பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் ஹேக்?..நடந்தது என்ன?.. விசாரணையில் பரபர தகவல்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முடிவுடன் காங்கிரஸ் கட்சி படுவேகமாக களத்தில் இறங்கியுள்ளது.
இதற்கான பணிகளை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வாதோரா ஒரு ஆண்டுக்கு முன்பாகவே உ.பி.யில் முகாம் இருக்க தொடங்கி விட்டார். அங்குள்ள மக்களுக்கு தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்து வரும் அவர் மாநில அரசை கடுமையாக எதிர்த்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக்
இந்த நிலையில் தனது குழந்தைகளான 18 வயது மிராயா வத்ரா மற்றும் 20 வயதான ரைஹான் வத்ரா ஆகியோரின் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அரசு வேண்டுமன்றே ஹேக் செய்து விட்டதாக பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக கூறிய அவர், ''என் குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகளையும் ஹேக் செய்கிறார்கள். இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா? அரசியல் எதிரிகள் மீது வருமான வரித்துறை உள்ளிட்ட ஏவி விடுவது, சட்டவிரோத தொலைபேசி கண்காணிப்பு போன்றவை நடக்கிறது' என்று பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

தானாகவே முன்வந்து விசாரணை
ஆனால் தனது குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக பிரியங்கா காந்தி முறையான புகார் ஏதும் கொடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரத்தை அரசு கவனத்தில் கொண்டு, தானாகவே முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது தொடர்பாக ஹேக்கர்களைக் கண்டறிந்து சைபர் தாக்குதல்களைத் தடுக்கும் ஆய்வகமான CERT-In நிறுவனத்திடம் விசாரணை நடத்த கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஹேக் செய்யப்படவில்லை
இந்த நிலையில் CERT-In நிறுவனம் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி பிரியங்கா காந்தி குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன. இது தொடர்பாக ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவில் பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்
இது தொடர்பாக அப்போது பரபரப்பு புகார் கூறிய காங்கிரஸ் எம்.பி ராமுல் காந்தி, ' எனது எல்லா தொலைபேசிகளும் ஒட்டு கேட்கப்படுகிறது. இது தெளிவாக திட்டமிட்டு செய்யப்படுகிறது'' என்று கூறினார். பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
