மதுரை நீதிமன்றத்தில் கைதி தப்பியோட்டம்.. 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சில நிமிடத்தில் எஸ்கேப்
மதுரை: போதைப்பொருள் வழக்கில் கைதாகியிருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற கைதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து இன்று திடீரென்று தப்பியோடினார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவருக்கு இன்று 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் அவர் தப்பியோடிய நிலையில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையை சேர்ந்தவர் ராஜா. இவர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2024ம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு மதுரை மாவட்டம் போதைப்பொருள் தடுப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணடை முடிவடைந்தது.
வழக்கில் ராஜா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதோடு இன்று அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதனால் ராஜாவை போலீசார் சிறையில் இருந்து மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி சுதாகர், குற்றவாளி ராஜாவிற்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து போலீசாருடன் நீதிமன்ற வளாகத்தில் ராஜா இருந்தார். அப்போது திடீரென்று அவர் அங்கிருந்து தப்பினார். போலீசாருக்கு தெரியாமல் நைசாக நழுவி ராஜா நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடினார்.
ராஜா மாயமானதை அறிந்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை தேடும் பணியை தீவிரமாக தொடங்கி உள்ளனர். உடனடியாக மதுரை மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம், பெரியார் பேருந்து நிலையங்களுக்கு போலீசார் விரைந்து அவரை கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தற்போது வரை வர் போலீசாரிடம் சிக்கவில்லை.
தமிழகத்தில் சமீபத்தில் அடுத்தடுத்து கைதிகள் தப்பியோடும் சம்பவங்கள் நடந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தான் தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடினர். அதன்பிறகு சென்னை புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடினர். இப்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்தே தண்டனை கைதி ராஜா தப்பியோடி உள்ளார். இதனால் கைதிகள் தப்பியோடுவதை காவல்துறை தடுத்து நிறுத்துவது எப்போது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரையில் கைதி தப்பியோடிய சம்பவம் தொடர்பாக தவெக அரசை பாஜகவின் வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ''மீண்டும் மீண்டுமா? கைதிகள் தப்பிக்கும் தொடர்கதைக்கு முற்றுப்புள்ளி எப்போது?
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதை தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ராஜா என்ற கைதி தீர்ப்பு நாளில் காவலர்களின் கண்காணிப்பை மீறி தப்பி ஓடியதாகக் கூறப்படும் செய்தி சிறைத்துறையின் அலட்சியத்தினை மீண்டும் நிரூபித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அரங்கேறுவது தவெக ஆட்சியில் காவல்துறை மற்றும் சிறைத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டையே அம்பலப்படுத்துகிறது.
குற்றம் நிரூபிக்கப்படாத அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் லாக்கப் மரணம் கொண்டு செல்லும் காவல்துறையும், சிறைத்துறையும் குற்றவாளிகளை தப்ப விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது பொதுமக்களுக்கு காவல்துறையின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையையும் சிதைத்திருக்கிறது ஒவ்வொரு திட்டத்திற்கும் 'வெற்றி' எனப் பெயர் சூட்டும் தவெக அரசு, கைதிகள் தப்பியோடும் இந்தத் தொடர் சம்பவங்களுக்கும் 'வெற்றி ஓட்டம்' என்று பெயர் சூட்டிக் கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும்'' என சாடியுள்ளார்.


Click it and Unblock the Notifications
