For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன்.. புலம்பும் 'இன்டர்நெட் பிச்சைக்காரர்'

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஊடகங்கள் தமக்கு பணம் தராததால் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக இன்டர்நெட் பிச்சைக்காரர் என விமர்சிக்கப்படும் எழுத்தாளர் சாருநிவேதிதா தமது இணையப் பக்கத்தில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாருநிவேதிதான் நீண்ட கட்டுரை:

இந்தக் கட்டுரையில் உள்ள விஷயங்களை நான் பத்திரிகைகளில் எழுத முடியாது. எனவே இங்கே எழுதுகிறேன்.

நீங்கள் ஒரு விஷயத்தை கவனித்து இருக்கலாம். இந்த இணைய தளத்தில் சமீப காலமாக என்னுடைய அக்கவுண்ட் நம்பரை நான் கொடுப்பதில்லை. யாரிடமும் பணமும் கேட்பதில்லை. காரணங்கள் இரண்டு. ஒன்று, அனாவசியமாக இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற அவப்பெயர் ஏற்படுகிறது; இரண்டாவது, யாரும் பணமும் அனுப்புவதில்லை. இந்த இரண்டாவது காரணம்தான் பிரதானமான காரணம். யாராவது ஒருவர் ஐநூறு ரூபாயோ நூறு ரூபாயோ அனுப்புவார். எனக்கு அந்தப் பணத்தால் எந்தப் பயனும் இல்லை.

Charunivedita writes on Suicide attempt

சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோஸ் அருண் ராமன் ராகவை ஒரு திரையரங்கில் திரையிட்டார். கான் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட வடிவத்தில். அனுராக் காஷ்யப்போடு ஒரு கலந்துரையாடலும் இருந்தது. இதற்கு ஒரு ஆளுக்கு 500 ரூ வசூலிக்கலாம். ஏனென்றால், அனுராகை வரவழைக்கவே எக்கச்சக்க செலவு. விமானம், விடுதி என்று. விழாவுக்கும் சேர்த்து சுமார் ரெண்டு லட்சம் செலவு. ஆனால் ராமன் ராகவ் திரையிடலை அவர் இலவசமாக நடத்தினார். வெளியே உண்டியல் இருக்கிறது; பார்வையாளர்கள் தாராளமாக நிதி உதவி செய்யலாம் என்று அறிவித்தார். உண்டியலைத் தூக்க முடியவில்லை. நிறைய ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய் நாணயங்கள். ஏதோ தொள்ளாயிரத்து சொச்சம் கிடைத்தது. காந்தியவாதத்துக்குக் கிடைத்த அடி அது. திரையரங்கின் மேலாளர் ஒருத்தருக்கு நூறு ரூபாயாவது வசூலிப்போம் என்றார். மறுத்து விட்டது மகாத்மா.

இதே காரியத்தைத்தான் நானும் செய்து கொண்டிருந்தேன். ஆனால் குடியை விட்டதிலிருந்தே புலன்கள் கூர்மையாகி விட்டன. புத்தியும் குயுக்தியாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. Innocence ஓடி விட்டது. இனிமேல் யாரிடமும் காசு கேட்க மாட்டேன். பதிலாக ஓசியில் எழுதுவதை நிறுத்தி விட்டேன்.

ஆனால் காசு கேட்டதை எல்லோரும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதுதான் மிகவும் அவலமானது; அருவருப்பானது. யார் எனக்கு தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டுமோ அவர்களே என்னைக் கேவலப்படுத்தினார்கள். ஞாநி என்னை இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று குமுதத்தில் எழுதினார். எழுத்தாளன் பிச்சை எடுக்க வேண்டியிருக்கிறதே என்ற அவலத்தை அவர் புரிந்து கொள்ளவில்லை. பின்னால் அவரே 'என் லௌகீக வாழ்க்கைக்கு மாதம் 40000 ரூபாய் தேவைப்படுகிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை' என்று எழுதினார். இதில் மருத்துவச் செலவும் அடக்கம். ஒரு அன்பர் இதற்கு "போய் மாடு மேயுங்கள்" என்று பதில் எழுதினார். அந்த அன்பருக்கு அதற்கான தண்டனையை ஆண்டவன் கொடுப்பான். இந்நேரம் கொடுத்தும் இருக்கலாம்.

நான் பிச்சை எடுப்பது பற்றி இன்னொருவரும் அவமானப்படுத்தி எழுதினார். ஆனந்த விகடனில் பிரபஞ்சன். பிரபஞ்சனும் ஞாநியைப் போலவே என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு என் கல்லூரிப் பருவத்தில் அவர் கணையாழியில் எழுதியிருந்த பிரம்மம் என்ற கதை என் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் எழுதிய அத்தனை பேருமே என் ஆசான்கள்தான். ஆனால் பிரபஞ்சன் விகடன் கேள்வி பதிலில் "நான் மற்ற எழுத்தாளர்களைப் போல் என் வாசகனிடம் காசு கேட்க மாட்டேன்" என்று எகத்தாளமாக எழுதினார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்த போது ஐந்து லட்சம் கொடுத்து உதவியது ஒரு சினிமா இயக்குனர். இதையும் பிரபஞ்சனேதான் எழுதியிருந்தார். இயக்குனரின் பெயரை அவர் எழுதவில்லை என்றாலும் என்னால் யூகிக்க முடிந்தது. பிரபஞ்சனுக்கு அந்த இயக்குனர் இருந்தார். எனக்கு இல்லை. அதனால் நான் வாசகனிடம் பைசா வாங்கினேன். இதில் என்ன அவமானம் இருக்கிறது? பிரபஞ்சன் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருபவர். இந்நேரம் அவரிடம் ஒரு பெரிய வீடும் காரும் வங்கியில் சில கோடிகளும் இருந்திருக்க வேண்டும்.

Charunivedita writes on Suicide attempt

அவர் படித்த புலவர் படிப்பில் வாத்தியார் வேலையில் சேர்ந்திருந்தால் கூட இந்த விஷயங்களெல்லாம் அவரிடம் சேர்ந்திருக்கும். ஆனால் அவரிடம் ஒரு பைசா கிடையாது. இவ்வளவுக்கும் மது, மாது, சூது போன்ற வில்லங்கம் எதுவும் இல்லாதவர். இருந்தாலும் அவருக்கு உடம்புக்கு வந்தால் யாரோ தான் ஓடி வர வேண்டியிருக்கிறது. அவரிடமும் என்னைப் போலவே பரம்பைசா கிடையாது. அப்படியிருக்கும் போது ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனைப் பார்த்து நீ பிச்சைக்காரன் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

சரி, சங்கீத மேதை தியாகய்யர் என்ன குமாஸ்தா வேலை செய்தா பிழைத்தார்? பிச்சைதானே எடுத்தார்? அவர் கொடுத்தது சங்கீதம். எடுத்தது பிச்சை. உண்மையில் அதற்குப் பெயர் பிச்சை இல்லை. நாம் கொடுக்கும் தட்சிணை. குருவுக்கு செய்யும் காணிக்கை. ரமணர் என்ன செய்தார்? ஷீர்டி பாபா என்ன செய்தார்? இந்த நாட்டில் உள்ள ஆயிரக் கணக்கான சந்நியாசிகள் என்ன செய்கிறார்கள்? சரி, சங்ககாலப் புலவன் என்ன செய்தான்? ராஜ சபையில் கணக்கு எழுதினானா? ராஜாக்களைப் புகழ்ந்து பாடி பரிசில் பெற்றான். பிச்சைதானே அது? சடையப்ப வள்ளல் இல்லாதிருந்தால் கம்பனால் அந்தப் பெருங்காப்பியத்தை இயற்றியிருக்க முடியுமா? எழுத்தாளனின் நிலையை எழுத்தாளனே புரிந்து கொள்ளவில்லையானால் வேறு எவன் புரிந்து கொள்ளப் போகிறான்?

இப்போது விஷயத்துக்கு வருகிறேன். விகடன் குழுமத்திலிருந்து வரும் தடம் இலக்கிய இதழில் இதுவரை இரண்டு கட்டுரைகள் எழுதினேன். ஒன்று, மனுஷ்ய புத்திரன் பற்றி. இரண்டாவது, ஒழிவு திவசத்த களி படம் பற்றி. இரண்டுமே நானாக எழுதியது அல்ல. இரண்டுமே தடம் நண்பர்கள் கேட்டு நான் எழுதியது. நானாக எழுதி அனுப்ப எனக்கு நேரம் இல்லை. முதல் கட்டுரை வெளிவந்து இரண்டு மாதம் ஆகிறது. இரண்டாவது வந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிறது. ஒரு பைசா கூட கொடுக்கவில்லை. கொடுக்கவும் மாட்டார்கள் என்று நினைக்கிறேன். காரணம், தடம் இலக்கியப் பத்திரிகை. இலக்கியம் என்றால் ஓசி என்று ஆகி விட்டது. ஆனால் தடம் பத்திரிகை ஓசி இல்லை. ஐம்பது ரூபாய் விலை.

பொதுவாகவே இலக்கியப் பத்திரிகைகளில் காசு கொடுப்பதில்லை. காரணம், இலக்கியப் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்க யாரும் இல்லை. ஆனால் ஆங்கிலத்தில் வரும் இலக்கியப் பத்திரிகைகளின் நிலையும் அப்படித்தான். அதிக பட்சம் 1000 பிரதி தான் அச்சாகும். நான் எழுதும் ArtReview Asia பத்திரிகையும் 1000 பிரதிதான் போகும் என்று நினைக்கிறேன். குறிப்பிட்ட பிரதிகளே அச்சாகின்றன. என் லண்டன் நண்பர்கள் விசாரித்த போது பிரதிகள் தீர்ந்து விட்டன. அதில் எழுத எனக்கு ஒரு வார்த்தைக்கு 60 ரூபாய் தருகிறார்கள். காரணம், அந்தப் பத்திரிகையின் விலையே 500 ரூபாய் இருக்கும். இங்கே தமிழில் ஒரு வார்த்தைக்கு 60 பைசா தருகிறார்கள். அந்த 60 பைசா கூட தடம் போன்ற இலக்கியப் பத்திரிகைகளிலிருந்து கிடைக்கவில்லை என்பதால்தான் இதை வரிந்து வரிந்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு வார்த்தைக்கு 60 ரூபாய் எங்கே இருக்கிறது, 60 பைசா எங்கே இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு இலக்கியப் பத்திரிகையில் மாதாமாதம் பத்து ஆண்டுகள் எழுதினேன். ஒரு கட்டுரைக்கு மிகக் குறைந்த பட்சமாக 2000 என்று வைத்துக் கொண்டாலும் ரெண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாய். ஆனால் அது நஷ்டத்தில் நடத்தப்படும் இலக்கியப் பத்திரிகை. அதிலும் விகடன் போன்ற பெரிய பத்திரிகை அல்ல. சிறு பத்திரிகை. எழுத்து என்ற பத்திரிகையை சி.சு. செல்லப்பா எப்படி நடத்தினார் என்று பழுப்பு நிறப் பக்கங்கள் தொடரில் எழுதினேன். மற்றபடியும் உங்களுக்குத் தெரியும். அப்படித்தான் தமிழில் எல்லா சிறு பத்திரிகைகளும் நடத்தப்பட்டன. எல்லோரும் தன் சொத்தை விற்று, நகை நட்டுகளை விற்றுத்தான் நடத்தினார்கள். அதில் ஓசியில் எழுதலாம். விகடன் குழுமத்திலிருந்து வரும் பத்திரிகையிலும் ஓசியில் எழுத வேண்டுமா?

இதற்கிடையில் எனக்கு இண்டர்நெட் பிச்சைக்காரன் என்ற பட்டம் வேறு. அவர் என் மதிப்புக்குரிய நண்பர். பேசிக் கொண்டே வந்தார். கடைசியில் குரலைத் தாழ்த்திக் கொண்டு, "எல்லாம் சரி. மற்றவர்கள் உங்கள் மீது வைக்கும் பெரிய குற்றச்சாட்டு, நீங்கள் வாசகர்களிடமிருந்து காசு வாங்குகிறீர்கள் என்பதுதான்" என்றார். அவர் சொன்ன தொனி எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? ஒரு கணவன் தன் அன்பான மனைவியிடம், "எல்லாம் சரி, நீ அவ்வப்போது பிராத்தலுக்குப் போவதுதான் எனக்கு என்னவோ போல் இருக்கிறது" என்று சொல்வது போல் இருந்தது.

மீண்டும் மீண்டும் எனக்கு இத்தகைய பேச்சு ஆச்சரியமாகவே இருக்கிறது. நான் என்ன பித்தலாட்டமா செய்கிறேன்? ஒரு நிறுவனத்தில், தமிழ் சினிமா பற்றிப் பாராட்டியே பேசுங்கள், மாதம் 20000 தருகிறோம் என்றார்கள். இருபது லட்சம் கொடுத்தாலும் முடியாது என்று மறுத்து விட்டேன். தடம் பத்திரிகை நண்பர் ஒருவருக்கு ஃபோன் போட்டு என்ன, காசு வருமா என்று கேட்டேன். மேலிடத்தில் சொல்கிறேன் என்றார். நான் தடம் பத்திரிகை நண்பர்களையோ, விகடன் பத்திரிகை ஆசிரியர் குழுவினரைப் பற்றியோ இங்கே எழுதவில்லை. எழுத்தாளர்களுக்குக் கொடுக்கப்படும் சன்மானத்தைத் தீர்மானிப்பது பத்திரிகையின் முதலாளிதான்; ஆசிரியர் அல்ல என்பது கூடத் தெரியாத அசடு அல்ல நான். விகடன் ஆசிரியர் குழுவினர் என் குடும்ப உறுப்பினர்களைப் போல. அதிலும் தமிழ்மகன் தன்னுடைய புத்தகத்தில் என் ஆசானுக்கு என்று எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்த புத்தகத்தை என் மேஜையிலேயே வைத்திருக்கிறேன். அதைப் பார்க்கும் போதெல்லாம் மனம் நெகிழ்கிறது. எனவே யாரும் இதை அவர்களைச் சொல்வதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நான் பத்திரிகை அதிபர்களிடம் பேசுகிறேன். அவர்களுக்கான கடிதம் இது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு எழுதினால் என் கடிதம் படிக்கப்படாமலேயே போய் விடக் கூடும். மேலும், இது விகடனின் பிரச்சினை மட்டும் அல்ல. தமிழ் இலக்கிய சூழலின் பொதுவான அவலம் இது. மதுரை புத்தக விழா பற்றி எழுதாத ஆள் இல்லை. ஆ ஊ என்கிறார்கள். ஆனால் எழுத்தாளர்கள் இங்கே பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னை விடுங்கள். எழுத்துலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த சுஜாதாவுக்கே இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்த போது மணி ரத்னம்தான் 50000 ரூபாய் பணம் கொடுத்தார் என்று அப்போது பத்திரிகையில் படித்திருக்கிறேன். அது மட்டும் அல்ல; அவர் சாகும் வரை ஏதோ ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் வேலைதான் பார்த்துக் கொண்டிருந்தார். எப்போதுமே முழுநேர எழுத்தாளராக இருந்ததில்லை.

அசோகமித்திரனின் பேட்டிகளைப் பாருங்கள். இந்த உலகில் உள்ள கசப்பு, கைப்பு உணர்வின் மொத்த சாரத்தையும் அந்தப் பேட்டிகளில் நீங்கள் காணலாம்.

இன்னொரு உதாரணம் தருகிறேன். ஒரு பிரபல தொலைக்காட்சியில் காலையில் செய்திகளைப் பற்றி விவாதியுங்கள் என்று அழைத்தார்கள். ஏழு மணிக்கு நிகழ்ச்சி. நான் வீட்டிலிருந்து ஐந்தரைக்குக் கிளம்ப வேண்டும். அதற்கு நாலரைக்கு எழுந்து கொள்ள வேண்டும். ஸ்டுடியோவுக்குப் போய் அன்றைய செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும். பிறகு ஏழிலிருந்து ஏழரை வரை செய்தி அலசல். வீட்டுக்கு ஒன்பது மணிக்குத் திரும்பலாம். எவ்வளவு கொடுப்பீர்கள் என்றேன். எதிர்ப் பக்கத்தில் பேச்சு மூச்சே இல்லை. ஆள் மயக்கமடித்து விழுந்து விட்டாரோ என்று நினைத்து விட்டேன். ஆமாம், என்னைத் தவிர வேறு யாருமே இதற்கெல்லாம் பைசா கேட்பதில்லை.

வின் டிவியில் வாரம் ஒரு சினிமா என்று முப்பது உலக சினிமா பற்றி அரை மணி நேரம் பேசினேன். மூன்று நாள் தயாரிப்பு. குறுந்தகடுகளைத் தேட எனக்கு ஒரு நண்பர்கள் குழு. அதைப் பார்க்க வேண்டும். பிறகு அவுட்டோரில் ஷூட்டிங். அரை நாள். மொத்தமாக மூன்று நாள் போய் விடும். முப்பது படம் - முப்பது வாரம் பேசி விட்டு, அதற்கும் மேல் ஓசியில் செய்ய முடியாத போது பணம் கேட்டேன். வழக்கம் போல் எதிராளி மயக்கமடித்து விழுந்து விட்டார். நேரில் கேட்டதால் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சை தெளிவித்து மீண்டும் கேட்டேன். மேலிடத்தில் கேட்டு சொல்கிறேன் என்றார். உத்தேசமாக எவ்வளவு வேண்டும் என்றார். பத்தாயிரம் என்றேன். கேட்டு சொல்கிறேன். கேட்டார். ஐநூறு ரூபாய் தர முடியும் என்றார். அதோடு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டேன். இப்போது நான் பேசிய நிகழ்ச்சிகளின் குறுந்தகடை அவர்கள் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். 30 படங்களின் முப்பது குறுந்தகடுகளுக்கு முப்பதாயிரம் ரூபாய். ஆனால் எனக்கு ஒரு பைசா கிடைக்கவில்லை. ஆம், ஒரு பைசா கூட கொடுக்கவில்லை.

ராகவன் சொன்னார், உங்களை ஒத்த எழுத்தாளர்கள் கோடிகளில் புரள்கிறார்கள். நீங்கள் என்னவென்றால் ஆயிரம் ரூபாய்க்கு ஃபோன் செய்து அல்லாடிக் கொண்டிருக்கிறீர்கள். ஏன் நீங்கள் சினிமாவுக்கு எழுதக் கூடாது?

தினமுமே மாற்றி மாற்றி யாராவது ஒருவர் இப்படிக் கேட்கிறார்கள். நான் எழுதத் தயார். ஆனால் யாரும் என்னைக் கேட்பதில்லை. கேட்டாலும் ஊதியம் ஒரு லட்சம் என்கிறார்கள். மிகுந்த நேரம் எடுக்கும் ஒரு வேலை அது. அதற்குக் குறைந்த பட்ச ஊதியம் ஐந்து லட்சம் கிடைத்தால்தான் எழுத முடியும். அவ்வளவு கொடுக்க யாரும் தயார் இல்லை. மேலும், கபாலியைத் திட்டும் ஒருவனிடம் யாரும் வசனம் எழுதக் கேட்பார்களா?

வாசகனிடம் காசு கேட்கும் பிச்சைக்காரன் என்று என்னைப் பற்றிச் சொல்லும் அறிவுக் கொழுந்துகள் ஒரு நிமிடம் ஒரு விஷயத்தைப் பற்றி யோசிக்க மாட்டார்களா? அல்லது, மூளையில் அந்த இடம் அவர்களுக்கு வேலை செய்யவில்லையா? நான் ஏன் சினிமாவில் எழுதவில்லை? தமிழ்ப் படம் அத்தனையையும் கடுமையாக விமர்சிக்கிறேன். எனவே யாரும் அழைப்பதில்லை. ஆக, சமரசம் செய்யாமல் வாழும் எனக்குத் தார்மீக ஆதரவு தருவதை விட்டு விட்டுத் திட்டினால் என்ன அர்த்தம்? சமரசம் செய்யாமல் வாழ்ந்தால் பிச்சைதான் எடுக்க வேண்டும். அதில் அவமானப்பட என்ன இருக்கிறது? சமரசம் செய்பவர்கள் அல்லவா அது பற்றிக் கவலைப்பட வேண்டும்? சமரசம் செய்து வாழ்பவர்களிடம் அல்லவா நீங்கள் போய் கேள்வி கேட்க வேண்டும்? சமரசம் செய்வதுதானே அறம் பிறழ்ந்த செயல்? ஞானிகளும் துறவிகளும் செய்த செயலான பிச்சையை எப்படி நீங்கள் இழிவாகப் பார்க்கிறீர்கள்?

'ஒழிவு திவசத்த களி' படத்துக்கு நான் எழுதிய மதிப்புரை சினிமா பற்றிப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கு ஒரு நிறைவான பாடமாக இருக்கும். அதற்கு எனக்கு பத்தாயிரம் ரூபாய் சன்மானம் தரலாம். பிச்சைக் காசு ஆயிரம் கூட கிடைக்கவில்லை. ஐந்து நாட்கள் ஊண் உறக்கம் இல்லாமல் அந்தக் கட்டுரையை நான் எழுதினேன். இப்படிச் செய்தால் எழுத்தாளன் குடிக்காமல் என்ன செய்வான்? குடித்துக் குடித்துத்தான் சாவான். எனக்குக் கூட தற்கொலைதான் செய்து கொண்டு சாகலாம் என்று தோன்றுகிறது. ஒன்று, நான் எஸ்.எஸ். வாசன் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும்; அல்லது, இன்னும் 50 ஆண்டுகள் கழித்து வாழ்ந்திருக்க வேண்டும். இன்னும் 50 ஆண்டு சென்று தமிழ் எழுத்தாளனின் நிலை சீரடையும். விகடனுக்கு ஏதேனும் பிரமாதமான படைப்பு வந்தால் வாசன் அதை எழுதிய ஆசிரியர் வீட்டுக்கு நேரில் சென்று ஒரு பணப்பையைக் கொடுத்து விட்டு வருவார் என்று அந்நாளைய எழுத்தாளர்கள் பலர் எழுதியுள்ளதைப் படித்திருக்கிறேன். அவரது புதல்வர் பாலசுப்ரமணியனும் அப்படியே. ஜெயகாந்தனும் சுஜாதாவும் மணியனும் மதனும் ஞாநியும் உதாரணங்கள். இப்போது நான் ஃபோன் செய்து கேட்டாலும் பணம் இல்லை.

இனிமேல் அங்கிருந்து பணம் வந்தாலும் எனக்குப் பயன் இல்லை. ஏனென்றால், இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு யார் பதில் சொல்ல முடியும்?

புதிய பார்வை என்ற பத்திரிகைக்கு ஆறு மாதம் எழுதி விட்டு நான் பட்ட பாட்டை நாய் கூடப் பட்டிருக்காது. ஒரு கட்டுரைக்கும் பணம் வரவில்லை. தொடரே முடிந்து போன பிறகும் பணம் வரவில்லை. பிறகு நூறு நாட்கள் நூறு ஃபோன் செய்து மூன்று நான்கு மாதங்கள் முயற்சி செய்த பிறகே பணம் கிடைத்தது. இப்போது நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்வதில்லை என்று தீர்மானம் செய்திருக்கிறேன். ஏனென்றால், நான்கு ஐந்து மணி நேரம் போய் விடுகிறது. ஒரு நயாபைசா தருவதில்லை. உரிய நேரத்தில் சாப்பிடவும் முடியாமல் பட்டினி கிடக்க வேண்டியிருக்கிறது. உதாரணமாக, ஒன்பது மணி நிகழ்ச்சிக்கு ஏழு மணிக்கு வாகனம் வருகிறது. எட்டு மணிக்கு அங்கே போனால் ஒன்பது மணி வரை மோட்டுவளை நோக்கல். ஒன்பதிலிருந்து பத்து வரை நிகழ்ச்சி. பத்தரைக்கு வீட்டுக்கு வந்து பானைத் தண்ணியைக் குடித்து விட்டுத் தூக்கம். ஒருநாள் என்னோடு பக்கத்தில் இருந்த நண்பரைத் தொலைக்காட்சி அன்பர் ரகசியமாகப் பக்கத்து அறைக்குக் கூப்பிட்டார். நண்பர் ரொம்பவும் வெளிப்படையானவர். சும்மா இங்கெயே கொண்டு வாங்க என்றார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பிறகுதான் அது தோசை என்று தெரிந்தது. நண்பரின் வீடும் என் பக்கத்துத் தெரு தான் என்பதால் நிகழ்ச்சி முடிந்து சேர்ந்தே வந்தோம். அப்போது நண்பர் சொன்னார், எனக்கு இரவு உணவுக்கான சிற்றுண்டி வாங்கி வைத்து விடுங்கள் என்று சொல்லியிருந்தேன். அதற்குத்தான் ரகசியமாக அழைத்தார்கள். பண்பற்ற மனிதர்கள், பக்கத்தில் உள்ளவர் என்ன செய்வார் என்று கூட அறியாதவர்கள் என்றார்.

இப்போதெல்லாம் புதிய பார்வை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொள்கிறேன். ஆயிரம் ரூபாய் தருகிறார்கள். இனிமேல் 2000 ரூபாய் கேட்கலாம் என்று இருக்கிறேன். தர மறுப்பார்கள். எனவே புதிய பார்வையிலும் கலந்து கொள்ள மாட்டேன். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு ஹீரோ நடிகர் கலந்து கொள்கிறார் என்றால், அதுவும் நான் கலந்து கொள்வதும் ஒன்று அல்ல. அவர்களின் சம்பளம் கோடிகளில். நானோ இலவச சேவை செய்பவன். அவர்கள் இலவசமாகக் கலந்து கொள்ளலாம். என்னால் முடியாது. அம்பானி பட்டினி கிடந்தால் அதன் பெயர் விரதம். பிச்சைக்காரன் பட்டினி கிடந்தால் அதன் பெயர் பட்டினி.

எனவே வாசகர் யாரும் எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம். பத்திரிகைகளில் எழுத்துக்கு உரிய தொகை தாருங்கள். அல்லது குறைந்த பட்சமாக ஒரு வார்த்தைக்கு பத்துப் பைசா என்ற கணக்கிலாவது கொடுங்கள். ஓசியில் எழுத வைக்காதீர்கள். அப்புறம் நான் வாசகரிடம் பிச்சை கேட்டு, அதை என் சக எழுத்தாளர்கள் இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று ஏளனம் செய்வதைக் கேட்டுத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.

ஒரு பின்குறிப்பு: எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுப்பதில் தினமலர் மட்டுமே விதிவிலக்கு. 15 ஆண்டுகளுக்கு முன்பே 750 வார்த்தைகளுக்கு 5000 ரூ. சன்மானம் கொடுத்த பத்திரிகை அது. இதை ஏன் மற்ற பத்திரிகைகளும் தொலைக்காட்சி சேனல்களும் பின்பற்றுவதில்லை என்று தெரியவில்லை. எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுக்காமலும் எலும்புத் துண்டைப் போல் ஒரு வார்த்தைக்குப் பத்து காசு என்று கொடுத்துக் கொண்டும் இருக்கும் வரை எழுத்தாளன்கள் இளம் வயதில் செத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

இவ்வாறு சாருநிவேதிதா தமது இணைய பக்கத்தில் எழுதியுள்ளார்.

English summary
Writer Charunivedita wrote on Media's payment and his suicide attempt in his online.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X