நாசா செய்த தவறு.. 1,900 கோடி கி.மீக்கு அப்பால் சிக்கிய வாயேஜர்-2 சாட்டிலைட்! இனி அவ்வளவுதானா?
நியூயார்க்: மனிதனால் ரொம்ப தூரத்துக்கு அனுப்பப்பட்டது இரண்டு விண்கலம்தான். அதில் இரண்டாவதுதான் இந்த வாயேஜர்-2. இது தற்போது பூமியிலிருந்து 1,900 கோடி கி.மீக்கு அப்பால் இருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் அனுப்பிய ஒரு தவறான கமான்ட் காரணமாக தற்போது அதனுடனான தொடர்பை நாசா இழந்திருக்கிறது.
இந்த உலகத்தில் மட்டுமே உயிரினங்கள் இருக்கிறது எனில் நம்மை சுற்றி இருக்கும் சூரியன், நிலவு, பிற கோள்கள், பிற நட்சத்திரங்கள், பால்வெளி, இந்த அண்டம், பிரபஞ்சம் என அனைத்தும் வேஸ்ட்தானே? என்கிற கேள்வி சயின்ட்டிஸ்களுக்கு எழுந்தது. எனவே சூரிய மண்டலத்தை தவிர வெளியில் வேறு என்னதான் இருக்கிறது? என்பதை ஆராய்ந்து பார்க்க சாட்டிலைட்டை அனுப்புவது என முடிவெடுத்தனர். அதன்படி முதலில் அனுப்பப்பட்டது வாயேஜர் -1 செயற்கைக்கோள்தான்.

இதை 1977ம் ஆண்டு அனுப்பினார்கள். இது தற்போது பூமியை விட்டு 2,400 கோடி கி.மீ தொலைவில் இருக்கிறது. தொடர்ந்து பேரண்டத்தின் விளிம்பை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அதேபோல இதை தொடர்ந்து அதே ஆண்டில் அடுத்ததாக ஏவப்பட்டதுதான் வாயேஜர் -2 சாட்டிலைட். இது தற்போது 1,900 கோடி கி.மீ-ஐ தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சயின்டிஸ்ட்கள் அனுப்பிய ஒரு தவறான கமான்ட் காரணமாக பூமியிலிருந்து அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என நாசா கூறியுள்ளது.
இது குறித்து நாசா கூறுகையில் "கடந்த 21ம் தேதியன்று பூமியிலிருந்த விஞ்ஞானிகள் தவறான கமான்ட் ஒன்றை அனுப்பியிருந்தனர். இதனால் வாயேஜர்-2 சாட்டிலைட்டின் ஆண்டனா 2 சதவிகிதம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக தொடர்பு துண்டிக்கப்பட்டது. எங்களால் தற்போது இந்த சாட்டிலைட்டை தொடர்பு கொள்ள முடியவில்லை. இருப்பினும் தொடர்ந்து முயன்று வருகிறோம். இந்த முயற்சி தோல்வியுற்றால் வரும் அக்டோபர் மாதம் வரை நாங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று கூறியுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் பூமியை விட்டு வாயேஜர்-2 விலகி போகும்போது தொடர்பு துண்டிக்கப்படாமல் இருக்க பூமியை நோக்கி அதன் ஆண்டனாவை திருப்பி வைக்க வேண்டும். இதற்காக ஏற்கெனவே அதில் புரோகிராம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே வரும் அக்டோபர் மாதம் மீண்டும் தன்னிச்சையாக இது பூமியை நோக்கி தனது ஆண்டனாவை திருப்பும். அப்போது மீண்டும் அந்த சாட்டிலைட்டுடன் தொடர்பு கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். 1,900 கி.மீக்கு அப்பால் உள்ள இந்த வாயேஜருக்கு ஏதாவது கமான்ட் கொடுத்தால் அது 18 மணி நேரத்திற்கு பின்னர்தான் அங்கு போய் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications