"ஹிஜாபை கழட்டுங்க..!" கர்நாடகாவை போலவே பீகாரில் எழுந்த சர்ச்சை.. போராட்டத்தில் குதித்த மாணவிகள்
பாட்னா: கர்நாடகாவைப் போலவே பீகார் மாநிலத்திலும் ஹிஜாப் அணிவது தொடர்பாக திடீரென போராட்டம் ஏற்பட்டு உள்ளது.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் சர்ச்சை எழுந்தது. அதாவது பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக மாணவிகள் போராட்டம் நடத்திய போதிலும், கல்லூரி நிர்வாகம் தனது உத்தரவை மாற்றவில்லை. இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிலும் மாறுபட்ட தீர்ப்பே வழங்கப்பட்டது.

ஹிஜாப் கழட்டுங்கள்
இதனிடையே இப்போது பீகாரில் மீண்டும் ஹிஜாப் சர்ச்சை எழுந்து உள்ளது. பீகாரில் முசாஃபர்பூர் கல்லூரி நேற்று தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருந்தது. அப்போது ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய மாணவிகளின் ஹிஜாப்பை அகற்றுமாறு ஆசிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன நடந்தது
முசாபர்பூரில் உள்ள கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தேர்வு சமயத்தில் ப்ளூடூத் சாதனத்தை அணிந்திருந்தார்களா என்பதைச் சோதனை செய்ய ஹிஜாப்பை அகற்றுமாறு கண்காணிப்பாளர்கள் கேட்டு உள்ளனர். அதற்கு அவர்கள் மறுத்ததால், தேர்வு அறையை விட்டு வெளியேறுமாறு கண்காணிப்பாளர் கூறியதாகத் தெரிகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளும் இதையே தான் கூறுகின்றனர்.

கல்லூரி முதல்வர் விளக்கம்
மறுபுறம், கல்லூரி நிர்வாகம் இதை வழக்கமான சோதனை என்றே கூறுகின்றனர். ஆனால், இதை மாணவிகள் வகுப்புவாத முத்திரை குத்தி பெரிய விஷயம் ஆக்கிவிட்டதாகத் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாகக் கல்லூரி முதல்வர் கூறுகையில், "தேர்வு எழுதும் போது அனைத்து மாணவிகளும் தங்கள் மொபைலை வகுப்பிற்கு வெளியே வைக்க வேண்டும். ப்ளூடூத் சாதனம் குறித்து சோதனை செய்ய ஹிஜாபை அகற்றுமாறு கேட்டு இருக்கிறார்கள். குறிப்பிட்ட ஒரு மாணவி இதற்கு ஆக்ரோஷமாக மாறிவிட்டார்.

பாகுபாடு இல்லை
மேலும், அந்த மாணவி அவரே தான் தேர்வை எழுதப் போவது இல்லை என்று கூறினார். இருப்பினும், கடைசி வரை அவர் ப்ளூடூத் சாதனம் வைத்து இருந்தாரா என்று காட்டவில்லை. இதன் பின்னர் அவர் இந்த விவகாரத்தை மத ரீதியாக எடுத்துச் செல்ல தொடங்கினார். கல்லூரி வளாகத்தில் மதம் அல்லது சாதி அடிப்படையில் எந்தவொரு பாகுபாடும் இல்லை. மதத்தின் பெயரால் பிரச்சினை செய்யுமாறு யாரோ அவர்களைத் தூண்டிவிட்டு இருக்கிறார்கள்.

மாணவி
11ஆம் வகுப்பு மாணவி இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சியளிக்கிறது. மதம் மற்றும் ஹிஜாப் என்ற பெயரில் யாரோ மாணவியைத் தவறாக வழிநடத்தியதாகத் தெரிகிறது. பள்ளி வளாகத்தில் மதம் அல்லது ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இல்லை" என்றார். மேலும், இந்தச் சம்பவத்தில் முறையான நடவடிக்கைகளே எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

போராட்டம்
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்நாடகாவில் பியு வகுப்புகளுக்கு ஹிஜாப் அணிந்து செல்லக் கூடாது என்று உத்தரவிட்டனர். நமது மாநிலத்தில் +1, +2 வகுப்புகள் உள்ளதைப் போல அங்கு பியு வகுப்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது கர்நாடகாவைப் போலவே பீகாரிலும் பியு கல்லூரியில் தான் போராட்டம் ஏற்பட்டு உள்ளது.