுதியில் 4 முனை போட்டி ஏற்படும். வெல்லப் போவது யார்?












Click it and Unblock the Notifications