அதிமுகவை ஏன் எதிர்க்கவில்லை? ர.ரக்கள் தவெகவில் இணைந்துவிட்டார்கள்! ஆதவ் அர்ஜூனா புது விளக்கம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் இன்று சேலத்தில் நடைபெற்று வருகிறது. அதில் சிறப்புரையாற்றிய கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, "அதிமுக தொண்டர்கள் எப்போதோ தவெகவில் இணைந்துவிட்டார்கள்" என்று கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் அவர் பேசியதாவது, "நாங்கள் ஏன் அதிமுகவை எதிர்க்கவில்லை என்று பரவலாக பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதிமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களும் எப்போதோ தவெகவில் இணைந்துவிட்டார்கள்.

எம்ஜிஆர் அப்போது என்ன குறிக்கோளுடன் கட்சியை தொடங்கினாரோ, ஜெயலலிதா அம்மையார் எந்த குறிக்கோளுடன் அதிமுகவை மீட்டெடுத்தாரோ, அந்த குறிக்கோளின் ஒற்றை நம்பிக்கை நம்முடைய தலைவர் விஜய்தான்.
இந்த கொள்கை கொண்ட அரசு இல்லாததால்தான் திமுக கடைசி மூன்று தேர்தல்களில் சுலபமாக வெற்றிப்பெற்றிருக்கிறது. ஆனால் இனி அப்படி வெற்றிப்பெற முடியாது. ஏனெனில் உங்களை எதிர்த்து அரசியல் செய்யும் தலைவர்கள், பாஜகவிடம் சரணடைபவர்கள் அல்ல. பாஜகவை கடுமையாக துணிவுடன் எதிர்க்கக்கூடிய ஒரே தலைவர் விஜய்தான். இஸ்லாமிய தோழர்களே! குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம். எங்களுக்கு குரானும் ஒரு கடவுளின் நம்பிக்கைதான்.
குர்ஆன் மீது ஆணையாக சொல்கிறோம், எந்த காலத்திலும் கூட்டணியும், உறவும் கிடையாது என்பதை அழுத்தமாக இந்த சேலம் மண்ணில் வைத்து சொல்கிறோம். கடந்த 1944 சேலம் மண்ணில் பெரியார் தி.கவை எந்த மதவாதத்தை எதிர்த்து உருவாக்கினாரோ, எந்த சாதியவாதத்தை எதிர்த்து உருவாக்கினாரோ, அதே மண்ணில் நாங்கள் முழக்கமிடுகிறோம். இந்த காரணத்திற்காகத்தான் சேலத்தில் நாங்கள் மாநாட்டை உருவாக்கியிருக்கிறோம்.
நண்பர்களே பெரியார் இறக்கவில்லை. அதை உயிரோடு வைத்திருக்கத்தான் தலைவர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். இப்போது எங்கள் நோக்கத்தை தெளிவாக்கிவிட்டோமா? ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்கள் எங்களுடன் எப்போதோ இணைந்துவிட்டார்கள். எங்கள் அரசியல் எதிரி திமுக, கொள்கை எதிரி பாஜக. மக்கள் முதல்வர், முதல்வர் வேட்பாளர் விஜய் மட்டும்தான்.
அடுத்த நான்கு மாதங்களில் புரட்சியை விஜய் உருவாக்குவார். திமுக கூட்டங்களுக்கு அரசு பேருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அந்த கூட்டத்திலும் தங்களின் சாதனைகளை பற்றி பேசாமல், தவெகவை எப்படி திட்டுவது என்பது குறித்த பேசிக்கொண்டிருப்பார்கள். அதுதான் திமுக" என்று விமர்சித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications