கரூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. பற்றி எரிய உனை கேட்கும்”.. தகதகக்கும் கரூர்.. காரணம் இந்த 2 தலைவர்கள்

கரூரில் அதிமுக, திமுக நேரடி மோதல் மட்டுமின்றி, அங்கு தேர்தல் களம் சூடு பிடித்திருப்பதற்கு பின்னணியில் பெரிய கதையே உள்ளது.

Google Oneindia Tamil News

கரூர் : அரசியல் தலைவர்கள் எல்லாம் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளதால் தமிழ்நாடு தேர்தல் களம் இப்போது தான் சூடு பிடித்திருக்கிறது. ஆனால் கரூரில் மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட முதல் நாளில் இருந்தே தகித்துக்கொண்டிருக்கிறது. காரணம் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜிக்கும், அதிமுக வேட்பாளரும் போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையில் நடைபெறும் அரசியல் போட்டி.

எத்தனையோ தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக களம் கண்டாலும், கரூரில் மட்டும் ஏன் இந்த களேபரம் என்ற கேள்வி நம் மனதில் எழுவது இயல்பு தான். இந்த கேள்விக்கான விடையை தெரிந்துகொள்ள முதலில் நாம் செந்தில் பாலாஜி யார்? என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

1995ம் ஆண்டு கரூரில் பி.காம் 2ம் ஆண்டு பிடித்துக்கொண்டிருந்த போது செந்தில் பாலாஜிக்கு அரசியல் மீது அதீத மோகம் ஏற்பட, உடனடியாக படிப்பை நிறுத்திவிட்டு அரசியலில் குதித்தார். தனது அரசியல் வாழ்க்கையை அவர் ஆரம்பித்தது திமுகவில் இருந்து தான்.

திமுக டு மதிமுக

திமுக டு மதிமுக

1995ம் ஆண்டு திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜிக்கு 1996ம் ஆண்டு கரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அரசியலில் டக்கென மேல வந்துவிட வேண்டும் என நினைத்த செந்தில் பாலாஜியால் திமுகவில் தொடர்ந்து நீடிக்க முடியவில்லை. இதனால் மதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு அரசியல் பணியாற்றினார்.

படிப்படியான உயர்வு

படிப்படியான உயர்வு

அந்த சமயத்தில் தான் அவருக்கு அதிமுகவின் கரூர் மாவட்ட செயலாளராக இருந்த சின்னசாமியின் அறிமுகம் ஏற்பட்டது. செந்தில் பாலாஜியின் துறுதுறுப்பு பிடித்துப்போகவே அதிமுகவின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணை செயலாளர் பதவியை வாங்கிக்கொடுத்தார் சின்னசாமி. தனது கடும் உழைப்பால் 2004ம் ஆண்டு கரூர் மாவட்ட மாணவர் அணி செயலாளராக உயர்ந்தார் செந்தில் பாலாஜி.

முதல் முறை எம் எல் ஏ

முதல் முறை எம் எல் ஏ

அப்போது தான் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செந்தில் பாலாஜியை கவனிக்க தொடங்கினார். அதன் விளைவு 2006ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும், கரூரில் திமுக வேட்பாளர் வாசுகி முருகேசனை தோற்கடித்து முதல் முறையாக எம்.எல்.ஏவானார் செந்தில் பாலாஜி.

ஜெ.வின் நம்பிக்கை

ஜெ.வின் நம்பிக்கை

திமுக வேட்பாளரை தோற்கடித்த செந்தில் பாலாஜி மீது ஜெயலலிதாவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அதன் காரணமாக, சின்னசாமியிடம் இருந்த கரூர் மாவட்ட செயலாளர் பதவி செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்டது. அதை கெட்டியாக பிடித்துக்கொண்ட செந்தில் பாலாஜி, கரூரில் தனது கரத்தை பலப்படுத்திக்கொண்டார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர்

போக்குவரத்துத்துறை அமைச்சர்

இதையடுத்து 2011ம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு அமைச்சராக உயர்ந்தார் செந்தில் பாலாஜி. அடுத்த நான்கரை ஆண்டுகள் போக்குவரத்துறை அமைச்சராக கோலோச்சினார் செந்தில் பாலாஜி. ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களில் இருந்து தொடர்ந்து தப்பித்துக்கொண்டே வந்தார் அவர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

இந்த சூழலில் தான் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி மற்றும் மாவட்ட செயலாளர் பதவியை பிடுங்கினார் ஜெயலலிதா. இதற்கு காரணமாக இருந்தவர் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

பகை வளர்ந்த கதை

பகை வளர்ந்த கதை

செந்தில் பாலாஜி அமைச்சராகவும், கரூர் மாவட்ட செயலாளராகவும் இருந்த போது தான்தோன்றிமலை ஒன்றிய செயலாளராக இருந்தார் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இந்த சமயத்தில் தான் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினை தான் இருவரும் ஒருவருக்குகொருவர் கொலைமிரட்டல் விடும் அளவிற்கு வளர்ந்து நிற்கிறது.

தேர்தலே ரத்து

தேர்தலே ரத்து

2016ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் நடந்த சம்பவங்களை யாராலும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாது. திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமியும், அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியும் பண மழையை கொட்டியதால் தேர்தல் ஆணையமே அதிர்ந்து போய் அந்த ஒரு தொகுதியில் மட்டும் தேர்தலை ரத்து செய்தது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

2016ம் ஆண்டு அதிமுக பெரும்பான்மை தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அதன் பிறகு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார் செந்தில் பாலாஜி. இருப்பினும் இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. மாறாக அவரது எதிரியான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவியை ஏற்கனவே வழங்கியிருந்தார் ஜெயலலிதா. எது நடந்துவிடக்கூடாது என செந்தில் பாலாஜி பெரும் முயற்சி செய்தாரோ அது நடந்துவிட்டதால் கடும் கொந்தளிப்படைந்தார்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்

2016 சட்டமன்ற தேர்தலில் செந்தில் பாலாஜிக்கு அரவக்குறிச்சியிலும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு கரூர் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருந்தார் ஜெயலலிதா. தனது வெற்றிக்காக காட்டிய அதே அக்கறையை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதிலும் காட்டினார் செந்தில் பாலாஜி.

எதிரியின் எதிரி நண்பன்

எதிரியின் எதிரி நண்பன்

கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பேங்க் சுப்பிரமணியத்துக்கு மறைமுக உதவிகளை செய்தார் செந்தில் பாலாஜி என்பது குற்றச்சாட்டு. இதனை நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரையின் துணையுடன் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதா காதில் போட்டார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

ஜெ.வின் கோபம்

ஜெ.வின் கோபம்

செந்தில் பாலாஜி செய்த உள்ளடி வேலைகளால் வெறும் 441 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே கரூரில் அதிமுகவால் ஜெயிக்க முடிந்தது. இதனால் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளானார் செந்தில் பாலாஜி. அதனாலேயே அவருக்கு கொடுக்க வேண்டிய அமைச்சர் பதவியை எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு தூக்கி கொடுத்தார் ஜெயலலிதா. இதுவே எம்.ஆர்.வி. மீது செந்தில் பாலாஜிக்கு கோபம் ஏற்பட காரணம்.

மீண்டும் திமுக

மீண்டும் திமுக

ஜெயலலிதா மறைந்த பிறகு டி.டிவி.தினகரனின் அமமுக பக்கம் தாவினார் செந்தில் பாலாஜி. இதனால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு அவரது எம்.எல்.ஏ பதவி பறிபோனது. பிறகு 2018ம் ஆண்டு திமுகவில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். அதன் பரிசாக 41 நாட்களில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதவி அவருக்கு கிடைத்தது.

கரூரில் போட்டி

கரூரில் போட்டி

2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செந்தில்நாதனை வீழ்த்தி மீண்டும் அரவக்குறிச்சியின் சட்டமன்ற உறுப்பினரானார் செந்தில் பாலாஜி. அதன் தொடர்ச்சியாக இந்த முறை அவருக்கு திமுக சார்பில் போட்டியிட கரூரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இதனால் தான் கரூர் தொகுதியில் நெருப்பாக அனல் பறந்து கொண்டிருக்கிறது. பரம எதிரிகளான செந்தில் பாலாஜியும் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நேருக்கு நேர் மோதுவதால் மற்ற எந்த தொகுதியைவிடவும் கரூர் பரபரப்பாகவே இருக்கிறது. நள்ளிரவில் அதிமுக திமுக மோதல்கள் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவின் புகார்

அதிமுகவின் புகார்

"திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அமராவதி ஆற்றில் மாட்டு வண்டிகளை கொண்டு சென்று மணல் அள்ளிக்கொள்ளுங்கள். அதிகாரிகள் தொந்தரவு செய்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்", என பகிரங்கமாக அறிவிக்கிறார் செந்தில் பாலாஜி. இதன் வீடியோ காட்சிகளை புகாராக தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருக்கிறது அதிமுக.

பகிரங்க மிரட்டல்

பகிரங்க மிரட்டல்

அதேபோல், "நான் கண் காட்டியிருந்தால் அந்த நிமிஷமே உனது (செந்தில் பாலாஜி) கதையை எனது ஆட்கள் முடித்திருப்பார்கள்", என பொது மேடையில் பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். திமுக இதனை கையில் எடுத்து புகாராக பதிவு செய்திருக்கிறது.

அதிக வேட்பாளர்கள்

அதிக வேட்பாளர்கள்

எப்படியாது ஜெயித்து விட வேண்டும் என இருவரும் கடுமையாக போராடிக்கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடுவது கரூர் தொகுதியில் தான். மொத்தம் 84 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் 13 பேர் மட்டும். மீதமுள்ள 71 பேரும் சுயேட்சைகளே.

 பிளான் பி

பிளான் பி

இந்த 71 சுயேட்சை வேட்பாளர்களில் 40 பேர் செந்தில் பாலாஜியின் ஆட்கள் தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். தேர்தல் கணக்கு காட்டுவதற்காகவும், அதிக வாகனங்களை பயன்படுத்துவதற்காகவும், வாக்காளர்களுக்கு 'சத்து மாத்திரைகளை' விநியோகிப்பதற்காகவும் இந்த ஏற்பாடு என்கிறார்கள். இது அனைத்தையுமே தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கிறது.

எகிறும் எதிர்பார்ப்பு

எகிறும் எதிர்பார்ப்பு

இதனால் கரூரில் தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஒருவேளை தேர்தல் நிறுத்தப்பட்டால் 2016ம் ஆண்டு அரவக்குறிச்சியில் நடந்தது போல், இடைத்தேர்தலில் கவனித்துக் கொள்ளலம் என்ற நம்பிக்கையில் செந்தில் பாலாஜி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத சூழலில் கரூரில் என்ன நடக்கப் போகிறது என ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் கவனமும் திரும்பியுள்ளது.

English summary
The political scenario in Karur shows that there will a chance of cancellation of election in the constituency.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X