For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைச்சர் எஸ்.பி. சண்முநாதனின் பிஏ கைதுக்கு காரணம் என்ன? பின்னணி தகவல்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிமுக வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையிலேயே மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் இந்த கைதுக்கான உண்மையான காரணமே வேறு என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கின்றனர்.

சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியை வீழ்த்த எதிர்கட்சிகள் பல அணிகளாக பிரிந்து வியூகம் வகுத்துக் கொண்டிருக்க, ஆளும் அதிமுவிலோ அமைச்சர்களையும், ஆட்டம் போடும் நிர்வாகிகளை களையெடுப்பதிலுமே காலம் கடந்து வருகிறது. சீட் பெற்றுக்கொடுப்பதாக கூறி ஆள் ஆளுக்கு லட்சக்கணக்கில் வசூல் வேட்டையில் ஈடுபட, அவர்களின் பதவிகளை பறித்து வருகிறார் ஜெயலலிதா.

Back ground story of TN Tourism Minister's PA arrest

கடந்த இரு மாதங்களாகவே ஐவரணியில் இருந்த அமைச்சர்களின் ஆதரவாளர்களின் பதவிகள் பறிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் அரசியல் நேர்முக உதவியாளராக இருந்த கிருஷ்ணமூர்த்தியை தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் திடீரென கைது செய்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள புதூர் பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் கிருபானந்த முருகன். இவரது மனைவி தாஜி நிஷாவுக்கு, பள்ளி ஆய்வக உதவியாளர் பணி வாங்கி தருவதாக மூர்த்தி ரூ.3 லட்சம் பணம் வாங்கியுள்ளார். ஆனால், வேலை வாங்கி கொடுக்கவில்லையாம். கடந்த 7ம் தேதி மூர்த்தியை சந்தித்து அவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டபோது ஜாதி பெயரை சொல்லி திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக கிருபானந்த முருகன் தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸில் புகார் அளிக்கவே, அதன் அடிப்படையில் மூர்த்தியை போலீஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரியவருகிறது.

கிருஷ்ணமூர்த்தி சொல்வதென்ன

கைதுக்கு பின்னர் கிருஷ்ணமூர்த்தி அளித்த வாக்குமூலத்தில், நான் முன்னாள் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தனி உதவியாளராக இருந்தேன். அவர் அ.தி.மு.கவில் இருந்து விலகிய பிறகு தற்போது சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள எஸ்.பி.சண்முகநாதனிடம் தனி உதவியாளராக இருந்து வருகிறேன்.

வேலைக்குப் பணம்

கடந்த 6 மாதத்துக்கு முன்பு புதூர்பாண்டியாபுரம் பஞ்சாயத்து அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் உள்ள கிருபானந்தமுருகன் என்பவர் என்னிடம் வந்து, அவரது மனைவி தாஜ்நிஷா என்பவர் பிளஸ்2 படித்து இருப்பதாகவும், அவர் பள்ளிக்கூட ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் கூறினார். இதனால் அவரிடம் ரூ.3 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கி தருவதாக உறுதி கொடுத்தேன்.

மிரட்டியதாக புகார்

மேலும், தேர்தல் நெருங்கி விட்டதால் அவரது மனைவியின் வேலை தொடர்பாக நான் சென்னையில் யாரையும் சந்திக்க முடியவில்லை. அதே நேரத்தில் அந்த வேலை பணி நியமனம் செய்வது உயர்நீதிமன்றம் தீர்ப்பின் காரணமாக நிலுவையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விவரத்தை நான் அவரிடம் சொல்லாமலும், அவரிடம் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்து வந்தேன், அமைச்சருடன் சென்னை செல்லும் போது, ரயில் நிலையம் அருகே வைத்து என்னிடம் பணத்தை கேட்ட கிருபானந்த முருகனை மிரட்டினேன். இவ்வாறு அமைச்சரின் உதவியாளர் வாக்குமூலம் தந்ததாக போலீஸ் கூறுகிறது.

ஜெயிலில் அடைப்பு

கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தியை விசாரணைக்குப் பின்னர் , தூத்துக்குடி 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பொறுப்பு நீதிபதி கலையரசி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் கிருஷ்ணமூர்த்தி பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

பின்னணித் தகவல்

கைது செய்யப்பட்ட கிருஷ்ணமூர்த்தி அதிமுக ஆட்சியில் பல முக்கிய அமைச்சர்களின் உதவியாளராக இருந்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நயினார் நாகேந்திரன் தொழில் துறை அமைச்சராக இருந்த போதும், தளவாய்சுந்தரம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போதும், கருப்பசாமி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்த போதும் உதவியாளராக இருந்து உள்ளார்.

அமைச்சர்களுக்கு நெருக்கம்

அனிதா ராதாகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த அவர், அனிதா திமுகவுக்கு மாறிய உடன், தற்போதைய ஆட்சியில் கைத்தறி துறை அமைச்சராக இருந்த செந்துார் பாண்டியன், அதன் பின் சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதனிடம் உதவியாளராக பணியாற்றினார்.

ஐவரணியிடம் நெருக்கம்

தென் மாவட்டங்களில் ஐவர் அணியில் உள்ள இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருந்தார். அமைச்சர்களின் சார்பில் தென் மாவட்டங்களில் அமைச்சர்களின் நிழல் போல் இருந்துள்ளார். அதிமுகவில் ஐவர் அணியில் இருந்த அமைச்சர்கள் ஓரம் கட்டப்பட்ட பின்னர் அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவரும் உளவுத்துறையினர் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

ஆடியோவில் குரல்

இந்நிலையில் அதிமுகவில் சீட்டுக்காக அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜாவுக்காக பேரம் பேசிய ஆடியோவில், கிருஷ்ணமூர்த்தியின் குரலும் இருந்தது. இது குறித்து ராஜா, கிருஷ்ணமூர்த்தியிடம் உளவுத்துறை போலீசார் விசாரணை நடந்தினர். இதன் பின்னரே கிருபானந்தமுருகனிடம் புகார் பெறப்பட்டு, அமைச்சரின் உதவியாளர் கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சொத்துக்குவித்த அமைச்சர்

அமைச்சர் சண்முகநாதன் தனது பதவியை பயன்படுத்தி அளவுக்கு அதிக சொத்துக்களை குவித்து உள்ளதாக கட்சியின் தலைமைக்கு பல புகார்கள் அனுப்பப்பட்டன. நிழல் அமைச்சராக இருந்து செய்பவர் அவரது உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி. கிருஷ்ணமூர்த்தியை சிக்க வைத்தால், அமைச்சர் சண்முகநாதன், அவரது மகன் ராஜா ஆகியோர் எளிதில் சிக்கிவிடுவார்கள் என்பதாலேயே, கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிமுகவினர் பேசிக்கொள்கின்றனர்.

சீட்டுக்காக பணம்

இது ஒரு புறம் இருக்க ஐவரணியில் இருந்த மூத்த அமைச்சர் ஒருவர் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சீட் கொடுப்பதாக கூறி பல கோடி ரூபாயை வசூல் வேட்டையாடியிருக்கிறாராம். கடந்த நான்கரை ஆண்டுகாலத்தில் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் சொத்துக்களாக வாங்கி குவித்துள்ளதாகவும் தலைமைக்கு புகார்களாக தட்டி விடப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அனைத்தும் கிருஷ்ணமூர்த்திக்குத் தெரியும் என்கிறார்கள். இதனால் தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பேசிக் கொள்கின்றனர்.

பணம் கொடுத்தவர்கள் கதி?

தேர்தலில் சீட் வாங்கித் தருவதாக பணம் வசூலித்த சீனியர்களுக்கே இந்தமுறை தேர்தலில் சீட் கிடைப்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு கட்சித்தலைமை சீனியர்கள் மீது கடும் கோபத்தில் இருப்பதால் சீனியர் அமைச்சர்கள் பலரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனராம். அதே நேரத்தில் நம்பி பணம் கொடுத்தவர்களின் நிலையோ திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக உள்ளது.

English summary
Tourism Minister S P Shanmuganathan's personal assistant was arrested here today for allegedly taking Rs 3 lakh bribe from a man on the promise of providing a job to his wife as a school lab assistant, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X