குலைநடுங்க வைக்கும் வீடியோ கேம்.. விளையாட்டில் தோற்றால் உண்மையில் உயிர் போய்விடும்.. நிஜ 'ஜூமாஞ்சி'
நியூயார்க்: உலகெங்கும் ஆன்லைன் கேம்களும், வீடியோ கேம்களும் கற்பனையிலும் நினைத்து பார்த்திராத உயரத்தை அடைந்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் விபரீதமான வீடியோ கேமை கண்டுபிடித்து அனைவரையும் மரண பீதியில் ஆழ்த்தியுள்ளார்.
ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதை போலவே அதீத கற்பனையில் அவர் கண்டுபிடித்துள்ள வீடியோ கேம் தான் இன்றைக்கு இளைஞர்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.
ஏனெனில், இந்த வீடியோ கேம் மற்றவை போல கிடையாது. இந்த விளையாட்டில் நீங்கள் தோல்வி அடைந்துவிட்டால் உண்மையிலேயே நீங்கள் உயிரிழந்துவிடுவீர்கள். அது எப்படி என கேட்கிறீர்களா.. பார்க்கலாம் வாங்க.
கேரளாவில் ஆன்லைன் விளையாட்டால் அதிர்ச்சி.. திருடனாகவே மாறிய போலீஸ்காரர்.. நண்பன் வீட்டில் கைவரிசை

தத்ரூப வீடியோ கேம்கள்
ஒருகாலத்தில், வீடியோ கேம் என்பது கையில் ஒரு பெரிய பிளாஸ்டிக் டப்பாவை வைத்து விளையாடும் ஒன்றாக இருந்தது. ஆனால், இன்றைக்கோ வீடியோ கேம்கள் உச்சக்கட்ட தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. வீடியோ கேம்களுக்காகவே பிஎஸ் 1, பிஎஸ் 2 போன்ற பிரத்யேக எலக்ட்ரானிக் சாதனங்கள் வரத் தொடங்கிவிட்டன. அந்த விளையாட்டில் வரும் மனிதர்கள், விமானம், ஹெலிகாப்டர் என அனைத்துமே நேரில் பார்ப்பதை போல தத்ரூபமாக கிராபிக்ஸ் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த அளவுக்கு தத்ரூபமாக இருப்பதால், இதுபோன்ற வீடியோ கேம்களுக்கு கோடிக்கணக்கான இளைஞர்கள் அடிமையாகியுள்ளனர்.

களத்துக்கே கூட்டிச் செல்லும் கேம்கள்..
இதுபோன்ற தத்ரூபமான தொழில்நுட்பத்தையும் ஓவர் டேக் செய்யும் விதமாக தற்போது வந்திருப்பதுதான் 'விர்ச்சுவல் ரியாலிட்டி' (Virtual Reality) வீடியோ கேம்கள். தமிழில் மெய்நிகர் வீடியோ கேம்கள் என அழைக்கப்படும் இவற்றில், நாமே களத்திற்கு சென்று விளையாடுவதை போல இருக்கும். இதற்காக பிரத்யேக விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட்கள் நமக்கு கொடுக்கப்படும். இதை அணிந்துகொண்டால், எந்த விளையாட்டை விளையாடுகிறோமோ, அதன் உள்ளேயே சென்றுவிடுவோம். உதாரணத்துக்கு, ஒரு போர்க்களம் என்றால் நாமே அங்கு நிற்பதை போல உணர்வை இது கொடுத்துவிடும்.

கேமில் தோற்றால் மரணம்..
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல விர்ச்சுவல் ரியாலிட்டி வடிவமைப்பாளரான பால்மர் லக்கி என்பவர் ஒரு விபரீத வீடியோ கேமை உருவாக்கியுள்ளார். புகழ்பெற்ற கார்ட்டூன் சீரியஸான ஸ்வார்ட் ஆர்ட் ஆன்லைன் (sword art online) என்பதை ஒரு வீடியோ கேமாக அவர் வடிவமைத்துள்ளார். அது இப்போது பிரச்சினை இல்லை. இந்த விளையாட்டில் நீங்கள் தோற்றுவிட்டால், அடுத்த நொடியே உங்கள் உயிர் போய்விடும் என்பதுதான் அனைவரையும் அலறச் செய்துள்ளது.

மூளையை செயலிழக்க செய்யும்..
இந்த வீடியோ கேம் சாதனத்தை வாங்குபவர்களுக்கு ஒரு பிரத்யேக விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் வழங்கப்படும். இது நமது மூளை நரம்புகளின் மீது படிந்திருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் ஒரு பெரிய அதிர்வை கொடுக்கும் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. போர்க்களத்தில் சண்டையிடுவது போன்ற இந்த விளையாட்டில், எதிரி உங்கள் தலையில் 10 முறை தாக்கினால் வீடியோ கேமில் நீங்கள் இறப்பீர்கள். ஆனால், இந்த ஹெட் செட் அணிந்திருந்தால் 10-வது முறை எதிரி அடிக்கும் போது, இந்த அதிரும் தொழில்நுட்பம் செயல்படும். அப்போது உங்கள் மூளை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு அடுத்த நிமிடத்திலேயே நீங்களும் நிஜமாகவே உயிரிழந்து விடுவீர்கள்.

ரியாலிட்டி முக்கியம் பிகிலு..
இந்த அளவுக்கு ஆபத்தான வீடியோ கேமை எந்த நாடும் இப்போதைக்கு சந்தைப்படுத்த அனுமதிக்கவில்லை. ஆனால், எப்பாடு பட்டாவது இந்த வீடியோ கேமை சந்தைப்படுத்தி விட பால்மர் லக்கி முயன்று வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உயர்தர கிராபிக்ஸ்தான் ஒரு வீடியோ கேமுக்கு உயிரை கொடுக்கிறது. அதாவது ரியாலிட்டி தான் இதில் முக்கியம். அதனால்தான், தோற்றால் உயிர் போய்விடும் ரியாலிட்டியை நான் கண்டுபிடித்துள்ளேன். உயிர் போய்விடும் அச்சத்தால், இதை விளையாடுபவர்கள் மிகுந்த கவனத்துடன் விளையாடுவார்கள்" என்றார்.