உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்த சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு! பரிசுகளை வெல்ல நடந்த மல்லுகட்டு!
உதயநிதியுடன் நாமக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகள் குடும்பத்தினர் குழு புகைப்படம்.
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேந்தமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குறைந்த எண்ணிக்கையிலான காளைகள் மட்டுமே இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நிலையிலும் பரிசுகளை வெல்வதற்கு இளம் காளையர்கள் மத்தியில் பெரிய மல்லுக்கட்டே நடந்தது.
இதனிடையே சேந்தமங்கலத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏ.வின் பேரன் திருமணத்தை நடத்தி வைத்த உதயநிதி, உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வரும் கட்சி நிர்வாகிகளின் இல்லம் தேடிச் சென்று அவர்களிடம் நலம் விசாரித்தார்.

நாமக்கல் மாவட்டம்
நாமக்கல் மாவட்டத்திற்கு அண்மையில் தான் உதயநிதி ஸ்டாலின் வந்துவிட்டுச் சென்றார். இந்நிலையில் ஒரு மாதம் கூட முழுமையாக ஆகாத நிலையில் இரண்டாம் விசிட்டை இன்று அடித்திருக்கிறார். நாமக்கல் நகராட்சி பள்ளியில் காலை சிற்றூண்டித் திட்டத்தை ஆய்வு செய்த அவர் பள்ளி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து டிஃபன் சாப்பிட்டார். அதைத் தொடர்ந்து சேந்தமங்கலம் புறப்பட்டுச் சென்ற அவர் அங்கு ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

ஜல்லிக்கட்டு
இந்த ஜல்லிக்கட்டில் சொற்ப எண்ணிக்கையிலான காளைகள் மட்டுமே பங்கற்றன. அதேபோல் மாடு பிடி வீரர்களும் பெரியளவில் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை. சிறிது நேரம் மட்டும் மேடையில் அமர்ந்து ஜல்லிக்கட்டை பார்த்த உதயநிதி அங்கிருந்து புறப்பட்டு சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுச்சாமி இல்ல மணவிழாவில் கலந்துகொண்டு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

நிர்வாகிகள் குடும்பத்தினர்
அதைத் தொடர்ந்து உடல்நலம் குன்றி சிகிச்சையில் இருந்து வரும் திமுக நிர்வாகிகளை சந்தித்த உதயநிதி பல்வேறு இடங்களில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வாக உதயநிதி ஸ்டாலினுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்களின் குடும்பத்தினர் தனித் தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதுவரை வேறு எந்த மாவட்டத்தில் நடக்காத நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

பூஸ்ட் அப்
மொத்தத்தில் உதயநிதி ஸ்டாலினின் இந்த சுற்றுப்பயணம் கட்சி நிர்வாகிகளுக்கு பூஸ்ட் அப் கொடுக்கும் வகையில் இருந்தது. கடந்த முறை நாமக்கல் சென்றிருந்த போது அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் முழுமையாக கலந்துகொண்ட உதயநிதி, இன்று கட்சி சார்ந்த நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொண்டார்.












Click it and Unblock the Notifications