சாகும்வரை சாப்பிட மாட்டேன்! அறிவித்த வேகத்தில் போராட்டத்தை வாபஸ் பெற்ற கருணாஸ்! என்ன காரணம் தெரியுமா?
இராமநாதபுரம் : பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டியதாக வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் அகற்றப்பட்டதை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்த நடிகர் கருணாஸ் அந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் தெய்வீகமும் எனது இரு கண்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவானது இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
நாளை தேவர் ஜெயந்தி.. பசும்பொன்னில் சாகும்வரை உண்ணாவிரதம்.. திடீரென அறிவித்த கருணாஸ்.. என்னாச்சி?

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்ட வேண்டும் என நீண்ட காலமாகவே பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால் இது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தியையொட்டி நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் நிறுவனர் முன்னாள் எம்.எல்.ஏ. கருணாஸ் சார்பில் அன்னதான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

நடிகர் கருணாஸ்
அந்தப் பந்தலில் முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூட்டப்பட்டதாக பிரம்மாண்ட கட் அவுட் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதனால் பெரும் பரபரப்பு எழுந்த நிலையில் இதையறிந்த கமுதி போலீசார், மதுரை விமான நிலையத்துக்கு மத்திய அரசோ, மாநில அரசோ பெயர் வைக்காத நிலையில், தன்னிச்சையாக பெயர் வைத்ததாகக் கூறி அந்த பேனரை அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கருணாஸ் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இதனால் பதற்றமான சூழல் நிலவியது.

சாகும் வரை உண்ணாவிரதம்
இந்த நிலையில் மீண்டும் கருணாஸ் அமைத்த அன்னதானப் பந்தலில் குறிப்பிட்ட அந்த பிளக்ஸ் பேனர் மீண்டும் வைக்கப்பட்டதால் காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொள்வதாக கருணாஸ் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள கருணாஸ்,"தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரில் விமான நிலைய மாதிரி தோற்றம் அமைத்ததை 29.10.2022 அன்று அப்புறப்படுத்திய காவல் துறையை கண்டித்து பசும்பொன்னில் நான் சாகும் வரை உண்ணாவிரதத்தை இன்று அறிவித்திருந்தேன்.

போராட்டம் வாபஸ்
ஆனால், காவல்துறையினர் அப்புறப்படுத்திய தேவரின் மதுரை விமான நிலைய மாதிரி அரங்கை உடனடியாக அதே இடத்தில் அமைத்துக் கொள்ள சரக காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆகவே எங்களது உணர்வை புரிந்துகொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொண்டு. உண்ணாவிரத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்" என கூறியுள்ளார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.