வேலூர் விஜயா பானு 10 ரூபாய் சாப்பாடு போட்டு, சேலத்தில் 20000 பேரிடம் 500 கோடி மோசடி செய்தது எப்படி?
சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி ரூ.500 கோடி மோசடி செய்த புகாரில் வேலூரைச் சேர்ந்த விஜயாபானு கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் சேர்ந்து மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விஜயா பானு, சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள சிவகாமி மண்டபத்தை வாடகைக்கு எடுத்து, 10 ரூபாய்க்கு மலிவு விலையில் சாப்பாடு போட்டு, சுமார் 20 ஆயிரம் பேரிடம் 500 கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதை எப்படி செய்தார் என்று பார்ப்போம்.
சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனி பகுதியில் சிவகாமி திருமண மண்டபம் அமைந்திருக்கிறது. தனியாருக்கு சொந்தமான இந்த மண்டபத்தை புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற அமைப்பு வாடகைக்கு எடுத்து கடந்த 2 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளது. புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை அமைப்பை வேலூரை சேர்ந்த விஜயாபானு (வயது 48) என்பவர் நடத்தி வந்தார்.

விஜயா பானு, சிவகாமி திருமண மண்டபத்தில் அறக்கட்டளையை தொடங்கியதுடன் ஏழை, எளிய மக்களுக்கு ரூ.10-க்கு மலிவு விலையில் உணவு வழங்கி வந்தார். அதேபோல் இலவச தையல் பயிற்சி, கம்ப்யூட்டர் பயிற்சி, டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி, பெண்களுக்கு பாக்கு தட்டு தயாரித்தல், மெழுகு வர்த்தி தயாரித்தல் உள்பட பல்வேறு பயிற்சிகளை இலவசமாக அளித்துள்ளார்.இப்படி ஏழைகளுக்கு பல நலத்திட்ட உதவிகளை விஜயா பானு வழங்கி உள்ளார்.
இதை பயன்படுத்தி வேலூர் விஜயா பானு அம்மாப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்களிடம் நல்ல முறையில் பழகினார். தன்னுடன் பழகிய பெண்கள் மற்றும் ஆண்களிடம், அறக்கட்டளையில் பணத்தை முதலீடு செய்தால் அதற்கு வட்டியுடன் இரட்டிப்பு தொகை தருவதாக ஆசை வார்த்தை கூறி வசூலிக்க தொடங்கி உள்ளார். அதன்படியே பணத்தை பலருக்கு அவர் கொடுத்தாராம். இந்த தகவலை கேள்விப்பட்டு. சேலம் அம்மாப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், அறக்கட்டளை இயங்கி வந்த சிவகாமி திருமண மண்டபத்திற்கு சென்று புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை நிர்வாகத்திடம் பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தனர். அதாவது, ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை ஏராளமானோர் முதலீடு செய்ய தொடங்கியிருக்கிறார்கள்.
அப்படி ரூ.1 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ஆரம்பத்தில் ரூ.17 ஆயிரம் வட்டி மட்டும் கொடுத்தார்கள். இதனால் உற்சாகம் அடைந்த பலர் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கிறது என்று நினைத்து தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை அந்த அறக்கட்டளையில் முதலீடு செய்ய ஆரம்பித்தனர். அப்படி முதலீடு செய்த பலருக்கு பணம் கொடுக்கப்பட்டுக்கொண்டு தான் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த திருமண மண்டபத்தில் எப்போது பார்த்தாலும் மக்கள் சென்று வந்து கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் இதை கவனித்த சிலர், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை பொதுமக்களிடம் இருந்து பணத்தை வசூலிப்பது குறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சேலம் உதவி கமிஷனர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது மக்களிடம் இருந்து ரூ.1 லட்சம் பணத்தை முதலீடாக பெற்றால் 9 மாதத்திற்கு மாதந்தோறும் ரூ.30 ஆயிரம் கொடுப்பதாக கூறி ஆயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு பெற்றிருப்பதை கண்டுபிடித்தனர்.
மேலும் அந்த அறக்கட்டளை நிர்வாகிகள், எந்தவொரு அங்கீகாரமும் பெறாமல் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கடந்த வியாழக்கிழமை மாலை திருமண மண்டபத்திற்கு மீண்டும் போலீசார் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்த விஜயா பானு மற்றும் ஊழியர்கள் போலீசாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரம் அடைந்து சோதனையிட வந்த போலீசாரை சிலர் தாக்கியிருக்கிறார்கள்.
இதையடுத்து சம்பவம் முழுவதும் சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் துணை கமிஷனர்கள் வேல்முருகன், கீதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருமண மண்டபத்திற்க வந்தனர். மோசடி நடந்து வருவது பற்றி பணம் செலுத்த வந்த மக்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உடனடியாக விசாரித்தனர். தொடர்ந்து திருமண மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டது.
அப்போது போலீசாரை கண்டதும் அறக்கட்டளை நிர்வாகிகள் பணத்தை மண்டபத்திற்குள் பதுக்கி வைக்க முயற்சி செய்தனர். குப்பை தொட்டிக்குள் கட்டு கட்டாக பணத்தை போட்டு மறைத்துள்ளனர். இதை கண்ட போலீசார் குப்பை தொட்டிகளை கிளறி அதில் மறைத்து வைத்திருந்த பணம், நகைகளை மீட்டனர். மொத்தம் ரூ.12 கோடி பணம், 2½ கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, 200 மூட்டை அரிசி, 200 மூட்டை மளிகை பொருட்கள் திருமண மண்டபத்தில் மீட்கப்பட்டது.
தொடர்ந்து அறக்கட்டளை நடத்திய விஜயா பானு, அவருடைய உதவியாளர்கள் சேலத்தை சேர்ந்த ஜெயபிரதா (47), பாஸ்கர் (49) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அங்கீகாரம் இல்லாத திட்டத்தில் முறைகேடாக மக்களிடம் ஆசை வார்த்தை கூறி பணம் முதலீடு செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் சோதனையிட போலீசார் வந்தபோது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்கியதால் 12 பேர் மீது அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ஒட்டுமொத்தமாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான விஜயா பானு தரப்பு 20 ஆயிரம் பேரிடம் ரூ.500 கோடிக்கு மேல் மோசடி செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் கைதான விஜயா பானு, ஜெயபிரதா, பாஸ்கர் ஆகிய 3 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். போலீசை தாக்கி கைதான 12 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஏழை மக்களுக்கு உதவி செய்வதாக ஆரம்பித்து, வெறும் 10 ரூபாயில் மலிவு விலைக்கு சாப்பாட்டில் ஆரம்பித்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து மோசடி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications