சிவலிங்கம் சர்ச்சையை கிளப்பிய ஞானவாபி வழக்கு.. மசூதி நிர்வாகத்தின் இந்து வழக்கறிஞர் திடீர் மரணம்
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜராகி வாதாடி வந்த இந்து வழக்கறிஞர் திடீரென்று மரணமடைந்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனருகே காசி விஸ்வநாதர் கோவிலும் உள்ள நிலையில் இந்து கோவில் ஒன்றை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஞானவாபி மசூதி வழக்கு
இதற்கிடையே தான் கடந்த ஏப்ரல் மாதத்தில் 5 இளம்பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர். மனுவில், ‛‛ஞானவாபி மசூதி வளாக வெளிப்புற சுவரில் சிங்காரகவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு ஆண்டுக்கு ஒரு முறை பூஜைகளும் நடத்தப்படும் நிலையில் தினமும் பூஜை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கோவில் வளாகத்தில் உள்ள பிற விக்கிரகங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியாத தெய்வங்களை வழிபட அனுமதிக்க வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது.

சிவலிங்கம் சர்ச்சை
இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து ஆய்வு நடத்தப்பட்ட ஆய்வறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே தான் மசூதியில் சிவலிங்கம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தேசிய அளவில் விவாதப்பொருளானது. இந்துத்துவ அமைப்பினர் ஆய்வுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில் முஸ்லிம் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மசூதி வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது சிவலிங்கம் அல்ல. அது செயற்கை நீருற்று என முஸ்லிம் அமைப்பினர் கூறி வருகின்றனர்.

இந்து வழக்கறிஞர் மரணம்
இதற்கிடையே நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் மசூதியின் குறிப்பிட்ட பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இருப்பினும் முஸ்லிம்கள் தொடர்ந்து தங்களின் நடைமுறையை மசூதியில் பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜராகி வாதாடி வந்த இந்து வழக்கறிஞர் அபய்நாத் யாதவ் (வயது 65) திடீரென்று மரணமடைந்துள்ளார்.

காரணம் என்ன?
இந்த வழக்கில் ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பிலான வழக்கறிஞர்கள் குழுவில் அபய்நாத் யாதவ் மட்டுமே இந்து ஆவார். இவர் மே மாதம் 24ம் தேதி முதல் ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்றத்தில் வாதாடினார். இதுதொடர்பான வழக்கு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் அபய்நாத் யாதவ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இதுபற்றி மசூதி நிர்வாகத்தின் இணை செயலாளர் எஸ்எம் யாசீன் கூறுகையில், ‛அபய்நாத் யாதவ் மரணம் ஷாக்காக உள்ளது. அவரது இழப்பால் இன்னொரு மூத்த வழக்கறிஞரை நியமிப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்'' என்றார்.


Click it and Unblock the Notifications
