மொத்த பவரையும் இறக்கி.. ஆபரேசன் திருமங்கலம்! களத்தில் குதித்த டாக்டர்.சரவணன்! தலையசைக்குமா தவெக?
மதுரை: முன்னாள் எம்எல்ஏவும் மருத்துவருமான மதுரை டாக்டர்.சரவணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாகவே திருமங்கலம் சட்டமன்ற தொகுதியை குறிவைத்து தவெக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில், அந்த பொறுப்பை குறி வைத்து வேலை செய்து வருகிறார் சரவணன் என்கிறனர். ஏற்கனவே அந்த தொகுதியில் தவெகவினர் மூன்று கோஸ்ட்டிகளாக செயல்பட்டு வரும் நிலையில் சரவணன் வேறு ப்ளானை கையில் வைத்துள்ளாராம்.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது. அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய பிரபலங்களும், முன்னாள் அமைச்சர்களும், ஏன் எம்எல்ஏக்கள் கூட தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைந்தனர்.
அந்த வகையில் அதிமுகவிலிருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்தவர் தான் டாக்டர் சரவணன். திமுக எம்எல்ஏவான இவர் அங்கிருந்து பாஜகவில் இணைந்தார். மதுரை ஏர்போர்ட்டில் பிடிஆருக்கு எதிராக நடந்த ஒரு சம்பவத்தை அடுத்து அதிமுகவில் இணைந்தார்.

டாக்டர் சரவணன்
நாடாளுமன்ற தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்தும் முன்னாள் அமைச்சர்களின் உள்குத்து வேலையால் வெற்றி வாய்ப்பை தவற விட்டார். இதை அடுத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கினார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நேரத்தில் விஜய் அலையால் மதுரையை ஸ்வீப் செய்தது தவெக. இதையடுத்து கடந்த மே மாதம் அதிமுகவிலிருந்து விலகிய டாக்டர் சரவணன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
தமிழக வெற்றிக் கழகம்
திமுகவில் இருந்த போதும் பாஜகவில் இருந்த போதும் பணம் செலவழிப்பதை ஒரு பொருட்டாகவே சரவணன் எடுத்துக் கொண்டது கிடையாது. மேலும் அவருக்கு என தனி ஆதரவாளர் வட்டம் இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் போஸ்டர் அடிப்பதும் அவரது ஸ்டைல். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த பின்னரும் அதே பாணியை கடைப்பிடித்து வருகிறார். பேப்பர் விளம்பரம், போஸ்டர் என பணத்தை தண்ணியாக செலவு செய்து வருகிறார்.
மதுரை தவெக
மதுரையில் ஏற்கனவே அமைச்சர் ஆசையில் பலர் இருக்கின்றனர். அதே நேரத்தில் சிடிஆர் நிர்மல் குமார் முழுமையாக கட்சியை கண்ட்ரோலில் எடுத்திருக்கும் நிலையில் கல்லாணை உள்ளிட்ட சிலர் கடுப்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருகிறார் டாக்டர் சரவணன்.
சமுதாய வளைகாப்பு
கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளிக்குடியில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிலையில், டாக்டர்.சரவணன் 150 கர்ப்பிணி பெண்களுக்கு பட்டுச்சேலை வளையல் அடங்கிய தாம்பூலத்தை வழங்கினார். மேலும் இது தொடர்பான செய்தி, ஊடகங்கள் மூலம் வெளிவந்த நிலையில் தலைமை சற்று அவரை கவனிக்க தொடங்கி இருக்கிறது.
ஆர்பி உதயக்குமார்
தற்போது திருமங்கலம் தொகுதியை பொருத்தவரை திமுகவின் மணிமாறனும், அதிமுகவின் ஆர்பி உதயக்குமாரும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இதை அடுத்து இவர்களை சமாளிக்கும் வகையில் ஆள் பலமும் பணபலமும் கொண்ட ஒருவரை தான் மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டுமென தவெக தலைமை விரும்புகிறது. தொண்டர்களின் எண்ணமும் அதே போல் தான் இருக்கிறது.
திமுக மணிமாறன்
இந்த நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என நினைக்கும் சரவணன் ஒட்டுமொத்தமாக தனது பவரை இறக்கி பணியாற்றி வருகிறார் என்கின்றனர் மதுரை புள்ளிகள். இதனால் மணிமாறனுக்கும் உதயகுமாருக்கும் போட்டியை தர முடியும் என அவர் தரப்பு வரும் நினைக்கிறது. அது மட்டுமல்லாமல் சரவணனின் தந்தையும் தாயும் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த உறவினர்கள் ஏராளமானோர் அங்கு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
திருமங்கலம் தொகுதி
மேலும் திருமங்கலம் தொகுதியில் ஒன்றிய, நகர, நிர்வாக பொறுப்புகளில் இருப்போர் கிராமப்புற சூழ்நிலை சார்ந்தவர்கள். பெரிய அளவிலான வருவாய் ஆதாரங்கள் இல்லாத நிலையில் டாக்டர் சரவணன் அதையும் சரி கட்டி விடுவார் என சொல்லிக் கொள்கின்றனர். இப்படி ஒட்டுமொத்தமாக பவரை இறக்கி திருமங்கலத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என டாக்டர் சரவணன் முயன்று வரும் நிலையில், எதிர் தரப்பு என்ன செய்யப் போகிறது என்பதுதான் மதுரையில் பேசுபொருளாக இருக்கிறது.





Click it and Unblock the Notifications
