கரூர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு: பதுங்கியிருந்த டாக்டர் ரஜினிகாந்த் கைது - சிறையில் தள்ளிய போலீஸ்
கரூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் டாக்டர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர்: பள்ளி சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த வழக்கு தேடப்பட்டு வந்த டாக்டர் ரஜினிகாந்தை போக்சோ சட்டத்தின் கீழ் தனிப்படை போலீசார் கைது செய்தனர். டாக்டர் ரஜினிகாந்தை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் தனியார் ஆர்த்தோ மருத்துவமனை உள்ளது. இதன் உரிமையாளர் டாக்டர் ரஜினிகாந்த்,55. இங்கு மேலாளராக பணியாற்றுபவர் சரவணன்,55. இம்மருத்துவமனையில் பணியாற்றி பெண் ஒருவர் 17 வயது மகளுடன் வசித்து வருகிறார். தீபாவளி போனஸ் குறைவாக வழங்கியதால் அதனை வாங்கிக் கொள்ளாத அப்பெண் அதன் பிறகு வேலைக்குச் செல்லவில்லை.
இந்நிலையில் டாக்டர் ரஜினிகாந்த் அப்பெண்ணின், பிளஸ் 1 படிக்கும் மகளுக்கு போன் செய்து ஏன் உன் தாய் வேலைக்கு வரவில்லை எனக்கேட்டுள்ளார். அப்போது, அவரது மகள் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு தாய் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நீங்கள் மற்றவர்களை விட அவருக்கு போனஸ் குறைவாக வழங்கியதால் வேலைக்கு வரவில்லை எனவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார்.

சிறுமியை அழைத்த டாக்டர்
இதையடுத்து தீபாவளி போனஸ் மற்றும் புத்தாடைகளை வாங்கிச் செல்ல மருத்துவமனைக்கு வருமாறு சிறுமியை டாக்டர் ரஜினிகாந்த் அழைத்ததாக தெரிகிறது. இதையடுத்து மேலாளர் சரவணன் சிறுமியை தொடர்புக்கொண்டு டாக்டர் வெளியில் செல்ல உள்ளதால் உடனே மருத்துவமனைக்கு வர அழைத்துள்ளார்.

டாக்டர் அத்துமீறல்
இதனை நம்பி கடந்த சனிக்கிழமையன்று மாலை மருத்துவமனைக்குச் சென்ற சிறுமிக்கு டாக்டர் ரஜினிகாந்த் பாலியல் தொல்லை அளித்துள்ளார். டாக்டரின் அத்துமீறலுக்கு மருத்துவமனை மேலாளர் சரவணனும் உடந்தையாக இருந்ததாகக் தெரிகிறது. டாக்டரிடம் இருந்து தப்பித்த மாணவி கூச்சலிட்டப்படியே வெளியே ஓடிவந்துள்ளார்.

டாக்டர் மீது வழக்குப் பதிவு
இதுகுறித்து அச்சிறுமி தாயிடம் தெரிவித்ததை அடுத்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்தார். புகாரின்பேரில் டாக்டர் ரஜினிகாந்த், மேலாளர் சரவணன் ஆகிய இருவர் மீது குழந்தைகளை போக்சோ சட்டத்தில் இரு பிரிவுகளின் கீழ் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர். காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது அறிந்து இருவரும் தலைமறைவான நிலையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.

டாக்டர் ரஜினிகாந்த் கைது
நிலையில் தலைமறைவாக இருந்த மருத்துவர் ரஜினிகாந்த்தை தனிப்படை போலீசார் கோயம்புத்தூர், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி வந்தனர். வேலாயுதம்பாளையம் பகுதியில் அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அவரை கைது செய்து மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி நசீமா பானு முன் ஆஜர் படுத்தினர்.

சிறையில் தள்ளப்பட்ட ரஜினிகாந்த்
டாக்டர் ரஜினிகாந்தை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை அடுத்து கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி பாலியல் வழக்கில் கடந்த 4 நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு டாக்டர் ரஜினிகாந்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications