தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரி! வெரைட்டி ரைஸ் உணவு! அதிமுக மாநாடு நிகழ்ச்சி நிரல் என்ன?
மதுரை: மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டில் தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரியும் இடம் பெற்றிருக்கிறது.
அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமி நடத்தும் முதல் மாநாடு என்பதால் மதுரை மாநாடு அரசியல் களத்தில் கவனம் ஈர்த்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்று எவ்வளவு பேர் திரள்கிறார்கள் என்பதை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தரப்பு மிகவும் உன்னிப்பாக கவனிக்க காத்திருக்கிறது.

அதுமட்டுமல்ல பாஜக தேசியத் தலைமையும் அதிமுக மாநாட்டை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறது. இதனால் பிரெஸ்டீஜ் பிராப்ளமாக கருதும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக மாநாடுக்கு லட்சக்கணக்கில் தொண்டர்களை அழைத்து வர திட்டமிட்டுள்ளார்.
ஞயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் அதிமுக மாநாட்டை தொடங்கி வைக்கும் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார். அதைத் தொடர்ந்து 10 மணிக்கு விடுதி அறைக்கு திரும்பும் அவர் அங்கு ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் மாலை மாநாடு திடலுக்கு செல்கிறார்.
அப்போது தான் அவர் பேரூரை ஆற்றவுள்ளார். இதனிடையே இடைப்பட்ட நேரத்தில் அதிமுக மாநாட்டு மேடையில் பல்வேறு தலைப்புகளில் அதிமுக முக்கிய பிரமுகர்கள் உரை நிகழ்த்துவதோடு தேனிசைத் தென்றல் தேவாவின் இசைக்கச்சேரியும் நடைபெறவுள்ளது. இந்த இசைக்கச்சேரியின் ஹைலைட்டாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் பங்கேற்று பாடல்கள் பாடவுள்ளார்.
அதேபோல் காலை மாலை இரவு என மூன்று வேளையும் வெரைட்டி ரைஸ் உணவுகள் 350 கவுண்ட்டர்களில் வழங்கப்படுகின்றன. உணவு சமைப்பதற்கும் அதனை விநியோகம் செய்வதற்கும் மட்டும் 10,000 பேர் தனியாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications