கொடநாடு கொலை.. கொள்ளை.. அடுத்தடுத்து ஐந்து மரணங்கள்.. 2017ல் என்ன நடந்தது ? பிளாஸ்பேக்
ஊட்டி : தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் அடுத்தடுத்து நடந்த கொலைகள் மற்றும் தற்கொலைகள் குறித்த மர்மத்தை உடைக்க நீதிமன்றத்தில் போலீஸ் புதிய மனு போட்டிருக்கிறது,
2017ல் கொடநாட்டில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்பதை இப்போது பார்ப்போம். 2016 டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மரணம் அடைந்தார். அதன் பிறகு அடுத்த இரண்டு மாதங்களில் அதாவது 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.இதனால் சசிகலா சிறைக்கு சென்றார். அன்றைய தினமே முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றார்,
அதன்பிறகு அடுத்த சில மாதங்களில் ஜெயலலிதாவின் கொடாநாடு எஸ்டேட் பங்களாவில் காவலாளி, கார் ஓட்டுனர் என அடுத்தடுத்து வரிசையாக மர்மமாக இறந்தனர்.

எடப்பாடி பழனிசாமி மீது புகார்
இதற்கு பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக தெஹல்கா புலனாய்வு இணைய இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சுமத்திய குற்றச்சாட்டு, தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியது. ஆனால் இதனை எடப்பாடி பழனிசாமி அப்போதே மறுத்துவிட்டார். இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தார். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்பியதாக இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டனர்.

கொடநாட்டில் கொள்ளை
சரி என்னதான் நடந்தது கொட நாட்டில் என்பதை இப்போது பார்ப்போம். 24.04.2017 அன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு பங்களாவில் அதிகாலை 3 மணியளவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். கொள்ளை கும்பல் கொடநாடு பங்களாவில் எதையோ கொள்ளை அடித்து சென்றது.ஆனால் என்ன கொள்ளை போனது என்பது குறித்து உறுதியாக தகவல்கள் இல்லை ஏனெனில் ஜெயலலிதா உயிருடன் இல்லை. சசிகலா சிறையில் இருந்தார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது,

சயான் படுகாயம்
இநநிலையில் இந்த படுகொலை சம்பவம் நடந்த அடுத்த இரண்டு மாதங்களில் 28.4.2017 அன்று ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் மரணமடைந்தார். இந்த நிகழ்வு நடந்து 24 மணி நேரத்துக்குள் கேரளாவில் நடந்த இன்னொரு வாகன விபத்தில் சயான் தன் மனைவி மற்றும் குழந்தைகளை இழந்தார். அவரும் படுகாயம் அடைந்தார். பின்னர் கொடநாட்டில் சி.சி.டி.வி பொறுப்பாளராக இருந்தவர் ஜூலை 5ம் தேதி தற்கொலை செய்துகொண்டார்,

முக்கிய பிரமுகர்கள்
இப்படி 5 தொடர் மரணங்களை உள்ளடக்கிய கொடநாடு காவலாளி கொலை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாட்சிகள் மாற்றப்படுதாகவும், முக்கியப் பிரமுகர்களுக்கு கொலையில் தொடர்பிருப்பதாகவும் ஜாமீனில் வெளியில் இருந்த சயான், வாளையார் மனோஜ், ஆகியோர் கூறிவந்தனர். இதனைத்தொடர்ந்து இருவரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்

வழக்கில் திருப்பம்
இந்நிலையில் தற்போது கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு அடுத்தடுத்த நகர்வுகள் நடந்து வருகிறது. இந்த வழக்கில் அரசு சார்பு வழக்கறிஞர்கள் மாற்றப்பட்டு புதிதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்த ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோருக்கு அடுத்தடுத்து ஜாமீன் கிடைத்துள்ளது.

போட்ட அதிரடி ட்வீட்
இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன், கடந்த ஜூலை 20ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் "கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு இறுதி கட்டத்துக்கு வந்துவிட்டதாக மிகவும் உயர்மட்டத்தில் உள்ள வட்டாரங்கள் கூறுகின்றன... சில விறுவிறுப்பான ஒப்புதல் வாக்குமூலங்கள் மற்றும் உண்மைகளுக்காக காத்திருங்கள்..." என்றார். மேலும் "கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டு கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள்.... ஆதாரங்களுடன் அனைத்தர்கும் அதிர வைக்கும் விடைகள்... Game Over Bro..." என்று கூறி அதிரவைத்தார். தற்போது வழக்கில் கூடுதல் விசாரணை வேண்டும் என காவல்துறை மனு தாக்கல் செய்திருக்கிறது. எனவே இவ்வழக்கில் மர்ம முடிச்சுகள் அவிலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications