நாகூர் தர்காவுக்கு அரசு சார்பில் கட்டணமின்றி 45 கிலோ சந்தனைக் கட்டைகளை வழங்கினார் முதல்வர் விஜய்!
சென்னை: நாகூர் சந்தனக் கூடு திருவிழாவுக்கு 45 கிலோ சந்தனக் கட்டைகளை வழங்குவதற்கான அரசாணையை அறங்காவலர்களிடம் நேரில் வழங்கினார் முதலமைச்சர் விஜய்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள நாகூர் ஆண்டவர் தர்கா, இஸ்லாமியர்கள் மட்டுமின்றி இந்துக்களும் வழிபடும் புகழ்பெற்ற தலம். இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள சாகுல் ஹமீது ஆண்டவரின் நினைவாக ஆண்டுதோறும் கந்தூரி விழா நடைபெறுகிறது.

இந்த ஆண்டு 470-வது கந்தூரி விழா நவம்பர் 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள். ஊர்வலமாகக் கொண்டுவரப்படும் சந்தனம் நாகூர் ஆண்டவர் சமாதியில் பூசப்படும்.
நாகூர் தர்காவின் கந்தூரி விழாவுக்காக தமிழக அரசு ஆண்டுதோறும் சந்தனக்கட்டைகளை இலவசமாக வழங்கி வருகிறது. இதற்கான அரசாணையை தமிழக முதல்வரிடம் இருந்து தர்கா நிர்வாகிகள் பெற்றுக்கொள்வது வழக்கம்.
இந்த ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் சந்தனக்கட்டைகளுக்கான அரசாணையை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை தர்காவின் வழக்கமான நிர்வாகிகளுடன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையும் சேர்த்து அரசாணையை வழங்க முயற்சி நடப்பதாக தர்கா நிர்வாகிகள் குற்றம்சாட்டினர்.
நாகூர் தர்காவின் சந்தனக்கூடு விழாவுக்கு தமிழக அரசு வழங்கும் சந்தனக்கட்டைகள் தொடர்பான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார். அரசு சார்பில் வழங்கப்படும் சந்தனத்தை வாங்க மாட்டோம் என்று தர்கா நிர்வாகம் நிராகரித்ததாக வந்த செய்திகள் தவறானவை என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தலைமைச் செயலகத்தில், இந்த ஆண்டிற்கான நாகூர் தர்கா பெரிய ஆண்டவர் கந்தூரி சந்தனக்கூடு திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு 45 கிலோ சந்தனக்கட்டைகளைக் கட்டணமின்றி வழங்குவதற்கான அரசாணையினை நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் எச்.ஹாஜா நஜுமுதீன் சாஹிப் மற்றும் அறங்காவலர்களிடம் வழங்கினார்.



Click it and Unblock the Notifications
