இது ஆக்ஷன்.. மோடி தியானத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும்.. தேர்தல் ஆணையருக்கு சிபிஐஎம் கடிதம்!
கன்னியாகுமரி: பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் செய்வதை தொலைக்காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட தேர்தல் 57 லோக்சபா தொகுதிகளுக்கு வருகிற ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலை 6 மணியுடன் இறுதிக்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கன்னியாகுமரி வருகை தர உள்ளார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் அவர் தியானம் மேற்கொள்ள உள்ளார். இதையொட்டி, கன்னியாகுமரி மட்டுமின்றி, கடலோர மாவட்டங்களில் தீவிர பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்பு செய்ய ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், "பிரதமர் மோடி தமிழ்நாட்டில் வந்து, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறை மீது தியானம் செய்ய போகிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்து 7 வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவிருக்கும் சூழலில் இந்த தியானம் நடக்கவுள்ளது.
வாக்குபதிவு நாளிலோ அல்லது பிரச்சாரம் முடிவுக்கு வந்த பின்னரோ நேரடியாகவோ மறைமுகமாகவோ வாக்கு கேட்க கூடாது. ஆனால், அந்த விதியை ஏய்த்து சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் நேரலை செய்து வாக்கு வேட்டை ஆடுவதே பிரதமர் மோடியின் திட்டம்.

பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் நினைவிடத்தில் தியானம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவருடைய தனிப்பட்ட விருப்பம், அதைப் பற்றி நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. பிரதமர் மோடியின் தியானத்தை அச்சு, மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் நேரடியாக ஒளிபரப்பும். அது மோடிக்கும் அவரது அரசியல் கட்சியான பாஜகவுக்கும் மிகப்பெரிய பிரச்சாரமாக மாறும். மோடியும் பாஜகவும் தேர்தல் நாள் வரை லைம் லைட்டில் தொடர்ந்து இருப்பார்கள்.
பிரச்சாரத்தை 48 மணி நேரத்திற்கு முன்பே முடித்துக் கொள்வதன் நோக்கத்தை அது தோற்கடிக்கிறது. இது தேர்தல் நடத்தை விதிகளை கடுமையாக மீறும் செயலாகும். சென்ற தேர்தலிலும் அவர் இதே உத்தியை கடைப்பிடிப்பதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. தனிப்பட்டு தியானம் செய்தாலும் கூட அதை தொலைக்காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள போது விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடுவது தேர்தல் நடத்தை விதிமீறல். இதன் மூலம் பிரதமர் மோடி மறைமுகமாகத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடியின் தியான நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications