வாரிசு அரசியல்.. திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி.. பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
கன்னியாகுமரி: வாரிசு அரசியலால், திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து காலையில் மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாலையில் கன்னியாகுமரியில் பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, அய்யா வைகுண்டர், காமராஜர், மார்ஷல் நேசமணி உள்ளிட்டோரை நினைவு கூர்கிறேன். வளர்ச்சி என்ற மந்திரத்தை முன் வைத்து நாங்கள் மக்களை எதிர்கொள்கிறோம்

அதிருப்தி
எதிர்க்கட்சிகள் குடும்ப அரசியலையே முக்கியமானதாக கருதுகின்றனர், வாரிசு அரசியலால், திமுகவில் மூத்த தலைவர்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. வாரிசு அரசியலுக்கு எதிரான மனநிலையில் மக்கள் உள்ளனர்.

சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி பல மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சி கலைத்துள்ளது. கொரோனாவால் பல நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் மூலம் தாயகம் அழைத்து வந்தோம். தமிழ்நாட்டிலிருந்து சுமார் 5லட்சம் சகோதர சகோதரிகள் நாடு திரும்பினர். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த தமிழக பாதிரியாரை மீட்டோம்.

விவசாயிகளின் வருமானம்
கடலோர மேம்பாட்டுக்காக 3 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்த மத்திய பாரதிய ஜனதா அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாயிகளின் வருமானத்தை பெருக்க வேளாண் துறையை நவீனமயமாக்கி வருகிறோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு கடுமையாக உழைத்து வருகிறது.

சாலை மேம்பாட்டு பணி
புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படுவதால் உள்ளூர் மக்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இலங்கை சிறையில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சாலை மேம்பாட்டு பணிகளுக்காக ரூபாய் 1.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே புதிய பொருளாதார வழித்தடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஒருசிலர் மட்டுமே இந்தியாவை உருவாக்கவில்லை, இந்தியர் பலரின் வியர்வைத் துளிகளால் உருவானது" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.