ரஜினிகாந்த் பாஜகவின் பி டீமா?.. தமிழக பாஜக தலைவர் எல் முருகன் விளக்கம்
மதுரை: ரஜினிகாந்த் பாஜகவின் பி டீமா என்ற கேள்விக்கு தமிழக பாஜக தலைவர் எல் முருகன் பதில் அளித்துள்ளார்.
பாஜகவின் தமிழக தலைவர் எல் முருகன் வேல்யாத்திரையை முடித்தார். இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் தமிழக பாஜக சார்பில் மோடி விவசாயிகளின் நண்பன் என்ற இயக்கம் இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தில் பாஜக கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப்படவுள்ளது. புதிய வேளாண் திருத்தச் சட்டத்தை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.

வேளாண் சட்டம்
தமிழகத்தில் ஒரு சிலரை தவிர்த்து அனைவரும் வேளாண் சட்ட திருத்த மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளார். வேளாண் சட்ட திருத்த மசோதாவில் விவசாயிகளே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்பனை செய்ய முடியும். தற்போதைய வேளாண் சட்டத்தின்படி விவசாயிகள் நேரடியாக ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளது.

வேளாண் துறை அமைச்சர்
2010-ஆம் ஆண்டு தற்போதைய வேளாண் சட்ட திருத்த மசோதாவில் உள்ள திட்டத்தை அப்போதைய மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் காங்கிரஸ், திமுக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தார்கள். ஆனால் தற்போது திமுக, காங்கிரஸ் போலி கோஷமிட்டு வேளாண் திருத்த சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வருகிறார்கள்.

சீர்திருத்தம்
2014-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில், தெரிவித்த திட்டத்தை தற்போது பாஜக அரசு லேளாண் சட்ட திருத்த மசோதாவில் வழங்கியுள்ளது. தற்போது திமுக இரட்டை வேடமிட்டுள்ளது மக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாய சீர்திருத்த சட்டங்கள் பலனளிக்கும்.

திமுகவினர்
தமிழகத்தில் பாரத்பந்த் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் திமுகவினர் வணிகர்களை மிரட்டி கடைகளை மூட வலியுறுத்தி வருகிறார்கள். இதனால் பாஜகவுக்கு பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக விவசாயிகள் திசை திருப்பி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

கட்சி தொடக்கம்
ரஜினிகாந்த் ஜனநாயக முறைப்படி கட்சி தொடங்குகிறார். ரஜினி தனது சொந்த விருப்பப்படி கட்சி தொடங்க உள்ள நிலையில் அவர் பாஜகவின் பி டீம் என எப்படி சொல்ல முடியும். கூட்டணி முடிவை பாஜகவின் தலைமை முடிவு செய்யும் என எல் முருகன் தெரிவித்துள்ளார்.