ஜஸ்ட் மிஸ்.. நடு வானில் யு-டர்ன் அடித்து.. நூற்றுக்கணக்கான உயிரை காப்பாற்றிய விமானி.. பரபர சம்பவம்
விமான பயணத்தில் 1000 அடி என்பது சாலை பயணத்தில் 100 அடிக்கு இணையானதாகும்.
நியூயார்க்: அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரின் விமான நிலையத்தில் FedEx நிறுவனத்தின் சரக்கு விமானம் ஒன்று 'Southwest' நிறுவனத்தின் பயணிகள் விமானத்துடன் மோதும் வகையில் நெருங்கி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் விமானங்கள் மோதாமல் நல்வாய்ப்பாக தப்பியது. இதனால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.
டெக்ஸாஸின் ஆஸ்டின் நகர விமான நிலையத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவின் மெம்பிஸ் நகரத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு 1030 கி.மீ தொலைவில் உள்ள டெக்ஸாஸின் ஆஸ்டின் நகர விமான நிலையத்திற்கு FedEx நிறுவனத்தின் போயிங் 767 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. சுமார் 1.30 மணி நேர பயணத்திற்கு பின்னர் காலை 6.40 மணியளவில் ஆஸ்டின் விமான நிலையத்திற்கு இது வந்து சேர்ந்துள்ளது.
அதேபோல ஆஸ்டின் விமான நிலையத்திலிருந்து 'Southwest' விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 எனும் பயணிகள் விமானம் மெக்சிகோவுக்கு புறப்பட தயாராக இருந்தது. பொதுவாக போயிங்க் 737 ரக விமானத்திற்கும், போயிங்க் 767 விமானத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லையென்றாலும், 737ஐ விட 767 அளவில் பெரிய விமானமாகும். எனவே இதனை டேக் ஆஃப் செய்வதற்கும் சற்று கூடுதல் நேரம் எடுக்கப்படும்.

ரன்வே 8
இப்படி இருக்கையில், நேற்று அதிகாலை சுமார் 6.40 மணியளவில் ஆஸ்டின் விமான நிலையத்தின் ஓடுபாதை எண் 8ல் FedExன் சரக்கு விமானம் தரையிறங்க அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக தயார் நிலையில் லேன்டிங் கியரை வெளியே எடுத்துவிட்டு FedEx விமானம் வந்துக்கொண்டிருந்தது. லேண்டிங் கியரை வெளியே எடுத்த பின்னர் என்ஜினின் செயல்பாடுகள் பாதியாக குறையும். மற்றொரு புறம் Southwest விமான நிறுவத்தின் பயணிகள் விமானத்திற்கும் ரன்வே 8லிருந்து புறப்பட விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் ஒருவர் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் பார்க்கிங்கிலிருந்த Southwest விமானம் ரன்வேக்கு வந்தது.

ஜஸ்ட் மிஸ்
Southwest விமானம் மெதுவாக நகர, FedEx விமானம் வேகமாக ரன்வே 8ஐ நோக்கி வேகமாக வந்துக்கொண்டிருந்தது. அப்போதுதனா் விமான கட்டுப்பாட்டு அறை இந்த தவறை உணர்ந்திருக்கிறது. கடைசி நேரத்தில் FedEx விமானத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதில், "Southwest விமானம் ரன்வே 8ல் இருக்கிறது. எனவே உங்களுக்கு தரையிறங்க அனுமதியில்லை" என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து FedEx விமானம் அவசர அவசரமாக மேலெழும்ப முயன்றது. இது மிகவும் சவாலான சூழல். ஏனெனில் ஏற்கெனவே விமானத்தின் லேண்டிங் கியர் விடுவிக்கப்பட்டுள்ளதால் என்ஜினின் செயல்பாடுகள் குறைந்து புவியீர்ப்பு விசையை பயன்படுத்தி காற்றில் விமானம் மிதக்கிறது.

சவால்
இந்நிலையில் இதனை மீண்டும் டேக் ஆஃப் செய்ய வேண்டும் எனில் விமானத்திற்கு கூடுதல் உந்துவிசை தேவை. நிலைமையை உணர்ந்த FedEx விமானி சட்டென லேண்டிங் கியரை மேலே எடுத்து இரண்டு என்ஜின்களின் வேகத்தையும் கூட்டியுள்ளார். பின்னர்தான் விமானம் உயரே பறந்திருக்கிறது. Southwest விமானத்திற்கும் FedEx விமானத்திற்கும் வெறும் 1000 அடிகள்தான் வித்தியாசம் இருந்திருக்கிறது. விமான பயணத்தில் 1000 அடி என்பது சாலை பயணத்தில் 100 அடி தொலைவு போல. ஒருவழியாக FedEx விமானம் உடனே தரையிறங்காமல் விமான நிலையத்தையே 12 நிமிடங்கள் வரை சுற்றி வந்தது மீண்டும் தரையிறங்கியுள்ளது.

விசாரணை
அதேபோல Southwest விமானமும் எந்த தடையும் இன்றி பத்திரமாக மெக்சிகோவுக்கு சென்றிருக்கிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் மற்றும் அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. முதல்கட்ட விசாரணையில் மோசமான வானிலை காரணமாகதான் விமானத்தை தரையிறக்குவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேபோல FedEx நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு விமானம் கடந்த 2016ம் ஆண்டு தரையிறங்கும்போது ஓடுபாதையிலிருந்து சறுக்கிச் சென்று விபத்தில் சிக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications