4400 கோடி டிரம்பின் கட்சிக்காக செலவு செய்த எலான் மஸ்க்.. தோல்வியால் கையைவிட்டு போன 2.7 லட்சம் கோடி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க இடைத்தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக ரூ.4,400 கோடி செலவிட்ட மஸ்க்கிற்கு பெரிய அடி விழுந்துள்ளது. நிறுவனப் பங்குகளின் சரிவு காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.2.7 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் மதிப்பிட்டிருக்கிறது. இந்த சூழலில் அமெரிக்கர்கள் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி சமூக வலைதளங்களில் வெளியிட்ட பதிவுகளை வெளியிட்ட உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் அடுத்தடுத்து நீக்கி வருகிறார்.

Elon Musk us trump

அக்டோபர் 29ஆம் தேதி மஸ்க் வெளியிட்ட ஒரு பதிவு, அவரது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் முதன்மைப் பதிவாக வைக்கப்பட்டிருந்தது. அதில், குடியரசுக் கட்சியின் செனட் உறுப்பினர்களுக்கு ஆதரவாக அமெரிக்கர்கள் வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் வைத்திருந்தார். ஆனால் டெக்சாஸ் மாகாண செனட் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜேம்ஸ் தலரிகோ வெற்றி பெற்றதாக அறிவித்த அதே நேரத்தில், புதன்கிழமை அதிகாலையில் மஸ்க் அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த வெற்றியின் மூலம், மஸ்க்கின் வலுவான ஆதரவைப் பெற்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் கென் பாக்ஸ்டன் தோல்வியடைந்தார்.

எலான் மஸ்க் தனது தேர்தல் தொடர்பான பதிவுகளை நீக்குவதை சமூக வலைதளத்தில் பலரும் கவனித்துள்ளனர். இது தொடர்பாகப் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, மஸ்க்கின் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டான குரோக் (Grok), 'உண்மை' என்று பதிலளித்தது. தேர்தல் முடிவுகளில் குடியரசுக் கட்சி பெரும் தோல்விகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, 'Vote red today!' (இன்று குடியரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்!) என்ற பதிவை மஸ்க் நீக்கியுள்ளதாகவும் குரோக் தெரிவித்தது.

குடியரசுக் கட்சியின் தோல்வி குறித்து மஸ்க் கருத்து

கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தல் தொடர்பாக மஸ்க் நேரடியாக மிகக் குறைவான கருத்துகளையே வெளிப்படுத்தி இருந்தார். குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற அவரது வேண்டுகோள், குரோக் தொடர்பாக அவர் வெளியிட்ட பல பதிவுகளில் ஒன்றாக இருந்தது. ஆனால், புதன்கிழமை காலை தேர்தல் முடிவுகளைப் பகுப்பாய்வு செய்யும் வகையில் பல பதிவுகளை அவர் பகிர்ந்தார்.

பின்னர், 'தேர்தலில் தலையிடுவதற்காக நான் பயன்படுத்திய விண்வெளி லேசர்கள் இந்த முறை வேலை செய்யவில்லை போலிருக்கிறது' என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். முன்னதாக, 'விண்வெளியில் தரவு மையங்களை (Data Centers) அமைப்பது இப்போது மிகவும் கவர்ச்சிகரமானதாகத் தெரிகிறது' என்றும் எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார்.

குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக ரூ.4,400 கோடி செலவிட்ட மஸ்க்

அமெரிக்க இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் பழமைவாத அமைப்புகளுக்கு ஆதரவாக உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் குறைந்தது 458 மில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.4,400 கோடி) செலவிட்டுள்ளதாகத் தேர்தல் நிதி தொடர்பான அமெரிக்க மத்திய தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சி தனது கட்டுப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள உதவும் வகையில், தேர்தல் பிரசாரத்தின் இரண்டாம் பாதியில் மஸ்க் தனது நிதி உதவியை அதிகரித்து இருந்தார்.

டெக்சாஸ் செனட் தேர்தல், குடியரசுக் கட்சியின் முக்கிய தேர்தல் நிதி அமைப்பான செனட் லீடர்ஷிப் ஃபண்ட் மற்றும் நியூயார்க், நியூஜெர்சி, அயோவா மாகாணங்களில் நடைபெற்ற முக்கிய பிரதிநிதிகள் சபைத் தேர்தல்கள் ஆகியவற்றுக்கு எலான் மஸ்க் அதிக நிதி வழங்கியிருந்தார். இதில் சுமார் 216 மில்லியன் டாலர்கள் அவரது சொந்த அரசியல் நடவடிக்கைக் குழுவான அமெரிக்கா பிஏசி அமைப்புக்கு நேரடியாகச் சென்றுள்ளது. இந்த அமைப்பு வாக்காளர்களைச் சந்திப்பது, தேர்தல் பணியாளர்களை நியமிப்பது மற்றும் டிஜிட்டல் விளம்பரங்கள் வெளியிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அந்த நிதியைப் பயன்படுத்தி வந்தது.

ரூ.2.7 லட்சம் கோடி சொத்து மதிப்பை இழந்த மஸ்க்

அமெரிக்க அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்பட்ட அதே நேரத்தில், எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை நிலவரப்படி அவரது சொத்து மதிப்பு 878 பில்லியன் டாலர்களாக (சுமார் ரூ.81 லட்சம் கோடி) மதிப்பிடப்பட்டது. இந்த சூழலில் அவரது நிறுவனங்களான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் பங்குகளின் விலை சரிந்ததால், ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு 23.7 பில்லியன் டாலர்கள் குறைந்தது.

ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டில் புதிய நாடாளுமன்றம் அமைந்தால், தரவு மையங்கள் கட்டுவதற்கான ஒழுங்குமுறை அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம் என்று முதலீட்டாளர்கள் கவலை தெரிவித்தனர். மஸ்க்கின் சொத்து மதிப்பில் பெரும்பகுதி இந்த நிறுவனங்களில் அவர் வைத்திருக்கும் பங்குகளின் மூலமாகவே உள்ளது.
இதற்கிடையே, தேர்தல் பின்னடைவு மற்றும் நிறுவனப் பங்குகளின் சரிவு காரணமாக எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 30 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.2.7 லட்சம் கோடி) குறைந்துள்ளதாக பைனான்சியல் டைம்ஸ் மதிப்பிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+