"நிலைமை மோசம்." பிஎஸ்எல் விளையாட முடியாது! பாகிஸ்தானிலிருந்து வெளியேறும் இங்கிலாந்து வீரர்கள்?
இஸ்லாமாபாத்: இந்தியா பாகிஸ்தான் இடையே நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே பாகிஸ்தானில் நடைபெற்று வரும் பிஎஸ்எல் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள், அங்கிருந்து வெளியேறினால் போதும் என இருக்கிறார்களாம். பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் பாகிஸ்தானை விட்டு வெளியே விரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகின் மிகப் பெரிய மற்றும் பிரம்மாண்டமான கிரிக்கெட் லீக் என்றால் அது ஐபிஎல் தான்.. இதனால் தான் ஐபிஎல் போட்டிகளில் விளையாட டாப் வீரர்கள் விரும்புவார்கள். மேலும், ஐபிஎல் தொடர்கள் நடக்கும் போது வேறு தொடர்களும் உலகில் நடக்காது. ஆனால், இந்தியாவுடன் வேண்டும் என்றே முஷ்டியை முறுக்க விரும்பும் பாகிஸ்தான் இதே காலகட்டத்தில் தான் அதன் பிஎஸ்எல் போட்டிகளில் விளையாடுகிறது. பொதுவாக ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைக்காத வீரர்களே பிஎஸ்எல் தொடரில் விளையாடுவார்கள்.

பதற்றம்
இப்போது இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே நேற்று நடந்த ஐபிஎல் போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசனை நடத்தி வருகிறது. வீரர்களின் பாதுகாப்பைக் கருதி ஆலோசனை நடத்தி வருகிறது. ஆனால், பாகிஸ்தான் வீரர்கள் பற்றி எல்லாம் கவலையில்லாமல் போட்டிகளை நடத்தவே விரும்புகிறது.
இதற்கிடையே இந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பங்கேற்றுள்ள இங்கிலாந்து வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற விரும்புகிறார்களாம். அங்கு எப்போது என்ன நடக்கும் என்ற சூழலே தெரியாததால் விட்டால் போதும் என்று வெளியேற ரெடியாக இருக்கிறார்களாம்.
விட்டால் போதும்
இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், பிஎஸ்எல் போட்டிகள் நடைபெறுமா என்பதிலேயே கேள்வி எழுந்தது. ஆனால், மீதமுள்ள போட்டிகளை நடத்துவதில் பிஎஸ்எல் அமைப்பு உறுதியாக இருக்கிறது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் அதிகரிக்கலாம் என்பதால் இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தானில் தங்க விரும்பவில்லையாம்.
தற்போது இங்கிலாந்தைச் சேர்ந்த சாம் பில்லிங்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டாம் கரன், டேவிட் வில்லி, கிறிஸ் ஜோர்டான், டாம் கோஹ்லர்-கேன்மோர் மற்றும் லூக் வுட் ஆகிய ஏழு இங்கிலாந்து வீரர்கள் பிஎஸ்எல் தொடரில் விளையாடி வருகிறார்கள். அவர்களில் பலர் வெளியேற விரும்புகிறார்களாம். பிஎஸ்எல் போட்டிகள் இன்னும் 10 நாளுக்கு மேல் இருக்கிறது. ஆனாலும், பாதுகாப்பு காரணங்களால் அவர்கள் அங்கு இருக்கவே விரும்பவில்லையாம்.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்
இந்த விவகாரம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவர்கள் பாகிஸ்தானில் உள்ள வீரர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறார்களாம். இன்னும் வீரர்களை வெளியேற இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தவில்லை. இங்கிலாந்து அரசின் பயண ஆலோசனையைப் பொறுத்து முடிவெடுக்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அமெரிக்க தூதரகம் லாகூரில் உள்ள அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா பாகிஸ்தான்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாகிஸ்தான் நேற்று திடீரென இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த முயன்றது. காஷ்மீர் தொடங்கி எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு முயன்றது. இருப்பினும், இந்திய ராணுவம் அந்தத் தாக்குதல்களை முறியடித்தன. மேலும், பாகிஸ்தான் நடத்தும் தாக்குதலுக்குத் தக்கப் பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் இந்தியா மிக உறுதியாகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications