போஸ்டர்கள் கிழிப்பு... சேலம் வரும் சசிகலாவை எதிர்க்கத் தயாராகும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள்
சேலம் முழுவதும் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்: சசிகலாவின் வருகை சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது எடப்பாடி பழனிச்சாமியை சந்தோஷப்படுத்த அவரது ஆதரவாளர்கள் சசிகலாவை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நிலவியது. ஆட்சியை தக்கவைத்தது போல, கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்த சசிகலாவை பொதுச்செயலாளராக நிர்வாகிகள் அறிவித்தனர்.
முதல்வராக சசிகலா முயற்சி செய்து அது நிறைவேறவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றார் சசிகலா. 4 ஆண்டு சிறைவாசம் முடிந்த பின்னர் தமிழகம் வந்த சசிகலா சில காலம் அரசியலிருந்து ஒதுங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.

சசிகலா அறிக்கை
தொடர்ந்து நடைபெற்ற தேர்தல்களிலும் அதிமுக தொடர்ந்து தோல்வி அடைந்தது இதை அடுத்து அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைக்க தான் அனைத்து மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டார் இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆன்மீக சுற்றுப்பயணம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் சசிகலா.

சேலத்தில் சசிகலா முகாம்
இன்று மாலை சசிகலா எடப்பாடி பழனிச்சாமி தொகுதியான எடப்பாடி தொகுதிக்கு தனது பயணத்தை சேலம் மாவட்டத்தில் தொடங்குகிறார் எடப்பாடி பகுதியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பல்வேறு கட்சி நிர்வாகிகளை சந்திக்கப் போகிறார் சசிகலா. சசிகலாவின் வருகையை முன்னிட்டு பல பகுதிகளிலும் ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

போஸ்டர்கள் கிழிப்பு
இந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களை எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்துள்ளனர்.சேலம் வரும் சசிகலாவுக்கு எதிராக கருப்பு கொடி போராட்டங்களையும் நடத்த எடப்பாடி ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சசிகலாவிற்கு எதிராக போராட்டம்
இன்று இரவு ராஜகணபதி கோவில் அருகே சசிகலா வரும்போது சில எதிர்ப்புகளை தெரிவிக்க எடப்பாடியின் ஆதரவாளர்கள் தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா வருகை சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சசிகலாவிற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

சசிகலாவிற்கு சோதனை
எடப்பாடி பழனிச்சாமியை மகிழ்ச்சிப்படுத்த சசிகலாவை எதிர்த்து சில போராட்டங்களை நடத்த அவரது ஆதரவாளர்கள் ரகசிய கூட்டங்களை நடத்தி உள்ளனர். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சேலம் சுற்றுப்பயணம் சசிகலாவுக்கு சோதனையாக இருக்குமா அல்லது சாதனையாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications