இருளில் மூழ்கிய புதுச்சேரி..ரங்கசாமி பேச்சுவார்த்தை.. மின்துறை ஊழியர்களின் போராட்டம் வாபஸ்!
புதுச்சேரி: மின்சாரத்துறை ஊழியர்களின் தொடர் போராட்டம் காரணமாக புதுச்சேரி இருளில் மூழ்கியது. ஆறு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட மின்சாரத்துறை ஊழியர்களுடன் முதல்வர் ரங்கசாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து மின்துறை ஊழியர்கள் இன்றே பணிக்குத் திரும்புவதாக உறுதி அளித்துள்ளனர்.
புதுச்சேரியில் மின்சாரத்துறையை அரசு தனியார்மயமாக்கும் முடிவில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
அண்மையில் தனியார்மயமாக்கல் குறித்து டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட நான்கு பிராந்தியங்களிலும் ஒரே நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனால் ஒட்டுமொத்த புதுச்சேரி மாநிலமும் இருளில் மூழ்கியது.
முற்றும் மின் ஊழியர் போராட்டம்! முழுவதுமாக இருளில் மூழ்கிய புதுச்சேரி! போராட்டத்தில் குதித்த மக்கள்!

போராட்டம் தீவிரம்
மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமயில், தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, காவல்துறை டி.ஜி.பி மனோஜ்குமார் லால், மின்துறை செயலர் அருண் உள்ளிட்ட அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் நமச்சிவாயம்
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம், அரசு கொள்கை முடிவெடுத்து மின்துறையை தனியார்மயமாக்ககுவது என்ற நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. இந்நிலையில் மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பேச்சுவார்த்தை நடத்த அரசு முயற்சி செய்தும், அவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துக்கொள்ளவில்லை. கடந்த சில நாள்களாக மின்துறை ஊழியர்கள் மின் தடையை ஏற்படுத்தினார்கள். இருந்தாலும் அரசு அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, சரி செய்து மக்களுக்கு மின் விநியோகம் கொடுக்கப்பட்டது.

இருளில் மூழ்கிய புதுச்சேரி
இந்நிலையில் நேற்று மாலையில் மின்துறை ஊழியர்கள், வில்லியனூர், பாகூர், தொண்டமாநத்தம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மின் ஒயர்களை துண்டித்திருக்கின்றனர். அத்துடன் பீஸ் கட்டைகளையும் கையுடன் பிடுங்கி எடுத்துச் சென்றனர். இதனையடுத்து எங்கும் இருள் சூழ்ந்தது.

நள்ளிரவில் கைது
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மின் ஊழியர்கள் கிட்டத்தட்ட 500 பேருக்கு மேலானோரை மின்சாரத்துறை அலுவலகத்திலேயே புகுந்து துணை ராணுவப்படையினர் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர். நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்கள், காவலர் சமுதாய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

வழக்குப் பதிவு
பின்னர், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்த வேலைகளிலும் ஈடுபடமாட்டோம். அறவழியில் மட்டுமே போராடுவோம் என துணை ஆட்சியர் முன்பு உறுதி அளித்த பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், புதுசேரியில் மின் தடை ஏற்படுத்தியதாக கூறி 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
மின்துறையை பொருத்தவரை மின்தடை ஏற்படாதவாறு அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. ஊழியர்கள் போராட்டம் அறிவித்துள்ள நிலையில் கூடுதலாக ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்துள்ள மின்துறை ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். மின்துறை ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசு பலமுறை அழைத்தும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் தற்போது வரை பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார்.

அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி அழைப்பு
இதற்கிடையே, மின்துறை ஊழியர்கள் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் வாபஸ்
இந்த பேச்சுவார்த்தையின் போது மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார். இதனையடுத்து, கடந்த 6நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.