தேமுதிக வருகையால் திமுக கூட்டணிக்கு இப்படி ஒரு பிரச்சனையா? மதுரையில் நடக்கும் தொகுதி குஸ்தி!
சென்னை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளை பெறுவதில் திமுக கூட்டணி கட்சிகள் இடையே பெரும் போட்டியே நடப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக, தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்த பின்னர், அக்கட்சி 2 தொகுதிகளை மதுரையில் எதிர்பார்ப்பதால், திமுக கூட்டணிக்குள் குஸ்தி நடக்கிறது.
மதுரை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டசபைத் தொகுதிகளில் கடந்த முறை திமுக, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, வடக்கு, சோழவந்தான் மற்றும் தெற்கு ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில், மதுரை தெற்கில் மதிமுகவின் பூமிநாதன் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்றார். ஆனால், அதிமுக தனிப்பெரும் கட்சியாக மதுரை மாவட்டத்தில் 5 தொகுதிகளைக் கைப்பற்றியது.

மதுரை அதிமுகவுக்குச் செல்வாக்கான மாவட்டம் என்பதால் இந்த முறையும் திமுகவுக்கு அக்கட்சி கடும் டஃப் ஃபைட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தேமுதிக, தற்போது திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. திமுக கூட்டணியில் சேர்ந்துள்ள தேமுதிக, விரும்பிக் கேட்பதில் திருப்பரங்குன்றம், மதுரை மத்தி ஆகிய தொகுதிகள் உள்ளன.
மதுரை மத்தி, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி என்பதால் திமுக அதை உறுதியாக விட்டுக்கொடுக்காது. அதற்கு அடுத்த தேர்வாக தேமுதிகவுக்கு திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. கடந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வியடைந்தது.
இந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மதுரை மேற்கு தொகுதியை குறி வைத்துள்ளது. திருப்பரங்குன்றத்திற்கு பதிலாக மதுரை மேற்கு அல்லது மதுரை தெற்கு தொகுதிகளில் ஒன்றைக் கேட்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேசமயம், மதுரை தெற்கு தொகுதியை மதிமுக எம்எல்ஏ பூமிநாதனுக்காக அக்கட்சி கேட்டுள்ளது.
தேமுதிகவுக்கு திருப்பரங்குன்றம் ஒதுக்கும் பட்சத்தில் திமுக மேலிடம், மதுரை மேற்கை மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்புள்ளது. அதேபோல், காங்கிரஸ் கட்சி மதுரை வடக்கை குறி வைத்து வருகிறது. கவுன்சிலர் கார்த்திகேயனுக்காக மதுரை வடக்கு தொகுதியைக் கேட்கிறார் மாணிக்கம் தாகூர். எந்த தொகுதியில் நிற்கிறோமோ இல்லையோ மதுரை வடக்கு வேண்டும் என தீவிரமாக இருக்கிறார் அவர்.
ஆனால், மதுரை மாநகர திமுக மாவட்டச் செயலாளர் தளபதி சிட்டிங் எம்.எல்.ஏவாக இருக்கும் தொகுதி என்பதால் மதுரை வடக்கு காங்கிரஸுக்கு கிடைப்பது கடினமே. ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு மதுரை வடக்கை விட்டுக்கொடுத்தால் தளபதி, மதுரை மேற்கில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அப்படி நடந்தால் மதுரை மேற்கு மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைக்காது.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2021 தேர்தலைப் போல, மேலூர் தொகுதியை ஒதுக்கினால், தளபதி மீண்டும் மதுரை வடக்கில் போட்டியிடுவார். மதுரை மாநகர், மதுரை தெற்கு மாவட்டங்களில் நீடிக்கும் உட்கட்சிப் பூசல் காரணமாக களத்தில் திமுகவுக்கு ஈஸியான நிலை இல்லை எனக் கூறப்படுகிறது. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுகவின் கொட்டத்தை தடுக்கவே தேமுதிகவை கூட்டணியில் உறுதியாக நின்று சேர்த்ததாகவும் கூறப்படுகிறது.
தேமுதிகவை சேர்ப்பதன் மூலம் தென் மாவட்டங்களிலும் வாக்கு பலம் அதிகரிக்கும் அதேசமயம், தேமுதிக கேட்கும் தொகுதிகளால், கூட்டணிக்குள் பல குழப்பங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகள் கேட்கும் இடங்களை கொடுப்பதில் இழுபறி ஏற்படலாம் என இப்போதே திமுக வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications