For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.. எடப்பாடியார்!

காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைத்து அரசிதழில் வெளியிட்டது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, அதை மத்திய அரசின் அரசிதழில் வெளியிட்டுள்ளது. இது மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசிற்கும், தமிழ்நாட்டு விவசாய பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை

தமிழ்நாட்டின் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் காவிரி நதி நீரை பகிர்ந்து கொள்வது பல ஆண்டுகளாகவும், குறிப்பாக 1970-ம் ஆண்டிலிருந்தும் தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையேயுள்ள நீண்ட நாள் பிரச்சினை ஆகும். ஜெயலலிதா மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும், சட்டப் போராட்டத்தினாலும் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மத்திய அரசிதழில் 19.2.2013 அன்று வெளியிடப்பட்டு செயலாக்கத்திற்கு வந்தது.

மக்களுக்கு புரிந்தது

மக்களுக்கு புரிந்தது

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையை மத்திய அரசிதழில் கொண்டு வந்ததுதான் தன்னுடைய 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில், தான் செய்த சாதனைகளில் முதன்மையானதாக கருதுவதாகவும், தான் பல ஆண்டுகள் பொது வாழ்வில் இருந்து கஷ்டப்பட்டதற்கு இந்த வெற்றிதான் தனக்கு முழு நிறைவைத் தந்திருக்கிறது என்றும் ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மனம் நெகிழ்ந்து பேசினார் என்பதைக் கொண்டு காவிரி நதிநீர் பிரச்சினையில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த அக்கறையும், ஈடுபாடும் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக புரிந்தது.

80 மணி நேரம் உண்ணாவிரதம்

80 மணி நேரம் உண்ணாவிரதம்

விவசாயிகளின் உரிமையை நிலைநாட்ட மெரினா கடற்கரையில் தொடர்ந்து 80 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து போராடிய ஜெயலலிதாவின் தியாகம் இத்தருணத்தில் நினைவு கூறத்தக்கதாகும். உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு 16.2.2018 அன்று இறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில், காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இறுதி ஆணை மற்றும் அதனை மாற்றியமைத்த உச்சநீதிமன்றத்தின் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஒரு செயலாக்க திட்டத்தை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டுமெனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

விரிவாக விவாதித்தேன்

விரிவாக விவாதித்தேன்

இதனைத் தொடர்ந்து நான் பிரதமரிடம் நேரிலும் மற்றும் கடிதங்கள் வாயிலாகவும் இவ்வமைப்புகளை உடனே அமைக்க வலியுறுத்தினேன். பாராளுமன்ற கூட்டத்தொடர் 5.3.2018 அன்று தொடங்கி 6.4.2018 வரை நடைபெற்றது. இக்கூட்டத்தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அ.தி.மு.க. எம்.பி.க்கள் செயலாக்க திட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்கக் கோரி தொடர்ந்து வலியுறுத்தியதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் 22 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவடையும் நிலை இருந்தபோது, 29.3.2018 அன்று மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல்நடவடிக்கை குறித்து நான் விரிவாக விவாதித்தேன்.

கடுமையான வாதம்

கடுமையான வாதம்

அக்கூட்டத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு, 31.3.2018 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் கால அவகாசம் கேட்டு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம் 14.5.2018 அன்று, மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர் ஒரு வரைவுத் திட்டத்துடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்படி, 14.5.2018 அன்று, மத்திய அரசின் நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சக செயலாளர், உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, மத்திய அரசு தயாரித்துள்ள வரைவு திட்டத்தினை தாக்கல் செய்தார். எனது அறிவுரையின் பேரில், 16.5.2018 அன்று தமிழ்நாடு அரசு சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர்கள் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையில், குறிப்பிட்டபடி அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு உடனடியாக அமைத்து செயல்படுத்த வேண்டும் என தகுந்த ஆதாரங்களுடன் கடுமையாக வாதிட்டனர்.

தமிழக கோரிக்கை ஏற்பு

தமிழக கோரிக்கை ஏற்பு

இதனை அடுத்து, 18.5.2018 அன்று மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டத்தின் மீது உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த திருத்திய வரைவு திட்டம், நடுவர் மன்ற இறுதி ஆணை / கட்டளைகள்படியும், அதனை திருத்தியமைத்து வழங்கிய உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும் உள்ளது எனவும், 1956-ம் ஆண்டைய பன்மாநில நதிநீர்த் தாவா சட்டப்பிரிவு 6 ஏ 4 ஒத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று, காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடம் டெல்லியிலும், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களுரூவிலும் செயல்படும் எனவும் இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசிதழில் வெளியீடு

மத்திய அரசிதழில் வெளியீடு

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழு ஆகிய அமைப்புகளை அமைத்து, மத்திய அரசிதழில் வெளியிட்டு பருவ மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் செயலாக்கத்திற்கு கொண்டுவர வேண்டி, பிரதமருக்கும், மத்திய நீர்வளத்துறை மந்திரிக்கும் 26.5.2018 அன்று என்னால் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு ஜெயலலிதாவின் வழியில் செயல்பட்டு வரும் அவருடைய அரசு பல தொடர் நடவடிக்கைகள் எடுத்ததன் வாயிலாக இன்று (நேற்று) காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் மத்திய அரசால் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுக்கு வெற்றி

தமிழக அரசுக்கு வெற்றி

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.2.2013 அன்று மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, அதனை சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளாலும் மற்றும் சட்ட போராட்டங்களாலும், உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை சற்று மாற்றியமைத்து 16.2.2018 அன்று பிறப்பித்த தீர்ப்பினை செயல்படுத்துவதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைத்து அதனை மத்திய அரசிதழில் 1.6.2018 அன்று வெளியிட்டது, ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழ்நாடு அரசிற்கும், விவசாயப் பெருங்குடி மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

வாழ்வாதாரம் மீட்பு

வாழ்வாதாரம் மீட்பு

இந்த உத்தரவுகளினால், தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

English summary
Chief Minister Edappadi Palanisamy has expressed his happiness for Cauvery Management Commission notice published in the Central Gazette. He said Rights of Tamilnadu have been recovered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X