For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாலாற்று தடுப்பணையில் குதித்து விவசாயி தற்கொலை: இனியாவது விழிக்குமா அரசு? - அன்புமணி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: பாலாற்றின் குறுக்கே தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூர் என்ற இடத்தில் உயரம் அதிகரிக்கப்பட்ட தடுப்பணையில் குதித்து சீனு என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனு என்ற விவசாயி இன்று மாலை புல்லூர் தடுப்பணைக்கு சென்றார். 16 அடி உயரத்திற்கு அணையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், தண்ணீரை வணங்கியபடியே தடுப்பணைக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இந்நிகழ்வு அப்பகுதியில் உள்ள மக்கள் மத்தியிலும், விவசாயிகள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anbumani Ramadoss statement about farmer suicide

புல்லூர் தடுப்பணையின் உயரம் 5 அடியிலிருந்து 16 அடியாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து 4 நாட்கள் மட்டுமே முடிந்த நிலையில் ஆந்திரத்தில் பெய்த மழையால் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து தடுப்பணை நிரம்பி வழிகிறது. தடுப்பணையின் உயரம் மட்டும் அதிகரிக்கப் படாமல் இருந்திருந்தால் வேலூர் மாவட்ட எல்லை வரை பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்திருக்கும். அதைக்கொண்டு வேலூர் மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்திருக்க முடியும்.

குறிப்பாக புல்லூர் அணைக்கு மிக அருகில் உள்ள விவசாயி சீனுவுக்கு சொந்தமான நிலங்களுக்கு தாராளமாக தண்ணீர் கிடைத்திருக்கும். ஆனால், தடுப்பணை உயரம் அதிகரிக்கப்பட்டதால் தண்ணீர் வராமல் விவசாயம் பாதிக்கப்பட்டதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் விவசாயி சீனு தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். பாலாற்றில் தண்ணீரை தடுக்க சட்டவிரோதமாக தடுப்பணை கட்டிய ஆந்திர அரசும், அதை தடுக்கத் தவறிய தமிழக அரசும் தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

புல்லூரில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையின் உயரத்தை 5 அடியிலிருந்து 16 அடியாக உயர்த்துவதற்கான பணிகளை ஆந்திர அரசு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி வாக்கில் தொடங்கியது. இதுகுறித்த செய்திகள் கிடைத்த உடனேயே அந்தப் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா வலியுறுத்தினார்கள்.

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மற்ற தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்கவும், பாலாற்றின் துணை ஆறுகளில் புதிய தடுப்பணைகளை கட்டவும் ஆந்திர அரசு முயல்வதைத் தடுக்க வேண்டும் என்று நானும் வலியுறுத்தினேன். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உறங்கிக் கொண்டிருந்ததன் விளைவு தான் ஒரு அப்பாவி விவசாயி அநியாயமாக உயிரை விட நேர்ந்திருக்கிறது.

தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படுவதையும், துணை ஆறுகளின் குறுக்கே புதிய தடுப்பணைகள் கட்டப்படுவதை தடுக்கவும், உயரம் அதிகரிக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை பழைய அளவுக்கு குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்கொலை செய்து கொண்ட விவசாயி சீனுவின் குடும்பத்திற்கு ரூ.25 நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
PMK's youth wing leader Anbumani Ramadoss issued statement about committed farmer suicide against the Andhra's check dam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X