"கருணாநிதி நிறைய நல்லது செய்துள்ளார்.. அந்த திமுக இல்லை இது” - அண்ணாமலை திடீர் பாசம்..! என்னாச்சு?
கரூர் : கொள்கை அடிப்படையில் மாறுபட்ட கட்சிகளாக இருந்தாலும் கருணாநிதி தமிழக மக்களுக்கு நல்லது செய்துள்ளார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை புகழ்ந்து பேசியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான நேற்று, கருணாநிதி முதன்முதலில் வென்ற குளித்தலையில் நடைபெற்ற பாஜக விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார்.
அப்போது பேசிய அண்ணாமலை, கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை. ஆனால், தமிழகத்தில் பின்தங்கிய தொகுதி எப்படி இருக்குமோ அப்படித்தான் குளித்தலை உள்ளது எனவும் விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் அண்ணாமலை
கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகள் நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின்னர் மேடையில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் கெட்டுவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், கரூர் மாவட்டம் முழுவதும் அதிகளவிலான சிறுவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி உள்ளனர் என்றும் அதிகளவில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியை புகழ்ந்த அண்ணாமலை
இந்த விழாவில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி முதன் முதலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி குளித்தலை. அரசியல் ரீதியாக பா.ஜ.கவும் தி.மு.கவும் எதிர் எதிர் துருவங்களாக இருந்தாலும், கொள்கை அடிப்படையில் மாறுபட்ட கட்சிகளாக இருந்தாலும் கருணாநிதி தமிழக மக்களுக்கு நல்லது செய்துள்ளார் என்பதில் மாற்று கருத்து இல்லை. சட்டப்பேரவையில் மக்களுக்காக அவர் குரல் கொடுத்துள்ளார் எனத் தெரிவித்தார்.

திமுக தான் மாறியிருக்கு
மேலும் பேசிய அண்ணாமலை, சமூக நீதி கட்சியாக சொல்லப்படும் தி.மு.க 1957-ல் இருந்ததைப் போல 2022ல் இல்லை. கருணாநிதி இங்கு தேர்தலில் நிற்கும்போது கிராமம் கிராமமாகச் சென்று மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்தார். ஆனால், தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சிவப்பு கம்பள விரிப்பில் நின்று சினிமா மாடல் போல நாற்று நடுபவர்களை பார்த்துக்கொண்டு இருக்கிறார். 70 ஆண்டுகளில் தமிழகம் எவ்வாறு மாறியிருக்கிறது என்பதற்கு தி.மு.க எப்படி மாறியிருக்கிறது என்பதே சாட்சி. தமிழகத்தில் பின்தங்கிய தொகுதி எப்படி இருக்குமோ அப்படி குளித்தலை உள்ளது. கருணாநிதி வெற்றி பெற்ற முதல் தொகுதியான குளித்தலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

ஒன்றிய செயலாளர் கையில்
தி.மு.க அமைச்சர்கள் ஓராண்டு சாதனை குறித்து பேசுகிறார்கள். ஓராண்டு தி.மு.க ஆட்சியில் யாருக்கு சாதனை என்றால் தி.மு.க குடும்ப உறுப்பினர்களுக்குத்தான் சாதனையாக அமைந்துள்ளது. சாதாரண மக்களுக்கு சாதனை ஆண்டு என்று சொல்ல முடியாது. சட்டம் ஒழுங்கு முழுமையாக கெட்டுவிட்டது. ஒவ்வொரு காவல்நிலையமும் திமுக ஒன்றிய செயலாளர் கையில் உள்ளது.

ஒரு திட்டமும் நிறைவேறவில்லை
பா.ஜ.கவின் நோக்கம் ஏழைகள் ஏழைகளாக இருக்கக்கூடாது என்பதுதான். 45 கோடி மக்களுக்கு வங்கி கணக்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ளார். வங்கிக் கணக்கு மூலம் அனைவருக்கும் நேரடியாக பணம் கிடைக்கச் செய்தார். குஜராத்தில் பிரதமர் மோடி கொண்டுவந்த 6 திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட்டு விட்டன. தமிழகத்தில் எந்த ஒரு திட்டமும் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications