10,000 அடி உயரத்தில் விமானத்தை கடத்தி! பல கோடியோடு பாராசூட்டில் எஸ்கேப்பான நபர்! அதிர வைத்த கூப்பர்!
நியூயார்க்: 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தை கடத்தி.. அதில் இருந்து 1.50 கோடி ரூபாயை திருடிக்கொண்டு.. ஒருவர் நடுவானில் விமானத்தில் இருந்து குதித்து தப்பித்தார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? என்னங்க கதையா விடுறீங்க.. இதெல்லாம் படத்துல தானே நடக்கும் என்று கேட்கிறீர்களா? இல்லை நிஜத்தில் நடத்து இருக்கிறது.. அதை செய்து காட்டியவர் பெயர் டிபி கூப்பர்! அவர் எப்படி விமானத்தை கடத்தி பணத்தை ஆட்டையை போட்டார் என்பதைதான் இங்கே படிக்க போகிறீர்கள்...
1971 நவம்பர் 24ம் தேதி அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் விமான நிலையத்திற்கு நடுத்தர வயது கொண்ட ஒரு நபர் கையில் ஒரு சூட் கேஸுடன் வந்தார். விமான டிக்கெட் எடுக்கும் லைனிற்கு சென்ற அவர் 5 நிமிட காத்திருப்பிற்கு பின் வாஷிங்டனில் இருக்கும் சியாட்டல் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று ஒன்வே டிக்கெட் எடுத்தார்.
அந்த டிக்கெட்டை எடுக்க அவர் டாலர்களை நீட்டியதும்.. "உங்கள் பெயரை சொல்லுங்கள்" என்று கவுண்டரில் இருக்கும் பெண்மணி கேட்டு இருக்கிறார். அதற்கு அவர் "என் பெயர் டேன் பி கூப்பர்" என்று சிரித்தபடி கூறியுள்ளார். பெயரை டிக்கெட்டில் குறித்த அந்த பெண்மணி.. டிக்கெட்டை நீட்டி "ஹேப்பி ஜர்னி" என்று புன்னகைத்துவிட்டு அடுத்த டிக்கெட்டை கொடுக்க தயாராகி உள்ளார்.
ஆனால் அந்த பெண் மணிக்கு அப்போது தெரியாது.. அவர் சொன்ன அந்த ஹேப்பி ஜர்னி அமெரிக்காவையே காலத்திற்கும் உலுக்க போகும் ஒரு ஜர்னியாக இருக்கும் என்று!

ஹேப்பி ஜர்னி
அது ஒரு சிறிய விமானம்தான். அந்த காலத்தில் அதிகமாக இந்த ரூட்டில் பெரிய விமானங்கள் இயக்கப்படவில்லை. அந்த விமானத்தில் அப்போது 35 பேர்தான் கூப்பருடன் பயணம் செய்துள்ளனர். விமான பணிப்பெண்கள், பைலட்டுகளுடன் சேர்த்து மொத்தம் 42 பேர்தான் அந்த Northwest Orient Airlines Flight 305 விமானத்தில் பயணம் செய்துள்ளனர். அதிலும் அந்த விமானத்தில் நிறைய இருக்கைகள் காலியாக இருந்துள்ளன. விமானத்தில் ஏறியதும் கடைசி வரிசையில் நடு இருக்கையில் கூப்பர் அமர்ந்தார்.
ஜன்னல் சீட் காலியாக இருந்தும் கூட நடுவரிசையில் கூப்பர் அமர்ந்து இருந்தார். 70களில் விமானத்தில் சிகரெட் பிடிக்கலாம் என்பதால், அவரும் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து.. ஒரு கிளாஸ் மதுவையும் கேட்டு வாங்கிக்கொண்டு, அதை குடித்தபடி விமான பயணத்தில் அமைதியாக இருந்துள்ளார். பார்க்க அமைதியான தோற்றம், லேசாக கலைந்த முடி, அச்சுறுத்தல் இல்லாத சாந்தமான கண்கள், ஒரு கூலிங் கிளாஸ் என்று இவரை பார்க்கும் யாருக்கும் எந்த பயமும் இருக்காது. கூப்பர் இருந்தது கடைசி வரிசை என்பதால் அதற்கு அடுத்த வரிசையில் பின்னால்தான் விமான பணிப்பெண் ப்ளோரன்ஸ் இருந்துள்ளார்.

ப்ளோரன்ஸ்
விமானம் புறப்பட்டு சில நிமிடங்கள் சென்ற பின்.. தனது சிகரெட் தீருவதற்காக காத்து இருந்தார் டிபி கூப்பர்.. சிகரெட் கொஞ்சம் கொஞ்சம் சாம்பலமாகவும், புகையாகவும் சென்று கொண்டு இருந்தது. ஒவ்வொரு முறை கூப்பர் புகையை விட்ட போதும்.. அவரின் மூச்சு காற்று வேகம் ஆனது. ஏனென்றால் அவர் அடுத்துசெய்ய போகும் சம்பவம் அமெரிக்க வரலாற்றில்.. ஏன் உலக வரலாற்றிலேயே அதுவரை நடக்காத சம்பவம். சிகரெட் மொத்தமாக எரிந்து அடங்கியதும்.. கையில் இருந்த ஒரு துண்டு சீட்டை எடுத்து விமான பணிப்பெண் ப்ளோரன்ஸிடம் நீட்டினார் கூப்பர்.
அதை பார்த்த ப்ளோரன்ஸ் முகம் வெளிறியது. அவர் முகம் அப்படியே வாடிப்போனது. அதில் ஒரே வரி மட்டும்தான் எழுதப்பட்டு இருந்தது. அந்த வரி.. "மிஸ்.. என்னிடம் பாம் இருக்கிறது. நீங்கள் என்னுடைய அருகில் வந்து அமருங்கள்" என்று அதில் எழுதப்பட்டு இருந்தது. "ஓ ஜீசஸ் என்ன இது" என்று பதறிய ப்ளோரன்ஸ் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூப்பர் அருகே சென்று அமருகிறார்.தான் கொண்டு வந்த அந்த ஒற்றை சூட்கேஸை திறந்து காட்டுகிறார் கூப்பர். "பாருங்க மிஸ்" என்றதும் ப்ளோரன்ஸ் உள்ளே பார்க்கிறார். அதில் 8 டைனமைட் கட்டப்பட்டு இருந்தது. அதில் டிக் டிக் என்று டைமும் ஓடிக்கொண்டு இருந்தது.

டைனமைட்
அதன்பின் ப்ளோரன்சிடம் அவர் வைத்த கோரிக்கை சிம்பிள்.. "எனக்கு 2 லட்சம் டாலர் (இந்திய மதிப்புப்படி இப்போது ஒன்றரை கோடி) வேண்டும். அதை ஒரு சாக்கு பையில் போட்டு கொண்டு வாருங்கள். எனக்கு 4 பாராசூட் வேண்டும். விமானம் சியாட்டலில் தரையிறங்கியதும் விமானத்தில் உடனே எரிபொருளை ஏற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால்.. விமானம் வானத்திலே பீஸ் பீஸாக சிதறும்." என்று கூறுகிறார். இதை கேட்ட ப்ளோரன்ஸ் அருகில் இருந்த இன்டர்காம் போன் மூலம் இதை பைலட்டுக்கு தெரிவிக்கிறார். இதை கேட்டதும் பைலட் கைகள் தடுமாறுகின்றன.. யார்யா இது என்று குழப்பத்திற்கு உள்ளாகிறார்.

பைலட்
உடனே இந்த தகவல் கீழே இருந்த கட்டுப்பாட்டு அறைக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் போலீசாருக்கும் தகவல் செல்ல.. இப்போது ரிஸ்க் எடுக்க வேண்டாம்.. "விட்டு பிடிக்கலாம்" என்று அவர்களும் முடிவு செய்து, பணத்தை கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். அடுத்த 1 மணி நேரம் விமானிகள் இருவரும் வெலவெலத்து போனார்கள். யாருக்கும் அச்சுறுத்தல் வர கூடாது என்பதால் பயணிகளிடம் இந்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.. விமானம் தரையிறங்கும் நேரம் வந்துவிட்டது. ஆனால் பணம் ரெடியாக தாமதம் ஆகும் என்பதால் விமானம் வானத்திலேயே வட்டம் அடித்தது. 1 மணி நேரம் விமானம் வானத்திலேயே 20 முறை வட்டம் அடித்தது.
போலீஸ் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அருகில் இருந்து வங்கிகளில் இருந்தெல்லாம் பணத்தை கொண்டு வந்த 20 டாலர் கட்டுகளாக 2 லட்சம் டாலரை கொண்டு வந்தனர். அருகில் இருந்த விமான பயிற்சி பள்ளி ஒன்றில் இருந்து 4 பாராசூட்களையும் கொண்டு வந்தனர். இதையடுத்து பணம் ரெடி என்ற தகவல் உடனே விமானிகளுக்கு சென்றுள்ளது. "இப்போது விமானத்தை நீங்கள் தரையிறக்கலாம்" என்று தகவல் சென்றுள்ளது. பிற்பகலில் புறப்பட்ட அந்த விமானம் 5.45 மணிக்கு சியாட்டலில் தரையிறங்கியது.

விமானம் தரையிறங்கியது
விமானம் தரையிறங்கியதும் உடனே கூப்பர் ஒரு முடிவு எடுத்தார். நான் கேட்டதை எல்லாம் ஒரு பணிப்பெண் உள்ளே எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று கூறினார். அதேபோல் அவர் கேட்ட பணமும், பாராசூட்டும் விமானம் உள்ளே கொண்டு வரப்பட்டது. அப்போது கூப்பர் எடுத்த முடிவுதான் அதிசயமானது. விமானத்தில் இருந்த பயணிகள், 2 பணிப்பெண்களை தரையிறங்கலாம் என்று கூப்பர் கூலாக சொன்னார். இதை அங்கு இருந்த அதிகாரிகள் யாருமே எதிர்பார்க்கவில்லை. "அட வசதியா போச்சே.. எவ்வளவு நல்ல மனுஷன் பாருங்கள்" என்று சந்தோசம் அடைந்துள்ளனர். தரையிறங்கிய பயணிகளில் பாதி பேருக்கு விமானம் கடத்தப்பட்டு இருப்பதே அப்போது தெரியாது.
இந்த பணம் கொடுக்கப்பட்ட நிலையில்.. விமானத்தை மீண்டும் எடுக்கும்படி கூறினார் கூப்பர். இடையில் விமானத்தில் எரிபொருளும் நிரப்பப்பட்டது. விமானத்தில் 2 பைலட்டுகள், 2 பணிப்பெண், பின்னர் கூப்பர் ஆகியோர் மட்டுமே இருந்தனர். அவர் 4 பேரையும் வெடிக்க வைத்துவிடுவேன் என்று மிரட்டியதால் விமானத்தை மீண்டும் பைலட்டுகள் இயக்கினர். "மெக்சிகோவிற்கு விமானத்தை செலுத்துங்கள். விமானம் 10 ஆயிரம் அடிக்கு கீழ்தான் செல்ல வேண்டும். விமானத்தின் லேண்டிங் கியர் கீழே இருக்க வேண்டும். விமானம் 15 டிகிரி கோணத்திலேயே பறக்க வேண்டும்.

கண்டிஷன்கள்
மானம் மேலே சென்றதும் விமானத்தின் கீழ் பக்கம் இருக்கும் அவசர படிக்கட்டுகள் விதிறந்த நிலையில் இருக்க வேண்டும். விமானம் மெதுவாக செல்ல வேண்டும் என்று கூப்பர் பல கண்டிஷன்களை விதித்தார். இந்த கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஆனால் மெக்சிகோ செல்ல வேண்டும் என்றால், விமானம் இடையில் நெவேடாவில் இறங்கி மீண்டும் எரிபொருள் நிரப்ப வேண்டி இருக்கும் என்று கூறியுள்ளனர் பைலட்டுகள். இதை கேட்டு "சரி ஓகே.. இடையில் நிறுத்திக்கொள்ளலாம்" என்று கூறுகிறார் கூப்பர். இதையடுத்து விமானம் 2 லட்சம் டாலர் பணம்.. 4 பாராசூட்.. 2 பணிப்பெண்கள்.. 2 பைலட்டுகளுடன் விண்ணில் பறந்தது.
விமானம் புறப்பட்டு சில நிமிடங்கள் கழித்து.. விமான பணிப்பெண்கள் இருவரையும் "காக்பீட்டில் சென்று நீங்கள் அமருங்கள். நான் கூப்பிடும் வரை நீங்கள் வர கூடாது" என்கிறார் கூப்பர். அவர்களும் அங்கிருந்து செல்கிறார்கள். ஆனால்.. அவர்களுக்கு அப்போது தெரியாது.. அதுதான் அவர்கள் கூப்பரை பார்க்கும் கடைசி தடவை என்று. ஏன் அதுதான் எந்த ஒரு மனிதரும் கூப்பரை பார்க்கும் கடைசி தடவை ஆகும். அந்த விமானம் அதன்பின் 3 மணி நேரம் தொடர்ச்சியாக பயணம் செய்து... நெவேடாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது. விமானத்தை தரையிறக்கிவிட்டு காக்பீட்டை திறந்த பணிப்பெண்ணிற்கு அதிர்ச்சி.. காரணம் விமானத்தில் கூப்பர் இல்லை.. விமானத்தில் அவர் வைத்து இருந்த பாம்.. 2 பாராசூட்.. பண மூட்டை எதுவும் இல்லை.. அவர் அப்படியே மாயமாக மறைந்துவிட்டார். மேஜிக் போல மறைந்துவிட்டார்!

மாயம்
பின் பக்கம் சென்ற பணிப்பெண்ணிற்கு இன்னொரு அதிர்ச்சி. அந்த விமானத்தின் அவசர படிகள் திறக்கப்பட்ட நிலையில் இருந்தது. கடைசியில் தரையிறங்கிய சமயத்தில் அதில் லேசாக சேதமும் ஏற்பட்டு இருந்தது. அங்கே என்ன நடந்தது என்று யாருக்கும் புரியவில்லை. உடனே இந்த விஷயத்தை கேள்விப்பட்ட போலீசுக்கு இதுதான் தோன்றியது.. "ஒருவேளை கூப்பர் விமானத்தில் இருந்து பாதியில் பாராசூட் மூலம் குதித்து இருக்கலாம். சியாட்டல் - நவேடா இடையில் எங்கோதான் அவர் குதித்து இருக்க வேண்டும்" என்ற முடிவிற்கு அவர்கள் வருகின்றனர்.
இதையடுத்து கூப்பரை தேடுவதற்கான ஆபரேஷன் தொடங்கியது. எப்பிஐ அதிகாரிகள் முதலில் விமானத்தில் சோதனை செய்தனர். அதில் 8 சிகரெட் பட்ஸ் இருந்தன. ஒரு கருப்பு டை இருந்தது. 2 பயன்படுத்தப்படாத பாராசூட் இருந்தன. வேறு எதுவும் விமானம் உள்ளே இல்லை. தொடர்ந்து நடந்த விசாரணையில் கூப்பர் ஒல்லியாக, வெள்ளையாக, முன் பக்கம் லேசாக முடி இல்லாமல், கருப்பு கண்ணாடி அணிந்து, கூரான மூக்குடன் இருந்ததாக சாட்சியங்கள் கூறி உள்ளனர். இதை வைத்து அவரின் குத்துமதிப்பான புகைப்படமும் வரையப்பட்டது.

புகைப்படம்
இந்த சம்பவத்தில் பல சிக்கல்கள் இருந்தன. என்னவென்றால்.. அந்த விமானத்தில் இருந்து கூப்பர் பாதியில் குதித்துவிட்டார் என்றால் அவர் எப்போது குதித்தார் என்று தெரியவில்லை. விமானத்தில் இருந்த யாருக்கும் இது தெரியாது. கூப்பருக்கு தெரியாமல் விமானத்தை அன்று இரண்டு போர் விமானத்தில் பின் தொடர்ந்தபடி வந்தன. பாதுகாப்பிற்காக! அந்த விமானங்களில் இருந்த பைலட்டுகளும் கூப்பர் விழுவதை பார்க்கவில்லை. ஆனால் ஒரு விஷயம் மட்டும் உறுதியானது. விமானம் புறப்பட்டு 8.45 மணி போல பைலட்டுகள் இன்டர்காம் மூலம் கூப்பரிடம்.. உணவு வேண்டுமா என்று கேட்டுள்ளனர். அதற்கு கூப்பர் நோ சொல்லி இருக்கிறார். அதுவரை அவர் விமானத்தில் இருந்தது உறுதி!
அடுத்த சில நிமிடங்களில் விமானத்தில் லேசாக ஆட்டம் போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை விமானம் பறந்த போது நடுவில் அதன் படிகளை திறந்த காரணத்தால் இந்த அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. 8.45 மணிக்கு இந்த அதிர்வு ஏற்பட்டது. எனவே அந்த நேரத்தில் அவர் விமானத்தில் இருந்து குதித்து இருக்க சான்ஸ் உள்ளது. அந்த நேரத்தில் விமானம் எங்கே இருந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். விக்டர் 23 என்ற விமான ரூட்டில்தான் அந்த விமானம் சென்றுள்ளது. இதை வைத்து செய்யப்பட்ட கணிப்புகளில் விமானம் போரட்லாண்டில் இருந்து 43 கிமீ தொலைவில் இருக்கும் போது கூப்பர் கீழே குதித்து இருக்கலாம் என்று யூகித்து உள்ளனர்.

யுகம்
இதை அடிப்படையாக வைத்து அங்கே சோதனை செய்ய தொடங்கினர். ஆனால் அந்த பகுதி மிகப்பெரிய காடு, பல சிறிய மலைகளை கொண்டது. அங்கு பல நூறு போலீஸ் அதிகாரிகள் இறங்கி அடுத்த சில நாட்கள் காடுகளில் புகுந்து தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் அவர்களால் கூப்பர் குறித்து ஒரு சிறிய துரும்பை கூட கண்டுபிடிக்க முடியவில்லை. கடல்லயே இல்லையாம்! என்று வெறும் கையோடு திரும்பி வந்துள்ளனர். அப்படியே பல வாரங்கள் கடந்து டிசம்பர் இறுதிவரை தேடுதல் வேட்டை சென்றது. இதையடுத்து களத்தில் தேடாமல் வேறு மாதிரியான தேடுதல் வேட்டை தொடங்கியது.
கூப்பரிடம் கொடுக்கப்பட்ட பண கட்டுகளின் சீரியல் எண்கள் மொத்தமாக குறிக்கப்பட்டு இருந்தது. அதோடு இந்த சீரியல் நம்பர் பொதுவில் வெளியிடப்பட்டு, யார் இந்த சீரியல் எண்ணில் உங்களுக்கு பணம் கொடுத்தாலும் சொல்லுங்கள், உங்களுக்கு அதற்கு உரிய சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 25 ஆயிரம் டாலர் வரை இதற்கு ரிவார்ட் இதற்கு அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் அந்த சீரியல் எண்ணில் பணம் தங்களிடம் கொடுக்கப்பட்டதாக துப்பு கொடுக்கவில்லை. இப்படி விசாரணை கொஞ்சம் கொஞ்சமாக சென்றது. 1 மாதம்.. 2 மாதம் இல்லை.. 8 மாதங்கள் விசாரணை நடத்தும் கூப்பரை பிடிக்க முடியவில்லை.

தேடுதல் வேட்டை
டான் பி கூப்பர்.. சுருக்கமாக டிபி கூப்பர். இந்த பெயரை தவிர எதுவும் போலீசுக்கு தெரியவில்லை. விசாரணை 8 மாதங்களுக்கு பின் கைவிடப்பட்டது. அப்படியே 10 வருடங்கள் ஓடிவிட்டது.
1980ல் தெற்கு வாஷிங்டனில் விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர் ஒருவர் அங்கே சின்ன டென்ட் கட்டுவதற்கு குழி தோண்டிய போது குழியில் இருந்து 5880 டாலர்களை எடுத்துள்ளார். அவருக்கு டிபி கூப்பர் கதை தெரியும்.. எனவே அந்த பணம் பற்றி உடனே போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த பணத்தின் சீரியல் எண்ணை சோதித்து பார்த்த போலீசுக்கு அதிர்ச்சி.. காரணம்.. அந்த பணம் டிபி கூப்பரிடம் கொடுக்கப்பட்ட அதே பணக்கட்டில் இருந்தது பணம்தான்.
இது பெரிய கண்டுபிடிப்பாக இருந்தாலும்.. அதுதான் போலீசுக்கு இன்னும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் சியாட்டலில் இருந்து நவேடா நோக்கி சென்ற விமானத்தில் இருந்து குதித்த கூப்பரின் பணம் எப்படி இவ்வளவு கிலோ மீட்டர் தாண்டி தெற்கு வாஷிங்டனுக்கு வந்திருக்கும் என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்படி என்றால் கூப்பர் விழுந்ததாக கருதப்படும் லூயிஸ் ஆற்றில் இருந்து பணம் அடித்து செல்லப்பட்டு வாஷிங்கடனில் ஓடும் டினா பார் நதிக்கு வந்து கரை ஒதுங்கி.. இப்போது 10 வருடம் கழித்து கிடைத்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால் அப்படியே வாதம் வைத்தாலும்.. அந்த நதி ஓடும் திசைக்கு எதிர் திசையில் பணம் எப்படி மிதந்து வந்திருக்கும் என்ற கேள்வியும் எழுந்தது.

சந்தேகம்
இதனால் அந்த பணம் அங்கே எப்படி வந்தது என்பது குழப்பமானது. ஒருவேளை கூப்பர் அங்கே வந்து புதைத்து இருக்கலாமோ என்ற கேள்வி எழுந்தது. அந்த பணம் அங்கே எப்படி வந்தது என்பதை பற்றி பல விவாதங்கள், வியூகங்கள், கணிப்புகள் அப்போது வைக்கப்பட்டன. அந்த பணக்கட்டில் இருந்த சில பணங்கள் வீணாகி இருந்தாலும் கூட.. பணத்தின் ரப்பர் பேண்ட் மட்டும் வீணாகாமல் அப்படியே இருந்தது பல சந்தேகங்களை எழுப்பியது. அந்த ரப்பர் பேண்டில் செய்யப்பட்ட சோதனையில், அவை வெளியே அவ்வளவு நாள் நீருக்கு அருகில் இருந்திருந்தால் கண்டிப்பாக அறுந்து இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டது.

தியரி
அதாவது அந்த ரப்பர் பேண்டை யாரோ கடந்த ஒரு வருடத்திற்கு முன்தான் அந்த பணத்தில் மாட்டி உள்ளனர் என்று உறுதியாக சோதனையின் முடிவில் தெரிந்துள்ளது.
அப்படி என்றால் இந்த பணத்தை 1 வருடத்திற்கு இடைப்பட்ட காலத்தில் கையாண்டது யார்? அதில் ரப்பர் பேண்டை மாட்டியது யார்? அது டிபி கூப்பரா? என்ற கேள்வி போலீசுக்கு எழுந்தது. டிபி கூப்பர் புதிராக இருக்கும் போது.. அவரின் பணம் என்ன ஆனது என்பது.. எப்படி வந்தது என்பது அடுத்த பெரிய புதிராக மாறியது. இந்த சம்பவம் பற்றி பல தியரிகள் சொல்லப்பட்டன.

தியரிகள்
தியரி 1 - அந்த விமானத்தில் இருந்து கூப்பர் காட்டுக்குள்தான் குதித்தார். அப்போது கடுமையாக மழை வேறு பெய்தது. இதனால் அவர் அப்போதே கீழே மரத்தில் மோதி பலியாகி இருப்பார் என்று கூறப்பட்டது.
தியரி 2 - அவர் எங்கே குதிக்கிறார் என்பது தெரியாததால் கண்டிப்பாக அவர் கீழே விழும் போது பணக்கட்டுகள் வேறு எங்காவது விழுந்து இருக்கும். அவர் வேறு எங்காவது விழுந்து இருக்கும்.
தியரி 3 - அதோடு கூப்பரிடம் கொடுக்கப்பட்ட 4 பாராசூட்களில் 2 சூட்கள் பயிற்சி செய்யும் பாரா சூட்கள். அவை கூப்பரிடம் கொடுக்கப்பட்ட போதே அது வேலை செய்யும் நிலையில் இல்லை. அதில் ஒன்றையும், வேலை செய்யும் பாராசூட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டுதான் அவர் கீழே குதித்து இருக்கிறார். அப்படி என்றால் அவர் கீழே விழுந்து இறந்து இருப்பாரா? அல்லது நல்ல பாராசூட்டில் தப்பித்து இருப்பாரா? என்றும் தியரி வைக்கப்பட்டது.

ராணுவம்
தியரி 4 - டிபி கூப்பருக்கு ராணுவ அனுபவம் இருப்பதாகவும், அவர் ராணுவத்தில் பயிற்சி எடுத்தவர் என்றும், சந்தேகிக்கப்பட்டது. இதனால் அவர் இதை பயன்படுத்தி பாதுகாப்பாக தப்பித்து இருப்பார் என்றும் வாதங்கள் வைக்கப்பட்டன.
தியரி 5 - கூப்பர் சிஐஏவுடன் தொடர்பு கொண்டவர். சிஐஏ அதிகாரிகள் இந்த விமான வகையில் இருந்து கீழே குதித்து மீட்பு பணிகளை செய்வார்கள். கூப்பர் சிஐஏவில் பயிற்சி பெற்றவர் என்பதால் இதே வகை விமானத்தை கடத்தி இருக்கலாம் என்றும் தியரி வைக்கப்பட்டது.
தியரி 6- சீரியல் நம்பர் காரணமாக அவர் பணத்தை செலவு செய்யாமலே பதுக்கி வைத்து இருந்திருப்பார். கடைசி வரி அவர் இதை பயன்படுத்தி இருக்கவே மாட்டார் என்று கூறப்பட்டது.
தியரி 7 - அவர் இடைப்பட்ட காலத்தில் வேறு ஒரு கிரைமில், அந்த இரவு அங்கே ஏற்பட்ட சாலை விபத்தில், கைதி செய்யப்பட்டு, சிறைக்கு சென்று இருக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அவரை பற்றி, அவரின் நிலையை பற்றி இப்படி பல தியரிகள் வைக்கப்பட்டாலும்.. பல வாதங்கள் வைக்கப்பட்டாலும் கூப்பர் எங்கே போனார்.. எப்படி எஸ்கேப் ஆனார் கடைசி வரை யாருக்கும் தெரியவில்லை!
50 வருடங்கள் கடந்துவிட்டாலும் இப்போது வரை அந்த டிபி கூப்பர் யார்? அவர் அந்த பணத்தை என்ன செய்தார்? என்பது புரியதே புதிராகவே இருக்கிறது!












Click it and Unblock the Notifications