ராகுலின் நடைப்பயணத்தை தடுக்கவே கொரோனா ரிலீஸ்.. மத்திய அரசு மீது உத்தவ் சிவசேனா சுளீர் குற்றச்சாட்டு
மும்பை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே, கொரோனா வைரஸை மத்திய அரசு பரவ விட்டுள்ளதாக சிவசேனா கட்சி (உத்தவ் அணி) கூறியிருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
கொரோனா பரவலை காரணம் காட்டி ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை ரத்து செய்யுமாறு மத்திய அரசு கடிதம் எழுதிய நிலையில், இந்தக் குற்றச்சாட்டை சிவசேனா வைத்துள்ளது.
மேலும், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் மக்கள் ஆதரவு பெருகி வருவதை பார்த்தும் பாஜகவும், பிரதமர் மோடியும் பயப்படுவதாகவும் சிவசேனா கூறியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் கொரோனா பீதி
கொரோனா பெருந்தொற்று இத்துடன் முடிந்துவிட்டது என இந்தியா நிம்மதி அடைந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. வைரஸ் காய்ச்சலுக்கு அங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். மருத்துவமனைகள் நோயாளிகளாலும், இடுகாடுகள் சடலங்களாலும் நிரம்பி வழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, சீனாவில் பரவி வரும் ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், குஜராத் மற்றும் ஒடிசாவில் கண்டறியப்பட்டுள்ளதால் இந்தியாவிலும் கொரோனா பீதி ஏற்பட்டுள்ளது.

ராகுல் காந்திக்கு கடிதம்
இது ஒருபுறம் இருக்க, ராகுல் காந்தியின் பாரத் ஜோடா நடைப்பயணம் ராஜஸ்தானில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு ராகுல் காந்தியுடன் ஆயிரக்கணக்கானோர் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர். இதனிடையே, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ராகுல் காந்திக்கும், ராஜஸ்தான் அரசுக்கும் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். அதில், "சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் இந்தியாவிலும் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதாக இருந்தால் நடைப்பயணத்தை தொடருங்கள். முடியவில்லை என்றால் நடைப்பயணத்தை ரத்து செய்யுங்கள்" என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிவசேனா அட்டாக்
இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து சிவசேனாவின் (உத்தவ் தாக்கரே அணி) அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் இன்று கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடைப்பயணத்தின் 100 நாட்களை நிறைவு செய்துள்ளார். அவருக்கு செல்லும் இடங்கள் எல்லாம் மக்கள் ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு அதிகரிப்பதை பார்த்தும் பாஜகவினரும், பிரதமர் நரேந்திர மோடியும் பயப்படுகிறார்கள். அதனால்தான், ராகுலின் நடைப்பயணத்தை தடுத்து நிறுத்துவதற்கான செயல்களில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால், எதுவும் பலன் அளிக்காததால் கடைசி அஸ்திரமாக கொரோனா வைரஸை மத்திய அரசு பரப்பிவிட்டுள்ளது. அரசின் செயல்களை பார்க்கும் போது இப்படிதான் தோன்றுகிறது. கொரோனா அச்சத்தால் மத்திய அரசு இவ்வாறு கூறுகிறது என்றே வைத்துக் கொள்வோம். அப்படியெனில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த போது அன்றைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை குஜராத்துக்கு அழைத்து, லட்சக்கணக்கானோரை கூட செய்தது யார்? இதே மத்திய அரசுதானே. அப்போது உங்கள் கொரோனா விழிப்புணர்வு எங்கு போனது? இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications