ஆஹா..அற்புதம்..ட்விட்டரில் குவியும் பாராட்டு..இந்திய அளவில் ட்ரெண்ட் ஆன காலை சிற்றுண்டி திட்டம்
மதுரை: தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டம் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. அரசு பள்ளிகளில் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது மாணவர்களுடன் அமர்ந்து அவர் காலை உணவு சாப்பிட்டார்.
காலை உணவு சாப்பிடாமல் பல மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். 1 முதல் 5ஆம் வகுப்பு படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தாங்கள் பெற்ற பிள்ளைகளுக்குச் சமைப்பதில் எடுத்துக் கொள்கிற சிரத்தையோடு, தங்கள் அன்பைக் கொட்டி, தூய்மையுடன் உணவைப் பரிமாற களப்பணியாளர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காலை உணவு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார் முதல்வர் ஸ்டாலின்

பசிப்பிணி
இளமையும் வறுமையும் பசியோடு இருப்பதும் கொடுமையானது. பல மாணவர்கள் பசித்த வயிறோடு பள்ளிக்கு வருகின்றனர். வறுமை கல்வியை பாதிக்கக் கூடாது என்பதற்காகவே மதிய உணவுத் திட்டம், சத்துணவு திட்டம் தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஒருவேளை உணவு கிடைக்கிறதே என்று பல மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.

முட்டை, கலவை சாதம்
வெள்ளை சாதமும் சாம்பாரும் கொடுக்கப்பட்ட மதிய உணவில் முட்டை சேர்க்கப்பட்டது. பின்னர் கலவை சாதம், உருளைக்கிழங்கு, சுண்டல், பாசிப்பயறு சேர்த்து மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. சத்தானதாகவும், சுவையானதாகவும் உணவு கொடுக்க வேண்டும் என அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்கள் உத்தரவிட்டனர்.

காலை சிற்றுண்டி
பல பெற்றோர்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால் காலையில் சாப்பிடாமலேயே பல மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர். அதிலும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால் பலர் மயக்க நிலைக்கு செல்கின்றனர். இதுபோன்ற மாணவர்களுக்காகவே காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

காலை சிற்றுண்டி யாருக்கு?
தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஒன்று முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊட்டி விட்ட முதல்வர் ஸ்டாலின்
முன்னாள் முதல்வர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டை ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். அப்போது, மாணவர்களுடன் அமர்ந்து முதல்வர் ஸ்டாலினும் காலை சிற்றுண்டியை உண்டார். மேலும், அருகில் இருந்த மாணவ-மாணவியருக்கு அவர் சிற்றுண்டியை ஊட்டிவிட்டார்.

ட்விட்டரில் ட்ரெண்ட்
காலையில் பள்ளி மாணவர்கள் உணவு சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதை அறிந்து, இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த சூழலில் ட்விட்டரில் இந்திய அளவில் தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் ட்ரெண்டாகியுள்ளது. #TNBreakfast எனும் ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

காலை உணவுத் திட்டம்
ஆஹா அற்புதம் என்று பலரும் பாராட்டி வரும் நிலையில் காலை சிற்றுண்டி திட்டம் குறித்து அனைவருக்கும் சென்று சேரும் வகையில் கார்டூன் வடிவத்தில் வடிவமைத்துள்ளனர். சில சம்பவங்கள் செய்தியாக வந்து மறைந்து விடும். சில சம்பவங்கள் மட்டுமே சரித்திரமாகும். இந்த காலை சிற்றுண்டி திட்டம் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது என்றால் மிகையாகாது.












Click it and Unblock the Notifications