பலாத்கார குற்றவாளி.. பலியானதாக நாடகம்.. 4 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு வந்த அதிசயம்.. ட்விஸ்ட்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
சம்பவம் குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் போலி இறப்பு சான்றிதழ் பெற்ற குற்றவாளியின் தந்தையை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் பீகார் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா எனவும் காவல்துறை விசாரித்து வருகிறது.
8 வயது பிஞ்சுக்கு பாலியல் தொல்லை.. யோகா டீச்சருக்கு சாகும் வரை சிறை! சென்னை போக்சோ கோர்ட் அதிரடி

பாலியல் பலாத்காரம்
சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "இந்த சம்பவம் கடந்த 2018ம் ஆண்டு நடந்துள்ளது. அதாவது, பகல்பூர் மாவட்டத்தில் உள்ள இஷிபூர்-பரஹாத் பகுதியில்தான் சம்பவம் நடைபெற்றது. அக்டோபர் மாதம் 18ம் தேதி சிறுமி ஒருவர் வழக்கம்போல பள்ளி சென்று வீடு திரும்பியிருக்கிறார். பின்னர் உள்ளூர் அரசு நடுநிலைப் பள்ளியின் ஆசிரியரான நிரஜ் மோடியிடம் டியூஷன் சென்றுள்ளார். ஆனால் அன்று இரவு வீடு திரும்புகையில் அவர் மிகுந்த சோர்வுடனும் அழுதுகொண்டும் இருந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் விசாரிக்கையில் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக சிறுமி மழலை மொழியில் கூறியுள்ளார்.

உயிரிழப்பு
இதனையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் குற்றம்சாட்டப்பட்ட நபரை தேடினர். ஆனால், பள்ளியின் ஆசிரியரான நிரஜ் மோடி எதிர்பாராத விதமாக உயிரிழந்துவிட்டதாக சொல்லப்பட்டது. பின்னர அன்று மாலை அவரது உறவினர்களுக்கு சொல்லியனுப்பப்பட்டு அவசர அவசரமாக குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் நிரஜின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது தந்தை ராஜா ராம் மோடி உடல் அடக்கம் செய்யப்பட்டதை வீடியோ எடுத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் கொடுத்து இறப்பு சான்றிதழையும் பெற்று கொடுத்துள்ளார்.

உயிருடன்
சம்பவத்தையடுத்து குற்றவாளி உயிரிழந்துவிட்டதாக வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், சிறுமியின் தாயாருக்கு இதில் நீண்ட காலமாக சந்தேகம் இருந்து வந்துள்ளது. குற்றவாளியின் தந்தையின் நடத்தையில் வித்தியாசம் தெரிந்ததை அவர் அறிந்திருக்கிறார். பின்னர் குற்றவாளியின் வீட்டில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து தேட தொடங்கியுள்ளார். ஆனால் எதுவும் அவளுக்கு விளங்கவில்லை. பின்னர் ஒருவழியாக குற்றவாளி உயிருடன் இருப்பது தெரிய வந்தது. இதனை காவல்துறையில் நிரூபிக்க பல்வேறு வகையில் முயன்றாலும் அவள் தோற்றுக்கொண்டே இருந்தாள். இதனையடுத்து காவல்துறை இந்த விவகாரத்தில் முழு கவனத்தையும் செலுத்தியது.

நீதிமன்றத்தில் சரண்
போலீசார்கள் குற்றவாளியின் வீட்டை கண்காணிக்க தொடங்கினர். கண்காணித்ததில் குற்றவாளியின் தந்தையான ராஜா ராம் மோடியின் நடத்தையில் மாற்றங்கள் தெரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணையை அவர்கள் தீவிரப்படுத்தினர். இதில் காவல்துறையினரிடம் மாட்டி எங்கு அடி வாங்கிவிடுவோமோ என பயந்து உயிருடன் இருந்த குற்றவாளி நிரஜ் மோடி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். சம்பவம் குறித்து விசாரிக்கையில்தான் உண்மை வெளிவந்துள்ளது. அதாவது நிரஜ் மோடியை அடக்கம் செய்வதற்கு முன்னர் தேவையான முன்னேற்பாடுகளை அவரது தந்தை செய்துள்ளார்.

விசாரணை
நிரஜ் மோடிக்கு பதில் போலியான உருவத்தை கொண்டு இறுதி சடங்கு செய்துள்ளார். பின்னர் இது தொடர்பான வீடியோவை வைத்து அவர் இறப்பு சான்றிதழையும் போலியாக வங்கியுள்ளார். இதை அனைத்தையும் கேட்டு அதிர்ந்த நீதிபதி குற்றவாளி மட்டுமல்லாது, குற்றவாளியின் தந்தையையும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தனர். இந்த உண்மையை 4 ஆண்டுகள் போராடி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த சிறுமியின் தாயை பலரும் பாராட்டி வருகின்றனர்.