For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை: 2016-ம் ஆண்டு முதல் பயணிக்கலாம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையின் மூன்றில் ஒரு பங்கு பணிகள் முடிந்துள்ளன.

2016-ம் ஆண்டு முதல் இந்த சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.14,600 கோடியில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் 45 கிலோ மீட்டர் நீளத்துக்கு இருவழித்தடங்களில் நடைபெற்று வருகின்றன.

மீனம்பாக்கம் டூ வண்ணாரப்பேட்டை

மீனம்பாக்கம் டூ வண்ணாரப்பேட்டை

முதல் வழித்தடம், வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரையில் அமைக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் டூ பரங்கிமலை

சென்ட்ரல் டூ பரங்கிமலை

இரண்டாவது வழித்தடம், சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரையிலும் செல்கிறது. இதற்காக 24 கிலோ மீட்டருக்கு (55 சதவீதம்) சுரங்கப் பாதையும், 21 கிலோ மீட்டருக்கு பறக்கும் பாதையும் அமைக்கப்படுகிறது.

10 ஆயிரம் தொழிலாளர்கள்

10 ஆயிரம் தொழிலாளர்கள்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 12 ராட்சத டனல் போரிங் மிஷின்களைக் கொண்டு நகரின் பல பகுதிகளில் உலகத் தரத்தில் சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு டனல்கள்

இரண்டு டனல்கள்

மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக இரண்டு டனல்கள் தனித்தனியாக அமைக்கப்படுகிறது. நேருபூங்கா - எழும்பூர் இடையேயும், ஷெனாய் நகர் - அண்ணாநகர் டவர் பூங்கா இடையேயும் 5.8 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப் பாதை முழுமையாக அமைக்கப்பட்டுவிட்டது. இந்த சுரங்கப் பாதை பணி முடிந்திருப்பதை காண்பிப்பதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள், பத்திரிகையாளர்களை சனிக்கிழமை அழைத்துச் சென்றனர்.

மினி ரயிலில் பயணம்

மினி ரயிலில் பயணம்

தரைமட்டத்தில் இருந்து 45 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் பணியாளர்கள் பயணம் செய்யக்கூடிய மினி ரயிலில் பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

சுரங்க பாதை அமைப்பு

சுரங்க பாதை அமைப்பு

ஷெனாய்நகர் - அண்ணாநகர் டவர் பூங்கா இடையே 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து திருமங்கலத்தை நோக்கி 2 டனல் போரிங் மிஷின்கள் சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கவுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன முதன்மைப் பொதுமேலாளர் சோமசுந்தரம், இயக்குனர் (திட்டம்) ராமநாதன், பொதுமேலாளர் வி.கே.சிங் ஆகியோர் தெரிவித்தனர்.

நடைபாதைகள் அமைப்பு

நடைபாதைகள் அமைப்பு

சுரங்கப் பாதை பணி முடிந்ததும். அதன் அடிப்பகுதியில் 2 அடி உயரத்துக்கு வலுவான கான்கிரீட் போட்டு, தண்டவாளம் அமைக்கப்படும். அந்த கான்கிரீட்டுக்கு கீழே கழிவுநீர் குழாய் செல்லும். ரயில் போக்குவரத்து தொடங்கிய பிறகு, திடீரென ரயில் பழுது, தீ விபத்து, ரயில் தடம் புரளுதல் போன்ற அவசர காலத்தில், ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி அந்த நடைபாதை வழியாகச் சென்று அடுத்த டனலில் உள்ள ரயிலில் ஏறிச் செல்ல சிறப்பு ஏற்பாடு செய்யப்படுகிறது. அதற்காக ஒவ்வொரு 250 மீட்டர் தூரத்திலும் இரண்டு டனல்களுக்கு இடையே ஒரு குறுக்குப்பாதை அமைக்கப்படுகிறது.

சுரங்க ரயில் நிலையம்

சுரங்க ரயில் நிலையம்

ஒவ்வொரு சுரங்க ரயில் நிலையமும், 250 மீட்டர் நீளத்திலும், 30 மீட்டர் அகலத்திலும் அமைக்கப்படுகிறது. இந்த ரயில் நிலையம், மேல்பகுதி, டிக்கெட் கொடுக்குமிடம், அடிப்பகுதி என 3 தளங்களுடன் அமையும். பயணிகளுக்கு எஸ்கலேட்டர், லிப்ட், மாடிப்படி ஆகிய வசதிகள் இருக்கும். ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்துக்கு ரயில் மாறிச்செல்ல வேண்டிய சுரங்க ரயில் நிலையம் (சென்ட்ரல், வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர்) மட்டும் 350 மீட்டர் நீளத்தில் இருக்கும்.

ஒரு நாளைக்கு 10 மீட்டர்

ஒரு நாளைக்கு 10 மீட்டர்

அசுர வேகத்தில் காற்றுவிசையை செலுத்தியபடி, டனல் போரிங் மிஷின் சுரங்கம் தோண்டுகிறது. ஒருநாளைக்கு சராசரியாக 10 மீட்டர் வரை தோண்டப்படுகிறது. ஆனால், மண்ணடியில் ஒரேநாளில் 54 மீட்டர் நீளத்துக்கு சுரங்கம் தோண்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

உடையும் கட்டர்கள்

உடையும் கட்டர்கள்

மாதத்துக்கு 15 முதல் 20 நாட்கள் வரைதான் டனல் போரிங் மிஷினை இயக்க முடியும். கடினமான பாறையில் சுரங்கம் தோண்டும்போது கட்டர்கள் உடைந்துவிடுகிறது. அவற்றை மாற்றித்தான் பணியைத் தொடர வேண்டியுள்ளது.

நீரும், பாறைகளும்…

நீரும், பாறைகளும்…

டெல்லி மெட்ரோவுடன் ஒப்பிடுகையில் சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை தோண்டுவது சவாலாக இருக்கிறது. டெல்லியில் நீர்மட்டம் மிகவும் கீழே இருக்கிறது. ஆனால், சென்னையில் நீர்மட்டம் ஓரளவு மேலே உள்ளது. அதோடு சில இடங்களில் மண், பாறை கலந்து இருக்கிறது. இவைதான் பணியை சவாலாக்கியுள்ளது.

ஒரு பெட்டி ரூ. 8 கோடி

ஒரு பெட்டி ரூ. 8 கோடி

மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் விலை ரூ.8 கோடி. ஒரு ரயிலில் 4 குளு, குளு பெட்டிகள் இருக்கும். தானியங்கி கதவுகள் இதன் சிறப்பம்சம்.

மெட்ரோ ரயில் நிலையங்கள்

மெட்ரோ ரயில் நிலையங்கள்

நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள மெட்ரோ ரயிலின் வேகம் மணிக்கு 90 கிலோ மீட்டர். ஆனால், அனுமதிக்கப்பட்ட வேகம் 80 கிலோ மீட்டர்.

சென்னையில் 1 முதல் 1.5 கிலோ மீட்டர் தொலைவிலேயே மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்படுவதால் சராசரியாக 34 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்க திட்டம்.

1276 பயணிகள்

1276 பயணிகள்

நான்கு பெட்டிகள் கொண்ட ஒரு மெட்டோ ரயிலில், உட்கார்ந்து கொண்டும், நின்று கொண்டும் அதிகபட்சம் 1276 பயணிகள் செல்லலாம்.

பறக்கும் மெட்ரோ ரயில்

பறக்கும் மெட்ரோ ரயில்

கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உள்ள பறக்கும்பாதையில் அக்டோபர் மாதத்திலும், சுரங்கப் பாதையில் 2016-ம் ஆண்டும் மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு முதல்

2016ம் ஆண்டு முதல்

2016-ம் ஆண்டு சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும்போது, நெரிசல் நேரத்தில் 3.5 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படும். வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையத்துக்கு நாற்பதே நிமிடங்களில் போய்ச் சேரமுடியும்.

திருவெற்றியூர் வரை

திருவெற்றியூர் வரை

வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர்- விம்கோநகர் வரை 9.051 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படுகிறது. இதற்கான செலவு ரூ.3,001 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்டமாக

இரண்டாம் கட்டமாக

மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில், மூலக்கடை திருமங்கலம், மூலக்கடை திருவான்மியூர், லஸ் பூந்தமல்லி (வழி ஐயப்பன்தாங்கல்) இடையே புதிய மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்துக்கான ஆய்வு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
The construction of an underground Metro station with two levels, the concourse and platform, is afoot at Nehru Park. Soon after this station becomes operational, the four entry/exit points of this station (near Kilpauk traffic police station, Sangam theatre complex, Sports Development Authority of Tamil Nadu and Arya Vaidya Sala) will serve as subways even for non-Metro users, says an official.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X