
இலங்கை: யாழ்ப்பாணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் தமிழ் கட்சி தலைவர்கள் சந்திப்பு
யாழ்ப்பாணம்: இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஈழத் தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இலங்கை மலையகத்தில் இந்திய வம்சாவளி தமிழர்களை சந்தித்து பேசினார் அண்ணாமலை.

பின்னர் மலையகத் தமிழர்களின் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்த மே தினப் பொதுக் கூட்டத்தில் நேற்று அண்ணாமலை பங்கேற்றார். அதில் பேசிய அண்ணாமலை, அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு சென்றதைப் போல இலங்கையின் பொருளாதார பிரச்சனையை இந்திய பிரதமர் மோடி தூக்கி சுமக்க தயாராக இருக்கிறார் என்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று ஈழத் தமிழரின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணம் சென்றார் அண்ணாமலை. யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாசாரம் மத்திய நிலையத்தை அண்ணாமலை பார்வையிட்டார். இந்த மத்திய நிலையத்தின் வசதிகள், திறன்கள் குறித்து அண்ணாமலைக்கு இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் விவரித்தார்.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் தனியார் ஹோட்டல் ஒன்றில் ஈழத் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். இதில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்தன், சுமந்திரன், சிறீதரன், சிவஞானம், சத்தியலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்பும் ஆலோசனையும் சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணாமலை, இது சம்பிரதாயப்பூர்வமான சந்திப்பு என்று மட்டும் கூறினார்.

மேலும் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரே சைவ மடமாகிய நல்லூர் ஆதீனத்துக்கும் அண்ணாமலை சென்றார். மதுரை ஆதீனத்துடன் மிக நெருக்கமான தொடர்பு கொண்டது நல்லூர் ஆதீனம். அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும் சென்று அண்ணாமலை வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணத்தில் இன்று காலை தமிழர்களுடைய தொன்மையும் பழமையும் பிரதிபலிக்கக்கூடிய நல்லூர் கந்தசுவாமி கோயிலில் அப்பன் முருகன் அவருடைய அருளை தமிழ் மக்களுடைய நல் வாழ்க்கைக்காக வேண்டினேன் என பதிவிட்டுள்ளார்.
சஞ்சீவி மலையை அனுமன் சுமந்த மாதிரி இலங்கை பொருளாதார நெருக்கடியை சுமக்க பிரதமர் மோடி தயார்: அண்ணாமலை