எனது பதவி பறிபோனால் உடனே ஆட்சி கவிழும்.. உங்கள் கதையை சொல்லவா.. எடப்பாடியிடம் எகிறும் விஜயபாஸ்கர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'நான் மட்டும்தானா குற்றவாளி...உங்கள் கதையைச் சொல்லவா?'என கூறி, எடப்பாடியை மிரட்டும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிவருவதாகவும், அவரை பதவி விலக வைக்க, கடுமையாகப் போராடி வருகிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'நான் பதவியில் இருந்து விலகினால், அடுத்த நொடியே ஆட்சி கவிழ்ந்துவிடும்' என தினகரனிடம் கொதிப்பைக் காட்டியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணம் வழங்கிய புகாரின் அடிப்படையில், கடந்த 7-ம் தேதி விஜயபாஸ்கர் வீட்டுக்குள் நுழைந்தது வருமான வரித்துறை.

எங்கே உள்ளார் விஜய பாஸ்கர்?

எங்கே உள்ளார் விஜய பாஸ்கர்?

இந்தச் சோதனையில் அவர் வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ‘ஆவணங்களுக்குக் கணக்கு காட்டுகிறேன்' எனப் பதில் அளித்தவர், தற்போது வரையில் எங்கு தங்கியிருக்கிறார் என்பதைக் கண்டறிய முடியவில்லை. மத்திய அரசுக்கும் கார்டனுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி. பொதுப் பணித்துறை அமைச்சராகவும் அவர் இருப்பதால், சேகர் ரெட்டி விவகாரத்தின் வளையம் அவரை நோக்கித் திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுப்பதற்காக, விஜயபாஸ்கரை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

டிடிவி தினகரன் சமாதானம்

டிடிவி தினகரன் சமாதானம்

இந்த முடிவை டிடிவி தினகரன் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து தன்னை சந்திக்க வந்த அமைச்சர்களிடம் பேசிய தினகரன், ‘ஆட்சி அதிகாரம் நம் கையில் தங்கியிருப்பதற்குக் காரணமே அவர்தான். எம்.எல்.ஏக்களுக்கு அவர் அளித்த உறுதிமொழிகளும் விநியோகமும்தான் ஆட்சியை சிரமமில்லாமல் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சொல்லப் போனால் எம்.எல்.ஏக்களில் பலர் அவர் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். கொஞ்ச நாள் வருமானவரித்துறையைக் காட்டி மிரட்டுவார்கள். அதன்பிறகு எல்லாம் கட்டுக்குள் வந்துவிடும். டெல்லியில் பேசியிருக்கிறேன். அமைதியாக இருங்கள்' என சமாதானம் பேசியிருக்கிறார் தினகரன்.

விஜயபாஸ்கர் ஒரு ஆல்ரவுண்டர்

விஜயபாஸ்கர் ஒரு ஆல்ரவுண்டர்

தினகரன் மௌனம் சாதிப்பதற்கும் முக்கியக் காரணம் இருக்கிறது. கடந்த ஆறு வருடங்களாக கார்டனில் நடந்த அனைத்து பரிவர்த்தனைகளையும் அறிந்தவர் விஜயபாஸ்கர். மணல் முதற்கொண்டு ஏராளமான தொழில்களில் இருந்து கார்டனின் தனிப்பட்ட நபர்களின் கணக்குகளுக்கு பெரும் தொகை கை மாறியிருக்கிறது. ‘கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்கிறார்' என பலமுறை சசிகலாவின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

ரகசியம் தெரிந்தவர்

ரகசியம் தெரிந்தவர்

‘உங்கள் கணக்கு வழக்குகளில் இன்னும் நேர்மையை எதிர்பார்க்கிறோம்' என அவரிடம் நேரடியாகக் கூறிய வரலாறுகளும் உண்டு. ஆனாலும் விஜயபாஸ்கர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதில்லை. அவருடைய சொந்த சமூகத்து மக்களே அவருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியபோதும், அவருடைய பதவியைக் காப்பாற்றினார் சசிகலா. சொல்லப் போனால் கார்டனின் அனைத்து ரகசியங்களையும் முழுமையாக அறிந்தவர் அவர்.

அப்பல்லோ மர்மங்கள்

அப்பல்லோ மர்மங்கள்

‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்' என வற்புறுத்தினால், தங்களை நோக்கி ஆயுதம் திரும்பும் என்ற கவலைதான் தினகரனை வாட்டி வதைக்கிறது" என விவரித்த அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து, அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த மருந்துகள், சிகிச்சை தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள், எம்பாமிங் நடவடிக்கைகள் என அனைத்தும் விஜயபாஸ்கரின் ஒப்புதலோடுதான் நடத்தப்பட்டன. அவருடைய மரணம் இந்தளவுக்கு மர்மமாக இருப்பதற்கும் அவர்தான் காரணம். தன்னிடம் இருந்து பதவி பறிக்கப்படுவதை அவர் விரும்பவில்லை.

எடப்பாடி மீது சீற்றம்

எடப்பாடி மீது சீற்றம்

‘நீங்கள் சொல்லித்தானே அனைத்தையும் செய்தேன். நான் மட்டும் ஏன் பலிகடாவாக்கப்பட வேண்டும்? எடப்பாடி மட்டும் நல்லவர் ஆகிவிட்டாரா? என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம்' எனக் கொதித்திருக்கிறார் விஜயபாஸ்கர். கார்டன் ரகசியங்களைக் கையில் வைத்திருப்பதால்தான், தினகரனும் அமைதியாக இருக்கிறார். அரசு பங்களாவில் இருந்தால், மீண்டும் சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறை வரும் என்பதை உணர்ந்துதான் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். நாளை மறுநாள் வருமான வரித்துறையின் அடுத்தகட்ட கேள்விகளை எதிர் கொள்ள இருக்கிறார் விஜயபாஸ்கர். ‘அதற்குள் அவரைப் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும்' என்ற நெருக்கடியில் இருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Clash between CM Edappadi Palanichami and minister Vijaya Bhaskar gets widen on the IT raid issues.
Please Wait while comments are loading...