சேலம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"இந்துத்துவா வென்றால்தான் தமிழ் வாழும்".. கர்நாடக பாஜக தேஜஸ்வி சூர்யா பகீர் பேச்சு.. கொந்தளிப்பு!

Google Oneindia Tamil News

சேலம்: "இந்துத்துவா வெற்றி பெற்றால்தான், தமிழ் வாழும்" என்று பாஜக இளைஞர் மோர்ச்சா தலைவரும், பெங்களூர் லோக்சபா தொகுதி எம்பியுமான தேஜஸ்வி சூர்யா பேசிய பேச்சால் பெரும் கொந்தளிப்பு உருவாக்கியுள்ளது.

தேஜஸ்வி பேச்சு, நேரடியாக தமிழர்களை மிரட்டுவது போன்ற ஒரு பேச்சாக அமைந்துவிட்டதுதான், இத்தனை கோபத்துக்கும் காரணம்.

தமிழக பாஜக இளைஞரணி சார்பில் சேலத்தில் நேற்று ஒரு மாநாடு நடைபெற்றது. இதில் தேஜஸ்வி சூர்யா பங்கேற்றார். இதே கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன், துணை தலைவர்கள், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

இந்த கூட்டத்தில்தான் தேஜஸ்வி சூர்யா இப்படி ஒரு சர்ச்சை கருத்தை கூறி சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். "திமுக இந்துக்களுக்கு எதிரானது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கோவில்கள் உள்ளது. இது ஒரு புனிதபூமி. ஆனால் இந்து விரோத கட்சியாக இருக்கக்கூடிய திமுக இந்த மண்ணில் தோற்கடிக்கப்பட்டே தீர வேண்டும்" என்றார் தேஜஸ்வி.

இந்துத்துவா வெற்றி

இந்துத்துவா வெற்றி

எதிர்க்கட்சி என்ற வகையில் ஏதோ விமர்சனம் செய்கிறார் என்பதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. அவர் அடுத்ததாக கூறிய விஷயம் தான் முக்கியமானது. மிக மோசமானதும் கூட. "தமிழ் வாழ வேண்டுமென்றால் இந்துத்துவா வெற்றி பெற வேண்டும்.. கன்னடம் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்துத்துவம் வெற்றி பெற வேண்டும்" என்றாரே பார்க்கலாம். இதுதான் அனைவரையும் தூக்கிவாரிப் போட்டது.

 பரவலாக கண்டனம்

பரவலாக கண்டனம்

தேஜஸ்வி சூர்யாவின் இந்த கருத்தை கேட்ட பலரும் கட்சி சார்பு இல்லாமல் சமூக வலைத்தளங்களில் கண்டித்து கருத்து கூறுவதை பார்க்க முடிகிறது. "தமிழ்நாடு" என்று இந்த மாநிலத்திற்கு பெயர் சூட்டியது அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோதுதான். தமிழை செம்மொழியாக வேண்டும் என்று வலியுறுத்தியது திராவிட கட்சிகள்தான். இதில் எதிலுமே பங்குதாரராக இல்லாத பாஜக, தமிழ் வாழ வேண்டுமென்றால் தங்கள் கொள்கைக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது சுத்தமாக சம்பந்தமே இல்லையே என்று தெரிவிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

திருவள்ளுவர் புரோகிதர் படம்

திருவள்ளுவர் புரோகிதர் படம்

இந்துத்துவாவுக்கு ஆதரவு அளித்தால் தமிழ் வாழும் என்கிறீர்கள்.. ஆனால் தமிழின் பெரும் புலவர் திருவள்ளுவருக்கு, புரோகிதர் போல சித்தரிப்பு செய்து அதை பாடத்திட்டத்தில் சேர்க்கிறீர்களே என்ற கேள்விகளுக்கு பாஜக என்ன பதில் சொல்லப் போகிறது என்பதுதான் தெரியவில்லை.

சமஸ்கிருதம்

சமஸ்கிருதம்

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் மொழி கட்டாயம் கிடையாது.. ஆனால் சமஸ்கிருதம் மற்றும் இந்தி ஆகியவை கட்டாயமாக இருக்கின்றன. ஹிந்துத்துவா என்றால் சமஸ்கிருதம்தானே முக்கியத்துவம் பெறுகிறது. தமிழுக்கு நீங்கள் முக்கியத்துவம் தரவில்லை என்பது நடைமுறையில் பார்த்தாலே தெரிகிறதே. அப்படி இருக்கும்போது தமிழ் வாழ்வதற்கு ஹிந்துத்துவா எப்படி பயன்படும் என்று தேஜஸ்வி சூர்யாவை துரத்துகிறது கேள்விகள்.

தவித்த வாய்க்கு தண்ணீர்

தவித்த வாய்க்கு தண்ணீர்

"தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் தரமாட்டோம்.. மேகதாது அணை கட்டுவோம்.. என்று ஒருமித்த குரலில் கன்னட அரசியல்வாதிகள், அதுவும் பாஜக தலைவர்கள் கூறுகிறார்கள். அப்படியிருக்கும்போது ஹிந்துத்துவா என்ற அடிப்படையில் கன்னடமும் தமிழும் எப்படி ஒன்றாக இணைந்து பயணிக்க முடியும்? தண்ணீரை பகிர்ந்து கொள்வதில் கூட உங்களுக்கு தாராள மனம் இல்லை.. தமிழ்நாடு, தமிழக உரிமை என்று தனித்து பேசினால்தான் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்கிறது.. கர்நாடகாவைச் சேர்ந்த உங்களுக்கே இது நன்றாக தெரியுமே," என்று ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கேட்கிறார்கள் நெட்டிசன்கள்.

ஓதுவார்களுக்கு உரிமை

ஓதுவார்களுக்கு உரிமை

கோவில்களுக்குள் சமஸ்கிருதம் இருக்க வேண்டும்.. தமிழ் பாடுவதற்கு ஓதுவார்களுக்கு கூட உரிமை இல்லை என்று கூறுவது தானே ஹிந்துத்துவா கொள்கை. தமிழர்கள் தங்கள் கோவில்களில் தமிழ் ஒலிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். அப்படியிருக்க ஹிந்துத்துவா எப்படி தமிழை வாழ வைக்கும் என்ற கேள்விக்கு பாஜக தரப்பு இதுவரை பதில் சொல்லவில்லை.

 மதம் சார்ந்த பிரச்சாரம்

மதம் சார்ந்த பிரச்சாரம்

உண்மைக்குப் புறம்பான.. நடைமுறையில் நடப்பதற்கு மாறாக.. ஒரு வார்த்தையை சொல்வதோடு மட்டுமின்றி, "இந்துத்துவா வளர்ந்தால்தான் தமிழ் வாழும்" என்பது, ஹிந்துத்துவாவுக்குச் ஆதரவு தெரிவிக்காவிட்டால் தமிழ் அழியும் என்பதற்கான 'மறைபொருள் தானே' என்று மடக்கி கேட்கிறார்கள் தமிழர்கள். தமிழகம் என்றுமே மதம் சார்ந்து வாக்களித்தது கிடையாது. இங்கு மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களை ஆட்சி கட்டிலில் ஏற்றி வைத்துள்ளான் தமிழன். மதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்தவர்களுக்கு டெபாசிட் கொடுக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்கள் மக்கள்.
எனவே மதத்துக்காக தமிழை அடமானம் வைப்பது போன்ற இந்தப் பேச்சுக்கள் இனியும் தொடரக்கூடாது.. என்ற ஒற்றை குரல் தமிழர்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பேதமின்றி ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

English summary
Bangalore South MP and BJP Yuva morcha president Tejasvi Surya says, if Tamil has to survive hindutva has to win.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X