For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சசிகலா குடும்பத்தினரால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையா எடப்பாடி பழனிசாமி? அன்புமணி ராமதாஸ்

சசிகலா குடும்பத்தினரால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பார் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சசிகலா குடும்பத்தினரால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையாகவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக செய்த செலவுகளை சரி கட்டுவதற்காக தமிழகத்தில் இதுவரை நடந்ததை விட இன்னும் பல மடங்கு அதிக ஊழல் நடைபெறும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழக சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடைபெற்ற வன்முறையும், ஜனநாயகப் படுகொலையும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இந்நிகழ்வுகள் அவமானகரமானவையும், வெட்கக்கேடானவையும் அசிங்கமானவையும் ஆகும். இதற்காக 2 கட்சிகளும் வெட்கப்பட வேண்டும்.

Anbumani Ramadoss Condemned DMK and Admk parties

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது சட்டப்படியாக வேண்டுமானால் செல்லுபடியாகும். ஆனால், அதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள். அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் ஏராளமான ஊழல் குற்றச்சாற்றுகள் உள்ளன.

மணல் கொள்ளை மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சேகர் ரெட்டிக்கு எடப்பாடி பழனிச்சாமி பல வழிகளில் துணையாக இருந்திருக்கிறார். இதற்காக சேகர்ரெட்டி நிறுவனத்தில் பழனிச்சாமியின் உறவினர் பங்குதாரராக சேர்க்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பின்னணி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள ஜனநாயகப் படுகொலைகளை நடத்தினார்.

ஏராளமான ஊழல் குற்றச்சாற்றுகளுக்கு ஆளாகியுள்ள எடப்பாடி பழனிசாமியால் மக்கள் நலன் காக்கும் நிர்வாகத்தை அளிக்க முடியாது. சசிகலா குடும்பத்தினரால் ஆட்டி வைக்கப்படும் பொம்மையாகவே அவர் இருப்பார். ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக செய்த செலவுகளை சரி கட்டுவதற்காக தமிழகத்தில் இதுவரை நடந்ததை விட இன்னும் பல மடங்கு அதிக ஊழல் நடைபெறும். மொத்தத்தில் தமிழகம் ஊழல் பாதையில் வேகமாக நடைபோடப்போகிறது என்பது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, நம்பிக்கை வாக்கு கோரும் விஷயத்தில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளும் கண்டனத்திற்கு உரியவையே. ஆளுங்கட்சி உறுப்பினர்களை கடத்திச் சென்று சிறைவைக்கப்பட்ட நிலையில், குதிரை பேரம் நடப்பதை தடுக்க தமிழக ஆளுனர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதேபோல், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் சட்டப்பேரவையில் இத்தகைய அநாகரீகமான நிகழ்வுகள் அரங்கேறியிருக்காது.

சட்டப்பேரவை கூடியதிலிருந்தே திமுக நடந்து கொண்ட விதத்தைப் பார்க்கும் போது, வன்முறைகள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டவை என்பதை உணர முடிகிறது. சட்டப்பேரவையில் திமுக அதன் கோரிக்கைகளை வலியுறுத்துவதற்கு எந்த தடையும் இல்லை. அதிமுகவை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறிவித்திருந்த திமுக, அதை செயல்படுத்த ரகசிய வாக்கெடுப்பைக் கோரியிருக்கத் தேவையில்லை.

திமுக அதன் முடிவை ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில் அதை வெளிப்படையான வாக்கின் மூலம் தெரிவிக்க முடியும். அவ்வாறு இருக்கும் போது தேவையில்லாமல் சட்டப்பேரவையில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டதை ஏற்க முடியாது. பேரவையில் அவைத்தலைவர் தாக்கப்படுவது, அவரது சட்டை கிழிக்கப்படுவது, தலைவரின் இருக்கை, மேசை ஆகியவை சேதப்படுத்துவது போன்றவை இதுவரை தமிழகம் காணாத காட்சிகளாகும்.

அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை அவையில் இருந்து வெளியேற்றும் போது அவர் தாக்கப்பட்டதாகவும், சட்டை கிழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் நிகழ்வுகளுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களீன் செயல் கண்டிக்கத்தக்கது.

சட்டப்பேரவையைத் தொடர்ந்து தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன், திமுகவைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழகத்தில் சட்டம்& ஒழுங்கு பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கனவே வேலைவாய்ப்பின்மை, விவசாயிகள் தற்கொலை பொருளாதார வீழ்ச்சி, தாங்க முடியாத கடன்சுமை ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இத்தகைய ஜனநாயகப் படுகொலைகள் அரங்கேற்றப்படுவது தமிழக மக்களின் துயரத்தை மேலும் அதிகரிக்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

English summary
PMK youth wing leader Anbumani Ramadoss Condemned DMK and Admk both parties over the issue of assembly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X