செல்வராஜ் மடியில் சொகுசாக உட்கார்ந்து கொண்டு.. கையில் இருப்பதை கொத்திக் கொத்தி.. வாவ் காக்கா!
புதுவை: புதுச்சேரியில் சைக்கிள் ரிக்சா தொழிலாளிகளிடம் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக நட்பாக பழகி வரும் காகம். ரிக்சா தொழிலாளிகளுடன் காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் உணவு உட்கொண்டு வரும் காகத்தின் பாசம் நெகிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் அரவிந்தர் அன்னை ஆசிரமம் அருகே சைக்கிள் ரிக்சா ஸ்டேண்ட் உள்ளது. இங்கு சுமார் 50 க்கும் மேற்பட்டோர் பரம்பரை பரம்பரையாக சைக்கி ரிக்சா ஓட்டி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த ரிக்சா ஸ்டேண்டில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இறக்கையில் அடிப்பட்ட காகம் ஒன்று நகர முடியாமல் கிடந்துள்ளது. அதனை மீட்ட அங்கிருந்த ரிக்சா ஓட்டுநர்கள் அவற்றிற்கு சிகிச்சை அளித்து பறக்க விட்டனர்.

3 வேளை உணவு
ஆனால் தன்னை காப்பாற்றிய ரிக்சா ஓட்டுநர்களை பிரிய மனமில்லாத அந்த காகம் அவர்களையே சுற்றி சுற்றி வந்துள்ளது. ஒருகட்டத்தில் ரிக்சா ஓட்டுநர்களிடம் நெருங்கி பழக ஆரம்பித்த காகம், ரிக்சா ஸ்டேண்ட் அருகில் உள்ள மரத்திலேயே கூடு கட்டி தங்க ஆரம்பித்துவிட்டது. தினமும் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளும் ரிக்சா ஓட்டுநர்கள் தரும் உணவை மட்டுமே சாப்பிட்டு வருகிறது அந்த காகம்.

திண்பண்டங்கள்
குறிப்பாக செல்வராஜ் என்ற ரிக்சா ஓட்டுநரிடம் அளவுகடந்த பாசம் வைத்துள்ள காகம், அவர் மேலே ஏறி உட்கார்ந்து, அவர் கையில் உள்ள உணவு மற்றும் திண்பண்டங்களை விரும்பி சாப்பிட்டு வருகிறது.

முட்டை, மீன்
காகம் குறித்து செல்வராஜ் கூறுகையில், காகம் தங்களைவிட்டு ஒருநாள் கூட பிரிந்ததில்லை என்றும், உணவு இல்லையென்றால் ரிக்சாவை அங்குலம் அங்குலமாக காகம் ஆராய தொடங்கும். சில நேரங்களில் எங்களை பாசமாக கொத்தி உணவு கேட்கும். நாங்களும் கடந்த 5 வருடமாக காகத்திற்கு உணவு அளித்து வருவதாக கூறுகிறார். மேலும் காகம் ஐஸ்கிரீம், முட்டை தோசை, மீன், குழிப்பனியாரம் உள்ளிட்ட உணவு விரும்பி சாப்பிடுவதாக தெரிவிக்கிறார்.

பாசம்
மனிதர்களை கண்டாலே பறந்து செல்லும் காகங்களுக்கு மத்தியில், தனக்கு உதவியவர்களை விட்டு செல்ல மனமில்லாமல், அவர்களுடனேயே பயணித்து வரும் காகத்தின் இந்த செயல் பாசத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றே கூறலாம்.