விந்தணுக்கள் இடையே ரேஸை நடத்தும் அமெரிக்கா.. எது ஜெயிக்கும்னு பெட் கூட கட்டலாம்! வினோதத்தின் உச்சம்
நியூயார்க்: அமெரிக்கா பல வினோதங்கள் நடைபெறும் ஒரு நாடு. அப்படியொரு வினோதப் போட்டிக்குத் தான் இப்போது அங்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதாவது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலகின் முதல் விந்தணு பந்தயத்தை நடைபெறவுள்ளது. அதென்ன விந்தணு ரேஸ்.. இதை ஏன் நடத்துகிறார்கள்.. முக்கியமாக இது உண்மை தானா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உலகின் முதல் விந்தணு பந்தயத்தை நடைபெறவுள்ளது. உலகெங்கும் கருவுறுதல் விகிதங்கள் ஆண்களிடையே குறைந்து வரும் சூழலில், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனம் இந்த ரேஸை நடத்துகிறது. இதில் விந்தணுக்களிடையே உண்மையாகவே ரேஸ் நடத்தப்படும்.

உண்மை தான்
இது ஏதோ ஜோக் அல்லது மீம் போல தெரிந்தாலும் அந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்த ரேஸுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆண்களிடையே பல ஆண்டுகளாக அதிகரித்து வரும் இந்தத் தீவிரமான பிரச்சினை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ரேஸை நடத்துவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறைந்து வரும் கருவுறுதல் விகிதங்களை நிவர்த்தி செய்வதோடு, சீரான இனப்பெருக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே இந்த ரேஸை ஸ்பெர்ம் ரேசிங் என்று அழைக்கப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. உலகின் முதல் விந்தணு ரேஸுக்காக $1 மில்லியன் டாலரையும் அவர்கள் திரட்டியுள்ளனர். எரிக் ஜு, நிக் ஸ்மால், ஷேன் ஃபேன் மற்றும் காரெட் நிகோனியென்கோ ஆகிய 4 இளைஞர்கள் இணைந்தே இந்த ரேஸை நடத்துகிறார்கள்.
எப்போது எங்கே நடைபெறுகிறது
இந்த ரேஸ் வரும் ஏப்ரல் 25ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஹாலிவுட் பல்லேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ரேஸுக்கு சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட ஒரு உண்மையான விளையாட்டுப் போட்டி போல இதற்கும் பிரஸ் மீட், வர்ணனை மற்றும் பெட்டிங் என அனைத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.
எதற்காக இந்த போட்டி
இது குறித்து அந்த ஸ்டார்ட் அப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாங்கள் உடல் ஆரோக்கியத்தை ஒரு விளையாட்டாக மாற்றுகிறோம். நீங்கள் ஒரு விளையாட்டுக்காகப் பயிற்சி செய்கிறீர்கள்.. உடலை அதன் வரம்புகளுக்குத் தள்ளுகிறீர்கள். அப்படியானால் அதே பாணியில் ஏன் ஆரோக்கியத்தையும் கற்றுத் தர முடியாது? ஆரோக்கியத்தை அளவிட்டு, மேம்படுத்தி, ஏன் போட்டியிடக் கூடாது?
விந்தணுக்களுக்கான முதல் ரேஸ் டிராக்கை நாங்கள் உருவாக்குகிறோம். இதில் இரண்டு போட்டியாளர்கள் அதாவது இரண்டு மாதிரிகள் களமிறங்குகிறது. ரேஸ் முடியும் எங்குத் தொடங்கி எங்கு முடிவடைகிறது என்பதும் வரையறுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து பக்காவாக போட்டிக்கு ரெடியாகி வருகிறார்கள்.
ரேஸ் எப்படி நடக்கும்
விந்துணுக்களை வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்பதால் இதை ரெக்கார்ட் செய்ய உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராக்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர். இந்த கேமராக்கள் விந்தணுக்கள் நீந்தும்போது அவற்றின் ஒவ்வொரு அசைவையும் படம்பிடிக்கும். பெண்ணின் இனப்பெருக்க அமைப்பைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 20 செ.மீ நுண்ணிய பாதையில் ரேஸ் நடக்கும். பெண்ணின் உடலில் உள்ள வேதியியல் பண்புகளைப் போலவே இதுவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
எவ்வளவு நேரம் போட்டி நடக்கும்
இந்த ஸ்பெர்ம் ரேசிங் மினி-மராத்தானில் இரண்டு நுண்ணிய விந்தணுக்கள் போட்டியிடும். அவை ஒவ்வொன்றும் 0.05 மில்லிமீட்டர் மட்டுமே நீளம் கொண்டதாகும். மேலும், விந்தணுக்களுக்கு இடையிலான கடுமையான போட்டியைப் போட்டியாளர்கள் லைவில் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேம்பட்ட இமேஜிங் மூலம் எந்த விந்தணு முதலில் வெற்றிக்கோட்டை கடக்கிறது என்பதையும் கண்காணிக்க இருக்கிறார்களாம்.
மனித விந்தணுக்கள் நிமிடத்திற்கு 5 மில்லிமீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியது. இருப்பினும், உறுதியாக இந்த வேகத்தில் தான் பயணிக்கும் எனச் சொல்ல முடியாது. இதனால் இந்த ரேஸ் சில நிமிடங்களில் முடியலாம். ஒரு மணி நேரத்திற்கு மேலும் நீடிக்கலாம்.












Click it and Unblock the Notifications