ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்பு.. பாஜக முக்கிய நிர்வாகி
ராமநாதபுரம்: பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதாக தகவல்கள் பரவின. அதன்பிறகு இதுபற்றிய எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளது என பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் முக்கிய தகவலை கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன. பாஜக அனைத்து மாநிலங்களிலும் களப்பணியை தொடங்கி உள்ளது. அதேபால் தேசிய அளவில் பாஜகவை எதிர்க்க கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி ஈடுபட்டுள்ளது.

அதேபோல், மாநிலத்தில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளன. இந்நிலையில் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம், கன்னியாகுமரி தொகுதிகள் பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அதாவது காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும், பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுவதாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும் அதனை இருதலைவர்களும் உறுதி செய்யவில்லை. ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடியை ராமநாதபுரம் தொகுதியிலும், ராகுல் காந்தியை கன்னியாகுமரி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என கட்சி தலைவர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறியுள்ளார். அதாவது ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவராக இருந்த கதிரவன் கடந்த மாதம் மாற்றப்பட்டு புதிய தலைவராக தரணி முருகேசன் நியமிக்கப்பட்ட நிலையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் பங்கேற்றார். அப்போது தான் அவர் அந்த தகவலை கூறினார். இதுபற்றி கருப்பு முருகானந்தம் கூறுகையில், ‛‛2024 நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக மாவட்ட கட்சி நிர்வாகத்தில் எந்த மாற்றம் வேண்டுமானாலும் தலைமை செய்யும். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் நீக்கப்படுவார்கள்.
இந்த தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளது. ஏனெனில் தமிழக பாஜக நிர்வாகிகள் பிரதமர் போட்டியிட வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். ராமநாதபுரம் தமிழகத்தில் மிகவும் எதிர்பார்ப்பு உள்ள தொகுதியாக மாறியுள்ளது'' என கூறியுள்ளார். இதனால் மீண்டும் ராமநாதபுரம் தொகுதி மீதான பார்வை அதிகரிக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications