கொடுமை! வெஜிடபிள் ரைஸில் கரப்பான்பூச்சி.. கேள்வி கேட்ட பயணி! ஒசூர் ஹோட்டல் உரிமையாளரின் திமிர் பதில்
கிருஷ்ணகிரி: ஒசூர் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் வெஜிடபிள் ரைஸ்-ல் கரப்பான் பூச்சி இருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சாப்பாட்டில் கரப்பான் பூச்சி இருந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, எங்கு வேண்டுமானாலும் போய் புகார் கொடுத்து கொள்ளுங்கள் என்று ஹோட்டல் உரிமையாளர் திமிராக பதில் அளித்திருக்கிறார்.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு லட்சக்கணக்கான மக்கள் மீண்டும் சென்னை, பெங்களூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் நள்ளிரவில் சாப்பிடுவதற்காக பேருந்து நிலையங்களில் உள்ள உணவகங்களையும், அதன் அருகில் உள்ள ஹோட்டல்களையும் மட்டுமே பயணிகள் நம்பி இருக்கின்றனர்.

ஆனால் ரெகுலர் கஸ்டமர் யாரும் கிடையாது என்பதால், ஹோட்டல்களில் தரமான சாப்பாடு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. தற்போது ஒரு படி மேலே சென்று, சாப்பாட்டில் கரப்பான் பூச்சி கிடக்கும் அவலம் அரங்கேறி இருக்கிறது. ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பயணி ஒருவர் வெஜிடபிள் ரைஸ் சாப்பிட வாங்கி இருக்கிறார்.
ஆனால் அந்த வெஜிடபிள் ரைஸில் கரப்பான் பூச்சி இருந்திருக்கிறது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பயணி, நாங்கள் காசு கொடுத்துதானே சாப்பிடுகிறோம்.. இப்படி இருந்தால் எப்படி? என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு ஹோட்டல் உரிமையாளர், இருக்கிறது அதுதான்.. சாப்பிட்டால் சாப்பிடுங்கள்.. இல்லை என்றால் எங்கு வேண்டுமானாலும் புகார் பண்ணுங்க.. பார்த்துக்கலாம் என்று திமிராக பதில் அளித்துள்ளார்.
இதனால் அங்கிருந்த மக்களும், பயணிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் ஒசூர் பேருந்து நிலையத்தில் உள்ள அத்தனை ஹோட்டல்களிலும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளன.



Click it and Unblock the Notifications
