'கங்கை பிக்னிக் ஸ்பாட் அல்ல'.. வாரணாசிக்கு இந்துக்களை தவிர யாரும் வரக்கூடாது.. பரபர போஸ்டர்..சர்ச்சை
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கங்கை நதிக்கரையில் அமைந்துள்ள வாரணாசி ஆன்மிக தலைநகராக விளங்கி வருகிறது. காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் பெருகி கிடக்கின்றன.
இது தவிர பழங்கால கட்டிடங்கள் நிறைந்த வாரணாசி சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்கி வருகிறது. இதனால் மத வேறுபாடுகளை களைந்து பல்வேறு தரப்பினரும் கங்கையின் அழகை ரசிக்க வாரணாசிக்கு படையெடுத்து வருகின்றனர்.

அழகிய வாரணாசி நகரம்
குறிப்பாக இங்குள்ள மலைப்பகுதிகளில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து
பல மணிநேரம் செலவழிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்..இந்த நிலையில் வாரணாசி மலைப்பகுதிகளில் இந்துக்கள் அல்லாதவர்கள் செல்லக்கூடாது என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பலரும் அதிர்ச்சி அடைந்டுள்ளனர்.

இந்துக்கள் அல்லாதவர்கள் வரக்கூடாது
இந்து அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் ஒட்டியுள்ளதாக கூறப்படும் இந்த போஸ்டரில் ''கங்கை பிக்னிக் ஸ்பாட் அல்ல; 'சனாதன்' கலாச்சாரத்தின் சின்னம். இந்துக்கள் அல்லாதவர்கள், மலைக்கோவில், கோவில்களுக்கு வரக்கூடாது. இது ஒரு வேண்டுகோள் அல்ல, ஒரு எச்சரிக்கை என்று போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது வேண்டுகோள் அல்ல, எச்சரிக்கை
இது தொடர்பாக பஜ்ரங் தளத்தின் நகர ஒருங்கிணைப்பாளர் நிகில் திரிபாதி 'ருத்ரா' கூறுகையில், 'இந்த சுவரொட்டிகள் மூலம் மலையை 'பிக்னிக் ஸ்பாட்'களாகக் கருதுபவர்களுக்கு 'தெளிவான' செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. கங்கை பிக்னிக் ஸ்பாட் அல்ல, 'சனாதன்' கலாச்சாரத்தின் சின்னம் என்பதால், கங்கையில் இருந்து விலகி இருக்குமாறு அவர்களை எச்சரிக்கிறோம்' என்று கூறினார்.

சனாதன தர்மத்தின் மீது மரியாதை வேண்டும்
''சனாதன தர்மத்தின் மீது மரியாதை இல்லாதவர்கள் கோவில்களுக்கு வரக்கூடாது. அவர்கள் சனாதன தர்மத்திற்கு மரியாதை காட்டினால் நாங்கள் அவர்களை வரவேற்போம்'' என்று விஷ்வ ஹிந்து பரிஷத் நகரச் செயலர் ராஜன் குப்தா தெரிவித்தார். இந்த சர்ச்சைக்குரிய போஸ்டர் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு
ஜனநாயக நாட்டில் இருக்கும் எங்கு செல்லவும் உரிமை உண்டு. இந்த செயல் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சில இந்து அமைப்புகளின் இந்துக்கள் அல்லாதோர்கள் மீதான வெறுப்பை காட்டுகிறது என்று பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளை கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications