இஸ்ரேல் ஆதரவு அமெரிக்கா 'சவுண்டு' சும்மாவாம்! ஹமாஸ் 'ஆட்டத்தை' வேடிக்கைதான் பார்ப்பாராம் ஜோ பைடன்?
நியூயார்க்: ஹமாஸ் பாலஸ்தீனர்கள் நடத்தும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் அமெரிக்கா, முன்னரைப் போல 'களத்தில்' இறங்கி இஸ்ரேலுக்கு உறுதுணையாக நிற்காது என்கின்றன சர்வதேச ஊடக செய்திகள்.
சர்வதேச அரசியலில் ஒரு சொற்றொடர் பயன்படுத்தப்படுவது வழக்கம். அதாவது அமெரிக்காவின் மென்மை முகம் நார்வே; கோர முகம் இஸ்ரேல் என்பதுதான் அது. அமெரிக்காவின் சர்வதேச நாட்டாமைத்தனங்களுக்கும் சர்வதேச அட்டூழியங்களுக்கும் ஒரு அறிவிக்கப்படாத அடியாள்தேசமாகவே இஸ்ரேல் 'பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது'. இஸ்ரேல் யூதர்கள், அமெரிக்காவில் கணிசமான எண்ணிக்கையில் இருப்பதும் அந்நாட்டு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருப்பதும் முதன்மை காரணம்.

அமெரிக்கா, இஸ்ரேல், நார்வே: அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளில் உதவியாக இருப்பதும் இஸ்ரேல்தான். இன்னொரு பக்கம் அமெரிக்கா விரும்பினால் போர் பகுதிகளில் நார்வேதான் அமைதிப் பேச்சு நடத்தும். இதற்கு பிரதிபலனாக யுத்த நாடுகளின் இயற்கை வளங்களை கண்டறியும் பணியை பெற்று அமெரிக்காவிடம் வழங்கும் நார்வே. இதற்கு உதாரணமாக இலங்கையை சொல்ல முடியும். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சமாதான ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் குறித்து நார்வே ஆய்வு நடத்தியது. நார்வேதான் அமைதி ஒப்பந்தத்தின் நாயகனாக இருந்தது. பின்னர் புலிகளை அழிக்கும் சர்வதேச போரில் அமெரிக்காவும் இஸ்ரேலும் முக்கிய பங்கு வகித்தன. இப்போதும் இந்தியா என்ற முட்டுக்கட்டை இல்லாமல் இருந்தால் இலங்கையில் சீனாவை விட அமெரிக்கா கொடிதான் பறந்திருக்கும் என்பதில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
பைடன் - நெதன்யாகு உறவு: இதனிடையே அமெரிக்கா அதிபராக ஜோ பைடன் பதவியேற்றது முதல் இஸ்ரேலுடன் நல்லுறவு நீடித்ததாக இல்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஜோ பைடன் பதவி ஏற்று மூன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டன. ஆனாலும் ஒரு முறை கூட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு அழைத்தது இல்ல ஜோ பைடன் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
அமெரிக்கா வேடிக்கைதான் பார்க்கும்?: இதனால் இப்போது இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஜிஹாதிகள் அல்லது ஹமாஸ் பாலஸ்தீனர்களின் தாக்குதல்களை மிக வன்மையாக கண்டிப்பதாக அமெரிக்கா அறிவிக்கலாம்; கண்டனம் தெரிவிக்கலாம்; ஹமாஸ் பாலஸ்தீனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். இவை அனைத்தும் 'சவுண்டு' அளவில்தான் இருக்கும். நடைமுறையில் ஒருபோதும் இஸ்ரேல் மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா களமிறங்காது; இஸ்ரேல் யுத்தம் நடத்துவதை முடிவுக்கு கொண்டுவரவும் அழுத்தம் தராது என்பதுதான் சர்வதேச ஊடகவியலாளர்கள் பார்வையாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications